Advertisment

சென்னை மெரினா மரணம்: உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு

சென்னையில் நடந்த விமானப்படையின் வான்வழி சாகச நிகழ்ச்சியைக் காணவந்து உயிரிழந்த 5 நபர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 5 லட்சம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Chennai air show deaths TN CM Stalin announces Solatium  of 5 lakh Tamil News

சென்னையில் நடந்த விமானப்படையின் வான்வழி சாகச நிகழ்ச்சியைக் காணவந்த 5 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய விமானப்படையின் 92-வது ஆண்டு நிறைவு விழாவையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விமான சாகச காட்சி நடைபெற்றது. இந்த சாகச நிகழ்ச்சியை கண்டு களிக்க லட்சக்கணக்கான மக்கள் பெருந்திரளாக திரண்டனர். 15 லட்சத்திற்கு மேற்பட்ட பொதுமக்கள் இந்த நிகழ்ச்சியை நேரில் வந்து பார்த்து சென்றதாக கூறப்படுகிறது. 

Advertisment

இந்நிலையில், மெரினா கடற்கரையில் ஏராளமான மக்கள் திரண்டதால் பலரும் கூட்ட நெரிசலில் சிக்கித் தவித்துள்ளார்கள். வெப்பம் ஒருபுறம் தாக்க, குடிக்க தண்ணீர் கூட இல்லாமல் பலரும் தாவித்துள்ளனர். இதனால், சிலர் அங்கேயே மயக்கமடைந்துள்ளனர். கூட்ட நெரிசலில் சிக்கிவர்களில் 90-க்கும் பல்வேறு காரணங்களால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 5 பேர் உயிரிழந்துள்ளனர். 

இந்த நிலையில், சென்னையில் நடந்த விமானப்படையின் வான்வழி சாகச நிகழ்ச்சியைக் காணவந்து உயிரிழந்த 5 நபர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 5 லட்சம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நேற்று (06.10.2024) சென்னையில் இந்திய விமானப்படையினரால் சாகச நிகழ்ச்சி சென்னை மெரினா கடற்கரையில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சிக்குத் தேவையான நிர்வாக ரீதியிலான ஒத்துழைப்பையும், வசதிகளையும் செய்துகொடுப்பதற்காக இந்திய விமானப்படை கோரியிருந்ததற்கு மேலாகவே ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதற்கென தமிழ்நாடு அரசின் காவல்துறை, தீயணைப்புத்துறை, சென்னை பெருநகர மாநகராட்சி, மற்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை ஆகிய முக்கியத் துறைகள் ஒருங்கிணைந்து சிறந்ததொரு நிகழ்ச்சியை சென்னை மக்களுக்கு வழங்குவதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அதனால் கூட்ட நெரிசல் ஏற்படுவது தவிர்க்கப்பட்டது.

இருப்பினும் எதிர்பார்த்த எண்ணிக்கையைவிட மிகமிக அதிக அளிவில் மக்கள் வந்திருந்ததால், நிகழ்ச்சி முடிந்த பின்னர் திரும்பச் செல்லும்போது மக்கள் தங்கள் வாகனங்களை அடைவதிலும், பொதுப்போக்குவரத்தைப் பெறுவதிலும் மிகுந்த சிரமம் அடைந்தனர் என்பதை அறிந்தேன். அடுத்தமுறை இதுபோன்ற பெரிய நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும்போது இவற்றில் கூடுதல் கவனமும் ஏற்பாடுகளும் செய்யப்படும்.

இந்நிகழ்வில், கடும் வெயில் மற்றும் பல்வேறு மருத்துவக் காரணங்களால் ஐந்து விலைமதிப்பற்ற உயிரிழப்புகள் எற்பட்டன என்பதை அறிந்து மிகுந்த மன வேதனையும், வருத்தமும் அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இது ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும், அவர்களது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்களுக்கு இத்தருணத்தில் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்." என்று அதில் தெரிவித்துள்ளார். 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Chennai Marina Beach Cm Mk Stalin
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment