சென்னை பொத்தேரியில் பிரபல தனியார் பல்கலைக்கழகம் ஒன்று இயங்கி வருகிறது. இந்தப் பல்கலைக்கழகத்தில் தமிழகம் மட்டுமல்லாது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களும் பயின்று வருகின்றனர். இந்த மாணவர்களில் பலர் காட்டாங்குளத்தூர், கூடுவாஞ்சேரி, பொத்தேரி ஆகிய பகுதியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்புகளில் தனியாக அறை எடுத்து தங்கி வருகின்றனர்.
இந்நிலையில், பொத்தேரி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் தங்கிப் பயிலும் மாணவர்களிடையே கஞ்சா, மெத்தபெட்டமையின் உள்ளிட்ட போதைப் பொருட்களின் புழக்கம் அதிகமாக இருப்பதாக போலீசாருக்கு அடிக்கடி புகார்கள் வந்துள்ளது. இதனையடுத்து, கூடுவாஞ்சேரி கூடுதல் ஆணையர் மகேஸ்வரி தலைமையில் தாம்பரம் துணை கமிஷனர் பவன் குமார் ரெட்டி அடங்கிய 500-க்கும் மேற்பட்ட போலீசார் இன்று காலை 6 மணி முதல் சுமார் 500-க்கும் மேற்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் வீடுகளில் அதிரடியாக திடீர் சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் 1/2 கிலோ கஞ்சா மற்றும் 6 கஞ்சா சாக்லேட், கஞ்சா ஆயில் 20 எம்.எல், பாங் 5, ஸ்மோக்கிங் பார்ட் 1, ஹூக்கா மெஷின் 7, ஹூக்கா பவுடர் 6 கிலோ உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாகவும், இது தொடர்பாக 30 மாணவர்களைப் பிடித்து தற்போது விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதனிடையே தற்போது இந்த வழக்கில் கல்லூரி மாணவர்கள் உட்பட 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“