சென்னை விமானநிலையத்தில் பயன்பாட்டில் உள்ள செக் இன் போர்டுகள், புறப்படும் விமானங்களின் விபரம் உள்ளிட்ட தகவல் பலகைகள் சர்வதேச தரத்தில் மாற்றியமைக்கப்பட்டு நவீனமயம் ஆக்கப்பட உள்ளது.
இதுதொடர்பாக, ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆப் இந்தியாவின் உயரதிகாரி கூறியதாவது, சென்னை விமான நிலையத்தில் உள்ள தகவல் பலகைகள், 7 ஆண்டுகளுக்கு முன் மாற்றப்பட்டவை. விமானங்கள் புறப்பாடு மற்றும் வருகை குறித்த விபரங்கள் அடங்கிய பலகையை, வேறொரு இடத்திற்கு மாற்றியமைக்க வேண்டும் என்ற பயணிகளின் தொடர் கோரிக்கையை தொடர்ந்து புதிய தகவல் பலகைகள் பொருத்தும் பணி விரைவில் துவங்கும். இதற்காக, வல்லுனர்களுடன் ஆலோசனைகள் நடத்தப்பட்டு அவர்கள் விமானநிலையத்தில் ஆய்வினை நிறைவு செய்துள்ளனர். டொமஸ்டிக் மற்றும் இன்டர்நேசனல் டெர்மினல்களில் அவர்கள் பரிந்துரைக்கும் இடங்களில் புதிய தகவல் பலகைககள் பொருத்தப்படும். இந்த புதிய தகவல் பலகைகள், விமான பயணிகளுக்கு புதுவித உன்னத அனுபவத்தை வழங்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
மின்னொளியில் ஒளிரக்கூடிய இந்த தகவல் பலகைகள், டெர்மினல்களில் எங்கிருந்து பார்த்தாலும் அதிலுள்ள விபரங்கள் தெளிவாக தெரியுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்தில் கன்வேயர் பெல்ட்கள் அமைந்துள்ள இடம், அதன் எண், போர்டிங் கேட்கள், டெர்மினலின் வெளிப்புற பகுதி உள்ளிட்டவைகளை பயணிகள் எளிதாக அடையாளம் தெரிந்துகொள்ள இந்த புதிய மின்னொளி தகவல் பலகைகள் பேருதவியாக இருக்கும்.
விமானநிலையத்தின் வெளிப்புறத்தில் உள்ள தகவல் பலகை தற்போது தான் மாற்றப்பட்டுள்ளது. அதில் உள்ள விபரங்கள் எளிதில் தெரியும்விதத்தில் அதில் உள்ள எழுத்துக்கள் பெரியதாகவும், அதிக ஒளிர்வு தன்மை கொண்டதாகவும் அமைக்கப்பட்டுள்ளது.
நாட்டில் உள்ள தனியார் விமானநிலையங்களில் இதுபோன்ற மேம்பாடு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆப் இந்தியா, சென்னை. கோல்கட்டா, கோவை, திருவனந்தபுரம், புவனேஸ்வர் மற்றும் புனே நகரங்களில் உள்ள விமானநிலையங்களில் நவீனமயமாக்கத்திற்கு தேவையான நடவடிக்கைகளை துவக்கியுள்ளதாக அவர் கூறினார்.