International Book Fair: சென்னையில் 46வது புத்தக கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை தொடங்கி வைத்தார்.
தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் சென்னை புத்தக கண்காட்சி இந்தாண்டு சர்வதேச அளவில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் 46வது சென்னை புத்தக கண்காட்சி சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் இன்று தொடங்கியுள்ளது.
1,000 அரங்குடன் ஒருங்கிணைக்கப்பட்டிருக்கும் இந்த புத்தக கண்காட்சி வருகின்ற 22 தேதி வரை நடைபெற உள்ளது. அதுவரை தினமும் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரை இந்த கண்காட்சிக்கு பொது மக்கள் வருகைத் தரலாம்.
கடந்த ஆண்டு புத்தக கண்காட்சியில் 800 அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தது, இந்த ஆண்டு கூடுதலாக 200 அரங்குகள் என மொத்தம் 1,000 அரங்குகள் அமைந்துள்ளது.
இன்று சென்னை புத்தக கண்காட்சி துவக்கி வைக்கும் நிகழ்ச்சியில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுடன், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் த. மனோ தங்கராஜ், நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், துணை மேயர் மு.மகேஷ் குமார், தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் தலைவர் திண்டுக்கல் லியோனி, தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் தலைவர் எஸ்.வயிரவன், செயலாளர் எஸ்.கே.முருகன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த புத்தக கண்காட்சியில் பல்வேறு தொகுப்புகளுடன், சிறுவர்களுக்கான புத்தகங்கள் அடங்கிய அரங்குகள் பிரத்யேகமாக அமைக்கப்பட்டு உள்ளன. அதேபோல் சிங்கப்பூர், இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் அரங்குகள் அமைத்துள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil