10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழகம் முழுவதும் தொகுதி வாரியாக முதல் 3 இடங்களை பெற்ற மாணவ மாணவிகளை நடிகர் விஜய் இன்று நேரில் சந்திக்கிறார்.
நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் கடந்த உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு பல இடங்களில் வெற்றியும் பெற்றனர். அதனைத் தொடர்ந்து உலக பட்டினி தினத்தில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பொதுமக்களுக்கு ஒருவேளை மதிய உணவு வழங்கப்பட்டது.
அடுத்தக்கட்டமாக இன்று (ஜூன் 17) 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழகம் முழுவதும் தொகுதி வாரியாக முதல் 3 இடங்களை பெற்ற மாணவ மாணவிகளை நடிகர் விஜய் நேரில் சந்திக்க உள்ளார்.
சென்னை நீலாங்கரையில் உள்ள ஆர்.கே. கன்வென்சன் சென்டரில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. மாணவ, மாணவிகளுக்கு விஜய் பெற்றோர்கள் முன்னிலையில் சான்றிதழ்கள், ஊக்கத்தொகை வழங்கி கௌரவப்படுத்த உள்ளார்.
இந்த விழாவில் சுமார் 1500 மாணவ, மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் கலந்து கொள்கின்றனர்.
இதையொட்டி, மாணவர்கள் அனைவரும் பெற்றோர்களுடன் நேற்று சென்னை அருகே வந்து தங்க வைக்கப்பட்ட நிலையில், இன்று காலை உணவை முடித்துக் கொண்டு வண்டலூர், கேளம்பாக்கம் வழியாக வந்து நீலாங்கரையை சென்றடையும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
விஜய் மக்கள் மன்றத்தில் மீனவர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, தொழிலாளர் அணி உள்ளிட்ட 10 அணிகள் உள்ளன. சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை, அண்ணல் அம்பேத்கர் ஆகியோரின் பிறந்தநாளன்று, அவர்களின் சிலைக்கு விஜய் மக்கள் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். எனவே நடிகர் விஜய்யின் விஜய் மக்கள் இயக்கம் விரைவில் அரசியல் இயக்கமாக மாறும் என்ற எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”