Chennai Air Show 2024: இந்திய விமானப்படையின் 92-வது ஆண்டு விழாவைக் கொண்டாடும் வகையில், அக்டோபர் 6-ம் தேதி சென்னை மெரினா கடற்கரையில் பிரமாண்ட விமானப் படை சாகச நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த விமான கண்காட்சியில் 72 போர் விமானங்கள் பங்கேற்கின்றன. இதற்கு பொது மக்களுக்கு இலவச அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 15 லட்சம் பார்வையாளர்கள் பார்ப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், விழாவை முன்னிட்டு கடந்த செவ்வாய்க்கிழமை ஒத்திகை நடைபெற்றது. வானில் சாகசம் நிகழ்த்திய விமானங்களை சென்னைவாசிகள் கண்டு பிரமிப்படைந்தனர்.
தாம்பரம் விமானப்படை நிலையத்தின் விமானப்படை அதிகாரி ரதீஷ் குமார் கூறுகையில், மெரினா கடற்கரையில் நடத்தப்படும் சாகச நிகழ்ச்சியில் தேஜாஸ் மற்றும் சுகோய் சு-30 எம்.கே.ஐ போன்ற போர் விமானங்கள் உட்பட 72 விமானங்கள் இடம்பெறும்.
முக்கிய ஏரோபாட்டிக் நிகழ்ச்சிகள் சூர்யா கிரண் ஏரோபாட்டிக் குழுவினரால் நடத்தப்படும். இந்த கண்காட்சியை மெரினா முதல் கோவளம் பீச் வரை உள்ளவர்கள் காண முடியும். இந்த விமான கண்காட்சியின் கருப்பொருள் "பாரதிய வாயு சேனா - சக்ஷம், சஷாக்த், ஆத்மநிர்பர்" ஆகும்.
தேஜாஸ் மற்றும் சுகோய் சு-30 MKI போர் விமானங்கள் மற்றும் சாரங் குழுவின் ஹெலிகாப்டர்கள் உட்பட பல்வேறு IAF விமானங்களும் இடம்பெறுகின்றன என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“