நீண்ட காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், சென்னை விமான நிலையத்தில் டிஜியாத்ரா வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட டிஜியாத்ரா, பயணிகளுக்கு சிரமமில்லாத நடைமுறையை வழங்குவதை நோக்கமாக கொண்டுள்ளது.
விமான பயணத்திற்கு முன், ப்ரீ-போர்டிங் செயல்முறைக்கு இந்த செயலியை பயன்படுத்தி நீண்ட வரிசையில் காத்திருப்பதை தவிர்க்கலாம். இந்த செயலியை உங்கள் போனில் டவுன்லோடு செய்து, செயலிக்குக்குள் சென்று மொபைல் நம்பர், உங்கள் பெயர் கொடுத்து செல்ஃபி எடுக்கவும். அதன்பின் ஆதார், நீங்கள் செல்லும் விமானத்தின் விவரங்கள் கொடுத்து ஐ.டி கிரியேட் செய்யவும்.
பின் விமான நிலையம் சென்றதும் இ-கேட்-ல் உள்ள கேமராவில் புகைப்படம் எடுக்கவும். அதோடு செயலியில் கிரியேட் செய்யப்பட்ட க்யூ-ஆர் கோட் இங்கு ஸ்கேன் செய்யவும். விமான நிலையம் சென்றடைந்ததும், பல்வேறு சோதனை இடங்களில் ஃபேஸ் ஸ்கேன் செய்யப்படும்.
இந்திய விமான நிலைய ஆணையத்தின் (AAI) அதிகாரிகள் கூறுகையில், பயணிகள் டிஜியாத்ரா பயன்படுத்துவது கட்டாயம் இல்லை. அவர்கள் விரும்பினால் பயன்படுத்தலாம். இந்த வசதியைப் பயன்படுத்துபவர்களுக்கு தனி வரிசைகள் இருப்பதால், ப்ரீ-போர்டிங் செயல்முறையை விரைவாக முடிக்க முடியும்.
சென்னையில் இப்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எத்தனை பேர் இந்த சேவையை பயன்படுத்துகிறார்கள் என்பது இன்னும் ஓரிரு நாட்களில் தெரியவரும் என்று அவர் கூறினார்.
ஆரம்பத்தில், டெல்லி, பெங்களூரு மற்றும் வாரணாசி ஆகிய மூன்று விமான நிலையங்கள் மட்டும் இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டன.
அதன்பின் படிப்படியாக ஜெய்ப்பூர், மும்பை, அகமதாபாத், குவாஹாத்தி, புனே, கொச்சி, கொல்கத்தா, ஹைதராபாத் மற்றும் லக்னோ உள்ளிட்ட மற்ற விமான நிலையங்களிலும் தொடங்கப்பட்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“