சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பப் ஒன்றில் 22 வயது கல்லூரி மாணவர் சனிக்கிழமை இரவு மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த முகமது சுஹைல், ராமாபுரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் எம்பிஏ முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர் தனது கல்லூரி அருகே உள்ள விடுதியில் தங்கி இருந்தார்.
இந்நிலையில், கடந்த சனிக்கிழமை இரவு 9 மணியளவில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பப் ஒன்றுக்கு சுஹைல் தன் மூன்று பெண் தோழிகளுடன் சென்றுள்ளார்.
தலா ரூ.1,000 நுழைவுக் கட்டணமாக செலுத்திவிட்டு, அங்கு சாப்பிட்டுக்கொண்டும், நண்பர்களுடன் அரட்டையடித்துக்கொண்டும் இருந்தபோது, சுஹைலுக்கு திடீரென வியர்த்துக் கொட்டியது. உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக சுஹைல் தன் நண்பர்களிடம் கூறிய சிறிது நேரத்தில் அங்கேயே மயங்கி விழுந்தார்.
இதைப் பார்த்து பதறிப்போன சுஹைலின் நண்பர்கள் மற்றும் பப்பில் இருந்த ஊழியர்கள் உடனே அவரை மீட்டு அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு (KMCH) கொண்டு சென்றனர், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சுஹைல் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த தேனாம்பேட்டை போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் சந்தேக மரணம் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார் விரிவான விசாரணை மேற்கொண்டனர். சுஹைலுக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என மருத்துவர்கள் சந்தேகித்தனர். இருப்பினும் அவருக்கு முன்னதாக இதுபோல் எந்த பாதிப்பும் இருந்தது இல்லை என்று அவரது பெற்றோர் போலீசாரிடம் தெரிவித்தனர்.
சுஹைல் பப்பில் மது அருந்தவில்லை என அவரது நண்பர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர்.
இதுகுறித்து தேனாம்பேட்டை இன்ஸ்பெக்டர் செந்தில் முருகன் கூறுகையில், 'ரசாயன ஆய்வுக்கு மாதிரிகளை அனுப்பியுள்ளோம், அதன் முடிவு வந்த பிறகே அவர் இறந்ததற்கான சரியான காரணம் தெரியவரும்' என்றார். சுஹைலின் சரிவுக்கு வழிவகுத்த நிகழ்வுகள் குறித்த தகவலுக்காக பப்பில் இருந்து சிசிடிவி காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“