சிங்கப்பூரில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணியர் விமானம் புதன்கிழமை அதிகாலை சென்னை விமான நிலையம் வந்தது. அதில் வந்த பயணிகள் அனைவரும் அனைத்து சோதனைகளையும் முடித்துக் கொண்டு விமான நிலையத்திற்கு வெளியே சென்று கொண்டிருந்தனர்.
அப்போது, விமான நிலைய வருகை பகுதிக்கு வெளியே ஒரு பயணியும், வெளியே காத்திருந்த நபரும் திடீரென வாக்குவாதம் செய்து கைகலப்பில் ஈடுபட்டனர்.
அவர்களை, விமான நிலைய காவல் நிலைய போலீசார் பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அவர்கள் கடலூர் மாவட்டம் கஞ்சிரன்குளத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் (23), சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த கலீல் அலி (34) என்பது தெரிய வந்தது.
கோவிந்தராஜூவிடம் சிங்கப்பூரில் உள்ள ஒருவர், 45 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 700 கிராம் தங்கத்தை சட்ட விரோதமாக கொடுத்து, அதை கலீல் அலியிடன் ஒப்படைக்கும்படி கூறியுள்ளார்.
இதையடுத்து, கோவிந்தராஜு புதன்கிழமை சென்னை திரும்பியபோது, கலீல் அலி அவரை வருகை முனையத்திற்கு வெளியே சந்தித்து தங்கத்தை கேட்டார். அப்போது கோவிந்தராஜு, 'சுங்கத்துறை அதிகாரிகளிடம் பிடிபடாமல் இருக்க, விமான நிலைய கழிப்பறையில் தங்கத்தை வைத்து விட்டு வந்து விட்டேன்' என்று, கூறியுள்ளார். ஆனால் கலீல் அவரை நம்பவில்லை,
இதனால், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, கைகலப்பில் ஈடுபட்டது தெரியவந்தது.
இருப்பினும், விசாரணையில், கலீல் அலியை சந்திப்பதற்கு முன்பு தங்கத்தை தனது நண்பரிடம் கொடுத்ததை கோவிந்தராஜூ ஒப்புக்கொண்டார். போலீசார் கோவிந்தராஜின் நண்பரை கண்டுபிடித்து தங்கத்தை மீட்டனர். மேலும் விசாரணைக்காக கோவிந்தராஜு, கலீல் அலி ஆகியோர் சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர், என போலீசார் தெரிவித்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“