நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. புத்தாடை உடுத்தி, உறவினர்களுக்கு இனிப்புகளை வழங்கி மக்கள் தீபாவளியை கொண்டாடி வருகின்றனர். மேலும், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை காலை முதலே பட்டாசுகளை வெடித்து கொண்டாடி வருகின்றனர். இதனால், சென்னை மாநகரம் காலையிலேயே காலையிலேயே புகைமூட்டமாக மாறியது.
இந்நிலையில், சென்னையில் தொடர்ந்து இன்று காற்று மாசு அதிகரித்த வண்ணம் உள்ளது. சென்னையில் 3 இடங்களில் காற்றின் தரக்குறியீடு மோசமடைந்துள்ளது. சென்னையில் எந்த ஒரு பகுதியிலும் காற்றின் தரம் நன்றாக இல்லை என மத்திய மாசுக்கட்டுப்பாடு வாரியம் தெரிவித்துள்ளது.
பொதுவாக காற்றின் தரம் AQI அளவுகளில் 4 வகையாக மதிப்பிடப்படுகிறது. "மோசமானது" என்றால் AQI 201-300, "மிகவும் மோசமானது" என்றால் AQI 301-400, "கடுமையானது" என்றால் AQI 401-450, "கடுமையாகத் தீவிரமானது" என்றால் AQI 450க்கு மேல் என்பது காற்றின் தரத்தின் அளவுகோலாகும்.
இந்தநிலையில், சென்னையைப் பொருத்தவரை காலை 7 மணி நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் காற்று மாசுபாட்டின் அளவு 190 ஆக தரக்குறியீட்டில் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக மணலியில் 254, ஆலந்தூரில் 248, அரும்பாக்கத்தில் 210, பெருங்குடியில் 201 என்ற அளவில் காற்றின் தரக்குறியீடு மோசம் அடைந்துள்ளது. கொடுங்கையூரில் 159, மணலியில் 181, ராயபுரத்தில் 164, வேளச்சேரியில் 163 என மிதமாக காற்று மாசு அதிகரித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“