எரிபொருள் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், அடுத்த இரண்டு வாரங்களுக்கு சென்னையில் இருந்து விமானத்தில் பறக்க ஆசைப்படுபவர்கள், அதிக கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.
சென்னையிலிருந்து ஏறக்குறைய அனைத்து நகரங்களுக்கு செல்லும் விமானங்களின் கட்டணமும் உயர்ந்துள்ளது. உதாரணமாக, சென்னையிலிருந்து டெல்லி செல்ல விமான கட்டணம் தற்போது 8 ஆயிரமாக உள்ளது. வரும் நாள்களில், 11 ஆயிரம் வரை செல்லக்கூடும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.
சென்னையிலிருந்து பெங்களூர் செல்ல முன்பு 1500 ரூபாய் மட்டுமே ஆன நிலையில், தற்போது ரூ4500 வரை கட்டணம் செல்கிறது. அதேபோல், ஹைதராபாத், மும்பை போன்ற நகரங்களுக்கு செல்ல, விமான கட்டணம் 6 ஆயிரம் முதல் 7 ஆயிரம் வரை இருக்கிறது.
இதுகுறித்து பேசிய இந்திய டிராவல் ஏஜெண்ட்ஸ் அசோசியேஷன் எஸ்.ஜெயசேகரன், "விமான கட்டணங்களின் திடீர் உயர்வானது, கடைசி நிமிடத்தில் விமான பயணங்களை மேற்கொள்ளும் நடுத்தர குழுவை சேர்ந்த வணிகர்களுக்கும், பயணிகளுக்கும் தற்போது சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. சரியான விமான கட்டணத்தை பெற, தற்போது மக்கள் முன்கூட்டியே பயணத்தை திட்டமிட்டு டிக்கெட் புக் செய்ய வேண்டும் என்றார்.
விமானங்களில் எரிபொருளாக ஏடிஎஃப் பயன்படுத்தப்படுகிறது. விமான நிறுவனங்கள் 40 சதவீதம் வரை எரிபொருளுக்காக செலவிடுகிறது. தற்போது, திடீரென 18 சதவீதம் உயர்ந்திருப்பதால், விமான கட்டணங்கள் புதிய உச்சத்தை எட்டக்கூடும்.
விமான நிறுவனங்கள் இந்த திடீர் எரிபொருள் விலை உயர்வை எதிர்கொள்ளுக்கூடிய சூழ்நிலையில் இல்லை என்றும், சமீப நாள்களாக விமான போக்குவரத்து மீண்டும் பழைய நிலையை எட்டியுள்ள நிலையில், புதிய விலை உயர்வு பலரின் பயணங்களை நிறுத்திவைக்கும் எனவும் கூறப்படுகிறது.
நாட்டிலேயே கொல்கத்தாவிற்கு அடுத்தபடியாக சென்னையில் ஏடிஎஃப் விலை ஒரு கிலோ லிட்டர் ரூ1.14 லட்சமாக உள்ளது. டெல்லி மற்றும் மும்பையில் இதன் விலை முறையே ரூ1.10 லட்சம் மற்றும் ரூ1.09 லட்சம் ஆகும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil