அருண் ஜனார்த்தனன்
சென்னை மெரினா கடற்கரையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு (அக்டோபர் 06) நடந்த இந்தியா விமானப்படையின் ஏர் ஷோவுக்கு வரலாறு காணாத வகையில் மக்கள் கூட்டம் கூடிய நிலையில், போதிய திட்டமிடல் இல்லாததால், கூட்ட நெரிசலில் சிக்கி 5 பேர் மரணமடைந்தர். மேலும் 100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
Read In English: Behind Chennai air show deaths, cocktail of social media buzz and poor crowd control
இந்திய விமானப்படையின் (IAF) 92வது ஆண்டு ஆண்டுவிழாவை நினைவுகூரும் வகையில் சென்னை மெரினா கடற்கரையில், விமானப்படையின் ஏர் ஷோ நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்ய்பபட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், ஆளுனர் ஆர்.என்.ரவி, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜநாத் சிங் ஆகியோர் பங்கேற்றிருந்தனர். மேலும் இந்த ஏர் ஷோ நிகழ்ச்சியை கண்டுகளிக்க மக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.
இதன் காரணமாக இந்த ஏர் ஷோ விமான கண்காட்சியைக் காண அண்டை மாவட்டங்களில் இருந்து பலர் உட்பட சுமார் 12-13 லட்சம் பேர் குவிந்தனர். பெரும் கூட்டம் நகரத்தின் உள்கட்டமைப்பை மூழ்கடித்த நிலையில், பெரும் சோகத்திற்கு காரணமாகவும் அமைந்துள்ளது. இது குறித்து நேற்று (அக்டோபர் 7) பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எதிர்காலத்தில் பெரிய அளவிலான நிகழ்வுகளுக்கு சிறந்த ஏற்பாடுகளை செய்து தருவோம் என்று உறுதியளித்தார்.
கூட்ட நெரிசலை தடுக்கும் வகையில், நெரிசலைத் தடுக்கும் திறம்பட்ட திட்டமிடல் இல்லை என்று கூறினாலும், வெளியில் செல்லும் உத்தி இல்லாதது மற்றும் மக்கள் அவசர அவசரமாக இடத்தை விட்டு வெளியேறியதால் குழப்பம் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து வெளியான அறிக்கையில், "நெரிசல்கள் தடுக்கப்பட்டாலும், மக்கள் தங்கள் வாகனங்கள. இருக்கும் இடத்திற்கு செல்வதற்கும், பொதுப் போக்குவரத்தைப் பெறுவதற்கும் கடுமையாக சிரமங்களை எதிர்கொண்டனர்" என்று தெரிவித்துள்ளனர்.
இந்த நிகழ்வுக்கு பொறுப்பேற்றுக்கொண்ட முதல்வர் ஸ்டாலின், அடுத்த முறை இதுபோன்ற நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்படும் போது இந்த பிரச்சினைகள் குறித்து கூடுதல் கவனம் செலுத்தப்படும் என்று கூறியுள்ளார். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். தேவையான நிர்வாக ஒத்துழைப்பைத் தாண்டி அரசு ஏற்பாடுகளைச் செய்துள்ளதாகவும், காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள், பெரு சென்னை மாநகராட்சி, சுகாதாரத் துறை ஆகியவை கூட்டத்தை சிறப்பாகச் செய்ய ஒருங்கிணைத்துள்ளதாகவும் ஸ்டாலின் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
என்ன தவறு நடந்தது?
இந்த சோகமான சம்பவம் குறித்து நிகழ்ச்சி அமைப்பாளர்களும் உள்ளூர் அதிகாரிகளும் இரண்டு காரணங்களை மேற்கோள் காட்டுகின்றனர். சமூக ஊடகங்களில் பெரும் உற்சாகம் பெரும் எண்ணிக்கையை கொண்டு வந்தது, மற்றும் கூட்டத்தை சிதறடிப்பது தொடர்பான மோசமான திட்டங்கள் என்று கூறியுள்ளனர். 21 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் நடத்தப்பட்ட முதல் விமானக் கண்காட்சி இதுதான். இந்த நிகழ்ச்சியில், ஆரம்பத்தில் சுமார் 11 லட்சம் வருவார்கள் என்று அதிகாரிகள் எதிர்பார்த்திருந்தனர்.
ஆனால் எதிர்பார்த்ததை விட அதிகமாக இருந்தது, சுமார் 12-13 லட்சம் பேர் ரயில், மெட்ரோ, பேருந்துகள் மற்றும் தனியார் வாகனங்கள் மூலம் வந்தடைந்தனர். காலை 11.30 மணி முதல் மதியம் 1 மணி வரை நிகழ்ச்சி நடைபெற்றது. அதன்பிறகு, மொத்த கூட்டமும் ஒரே நேரத்தில் இடத்தை விட்டு வெளியேற முயன்றதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இது குறித்து இந்திய விமானப்படை மற்றும் மாநில அரசாங்கத்தின் அதிகாரிகள் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம், கூறுகையில், கூட்டத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் நடைமுறையில் இருந்தபோதும், பெரிய அளவில் மக்கள் வருவார்கள் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. இந்த நிகழ்விற்காக 40க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள், பல மருத்துவக் குழுக்கள், மருத்துவர்கள் மற்றும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேலும் அனைத்து ஏஜென்சிகளுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே பொருத்தமான தொடர்பு இருந்தது, ஆனால் கூட்டத்தை கலைப்பதற்கான சரியான திட்டத்தை நாங்கள் வைத்திருக்கவில்லை என்று அவர் கூறியுள்ளார். இது குறித்து இந்திய விமானப்படையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், தடுப்புகள் மற்றும் பிற கூட்ட மேலாண்மை முயற்சிகள் மற்றும் போக்குவரத்து திசைதிருப்பல்கள் அதிகம் நெரிசல் ஏற்படுவதை தடுத்தன, ஆனால் ஒரே நேரத்தில் வெளியேறும் மக்களின் அவசரம் தான் அனைத்து திட்டமிடலில் உள்ள குறைபாடுகளை அம்பலப்படுத்தியது.
மக்கள் அனைவரும் ஒரே நேரத்தில் வெளியேறும்போது நாங்கள் மற்றும் அதிகாரிகள் உட்பட அனைவரும் தோல்வியடைந்தோம். இந்த மாதரியான நிகழ்ச்சிகளில் குழந்தைகள், பெண்கள், முதியோர்களுக்கு முன்னுரிமைப் பாதை இருந்திருக்க வேண்டும். அத்தகைய திட்டமிடல் இல்லாமை, நிகழ்ச்சி முடிந்த உடனேயே இடத்தை விட்டு வெளியேறும் பொதுமக்களின் அவசர நடத்தையுடன் சேர்ந்து, சிக்கலை உருவாக்கியது, என்று கூறியுள்ளார்.
அதேபோல் நகரின் மாஸ் ரேபிட் டிரான்ஸ்போர்ட் சிஸ்டம் (எம்ஆர்டிஎஸ்), நகருக்குள் உள்ள நகர்ப்புற ரயில் சேவைகள், பெரும் மக்கள் கூட்டம் இருந்தபோதிலும் சேவைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவில்லை. வேளச்சேரி எம்ஆர்டிஎஸ் நிலையத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் காத்திருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. பல துறைகளின் கூட்டு தோல்விகள் கொடுத்த விளைவுதான் இந்த பேரழவிற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 5 பேர் மரணமடைந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் வெப்பச் சோர்வு, நீர்ச்சத்து குறைபாடு மற்றும் மருத்துவப் பிரச்சனைகள் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆம்புலன்ஸ்கள் கிரிட்லாக்கில் சிக்கிக்கொண்டன, மேலும் பலர் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கடுமையான வெப்பத்தில் சிக்கித் தவித்ததாக தெரிவித்தனர். இருப்பினும், கிரேட்டர் சென்னை மாநகராட்சி மேயர் ஆர் பிரியா தங்கள் செய்த ஏற்பாடுகளை பாதுகாக்கும் வகையில்,“வெப்பம் மற்றும் நீரிழப்பு காரணமாக மரணங்கள் நிகழ்ந்தன. நாங்கள் தண்ணீர், ஆம்புலன்ஸ் மற்றும் தடுப்புகளை ஏற்பாடு செய்துள்ளோம்,” என்று கூறியுள்ளார்.
அரசியல் வீழ்ச்சி
இது குறித்து அதிமுக தலைவரும், மாநில எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி, தி.மு.க அரசின் நிர்வாகத்தை குறிவைத்து, சோகத்திற்கு அரசாங்கத்தையே பொறுப்பாக்கியுள்ளார். சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஸ்டாலின் அழைப்பின் பேரில் விமான கண்காட்சியை காண லட்சக்கணக்கான மக்கள் மெரினா கடற்கரையில் குவிந்தனர். ஆனால், அடிப்படை வசதிகள் செய்யப்படாததால், கடும் நெரிசலில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர். இது அரசின் மோசமான நிர்வாகத்தை காட்டுகிறது என்று கூறியுள்ளார்.
மேலும், கூட்டத்தை நிர்வகிப்பதில் தொலைநோக்கு பார்வை இல்லாததை விமர்சித்த பழனிசாமி, மற்ற மாநிலங்கள் விமானக் கண்காட்சியை அசம்பாவிதம் இல்லாமல் வெற்றிகரமாக நடத்தியுள்ளன என்று குறிப்பிட்டார். அதேபோல் நடிகரும், அரசியல்வாதியுமான விஜய் சமூக ஊடகங்களில் தனது இரங்கலைத் தெரிவித்தார், மேலும் எதிர்கால நிகழ்வுகளில் மேம்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் தேவை என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், விமானக் கண்காட்சியின் போது 5 பேர் உயிரிழந்த சம்பவம் வேதனையளிக்கிறது. அவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அதிக மக்கள் கூடும் இடங்களில் அடிப்படை மற்றும் அத்தியாவசிய தேவைகளை திறம்பட செயல்படுத்துவதில் தமிழக அரசு கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
ஏர் ஷோ நிகழ்ச்சியின்போது மெரினா கடற்கரையில் பணியில் இருந்த ஒரு மூத்த போலீஸ் அதிகாரி, மெரினா கடற்கரைக்கு அருகில் 40,000 பேர் இருக்கும் சேப்பாக்கம் மைதானத்தில் ஒரு உயர்மட்ட கிரிக்கெட் போட்டிக்குப் பிறகு, மைதானத்தை சுத்தம் செய்ய பொதுவாக ஒரு மணி நேரம் ஆகும் என்று சுட்டிக்காட்டினார். ஆனால், நேற்று முன்தினம் (அக்டோபர் 6) மெரினாவில் 13 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் இருந்தோம். திட்டமிடல் மற்றும் தடுப்புகள் நெரிசலைத் தடுத்தன, ஆனால் வெளியேறும் உத்தி இல்லாதது சோகத்திற்கு காரணமாக அமைந்தது என்று அதிகாரி கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.