சென்னையில் சட்டவிதிகளுக்கு மாறாக செயல்பட்டு வந்த 5 தனியார் நட்சத்திர ஹோட்டல்களின் மதுபானக் கூடங்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை ஆணையர் நேற்று (ஆக.3) வெளியிட்ட அறிக்கையில், ’சென்னை மாநகரில் உள்ள ரட்டா சோமர்செட், தாஜ் கிளப் ஹவுஸ், விவிஏ ஹோட்டல்ஸ் (ரேடிசன் ப்ளு) ஹையத் ரீஜன்சி, தி பார்க் ஆகிய 5 தனியார் நட்சத்திர ஹோட்டல்களில் F.L.3 மதுபானக் கூடங்கள் அரசு உரிமம் பெற்று இயங்கி வந்தன.
அவற்றுள் சட்டவிதிகளுக்கு மாறாக வெளிநபர்களை மது அருந்த அனுமதித்துள்ளதாகவும், மேலும் மதுபானங்களை விநியோகம் செய்தல் முதலிய குற்றங்களில் ஈடுபட்டதாக தகவல் தெரியவந்தன.
இதனையடுத்து சென்னை மாநகரில் விதிமுறைகளுக்கு புறம்பாக செயல்பட்டு வந்த ஐந்து நட்சத்திர ஹோட்டல்களிலும் செயல்பட்டு வந்த மதுபானக் கூடங்களை நடத்துவதற்கு வழங்கப்பட்டிருந்த F.L.3 உரிமங்களைத் தற்காலிகமாக ரத்து செய்தும் அந்த மதுபானக் கூடங்களை உடனடியாக மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது’, என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், பெயர் வெளியிட விரும்பாத டாஸ்மாக் உயர் அதிகாரி ஒருவர், டிடி நெக்ஸ்ட் நாளிதழுக்கு அளித்த பேட்டியில், பிற மாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பெரும்பாலான மதுபான பிராண்டுகள் விதிகளின்படி தெரிவிக்கப்படவில்லை.
பாரில் அதிக விலை கொண்ட விஸ்கி, இறக்குமதி செய்யப்பட்ட வோட்கா மற்றும் பிராந்திகள் பயன்படுத்தப்பட்டதாக வழக்குகள் உள்ளன, ஆனால் அவை விற்பனை புத்தகத்தில் பதிவு செய்யப்படவில்லை, இதனால் டாஸ்மாக், மதுவிலக்கு மற்றும் கலால் துறைக்கு இழப்பு ஏற்பட்டது.
மேலும் நட்சத்திர ஹோட்டல்களுக்கு வழக்கமாக வரும் சிலர், கிடைக்காத பிராண்டட் மதுபானங்களை விரும்புகின்றனர். எனவே, வாடிக்கையாளர்கள் தாங்களாகவே மதுபானங்களை வாங்கி வந்து, இந்த ஹோட்டல்களின் பார்களில் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டனர்.
இந்த பிரச்சினை குறித்து அதிகளவிலான புகார்கள் இருந்தன, இந்த ஹோட்டல்களுக்கான உரிமங்களை ரத்து செய்யும் முடிவிற்கு முன்னர் இது ஆழமாக விவாதிக்கப்பட்டது.
பார் உரிமம் ரத்து செய்யப்பட்ட அனைத்து ஹோட்டல்களும் இந்த பிரச்சினை குறித்து விரிவான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன, என்று அந்த அதிகாரி கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“