மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வருவதன் காரணமாக, சென்னையில் அடையாறு - இந்திரா நகர் பகுதியில் பிப்ரவரி 18-ம் தேதி முதல் ஒரு வாரத்திற்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக போக்குவரத்துக் காவல்துறை அறிவித்துள்ளது.
சென்னையில், மெட்ரோ பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதனால், சென்னையில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
இந்த நிலையில், சென்னை அடையாறு - இந்திரா நகர் பகுதியில் பிப்ரவரி 18-ம் தேதி முதல் ஒருவாரத்திற்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக போக்குவரத்துக் காவல்துறை அறிவித்துள்ளது.
இது தொடர்பாக போக்குவரத்துக் காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மெட்ரோ ரயில் கட்டுமான பணிகள் அடையாறு இந்திரா நகரில் நடைபெற உள்ளது. இப்பணிகளை கருத்தில் கொண்டு இந்திரா நகரில் ஞாயிற்றுக்கிழமை (18.02.2024) முதல் ஒரு வார காலத்துக்கு போக்குவரத்து மாற்றங்கள் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்படும்.
எம்.ஜி.சாலை சந்திப்பில் இருந்து இந்திரா நகர் 2-வது அவென்யூ வழியாக ஓ.எம்.ஆர். நோக்கி வரும் வாகனங்கள் தடை செய்யப்பட்டு 2-வது அவென்யூ, 3-வது பிரதான சாலை, 21-வது குறுக்கு தெரு, இந்திரா நகர் 3-வது அவென்யூ வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம். அதேபோல, கலாஷேத்ராவில் இருந்து ஓ.எம்.ஆர். நோக்கி வரும் வாகனங்கள் வழக்கம் போல் இயங்கும்.
கே.பி.என்-னில் இருந்து ஓ.எம்.ஆர். நோக்கி வரும் வாகனங்கள் வழக்கம் போல் செல்லலாம். ஓ.எம்.ஆரில் இருந்து 2-வது அவென்யூ வழியாக எல்.பி.சாலையை நோக்கி வரும் வாகனங்கள் தடை செய்யப்பட்டுள்ளன.
2-வது அவென்யூ, 3-வது பிரதான சாலை, இந்திரா நகர் முதலாவது பிரதான சாலை வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம். கலாஷேத்ராவில் இருந்து இந்திரா நகர் 3-வது அவென்யூ வழியாக எல்.பி. சாலை நோக்கி வரும் வாகனங்கள் இந்திரா நகர் 4-வது அவென்யூ, 3-வது பிரதான சாலை, இந்திரா நகர் 2-வது அவென்யூ வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம். ஓ.எம்.ஆர். மற்றும் கலாஷேத்ராவில் இருந்து கே.பி.என்.சந்திப்பு நோக்கி வரும் வாகனங்கள் வழக்கம் போல் செல்லலாம்.” என்று போக்குவரத்துக் காவல்துறை அறிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“