சென்னை சர்வதேச விமான நிலையத்தின் 2-ம் கட்ட விரிவாக்கப் பணிகள் வேகமாக நடைபெற்று வரும் நிலையில், மேலும் தாமதம் ஏற்படாமல் இருக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. திருத்தப்பட்ட காலக்கெடுவின்படி, புதிய ஒருங்கிணைந்த முனையத்தின் இரண்டாவது பகுதி 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தயாராகி, மார்ச் மாதத்திற்குள் பயணிகளின் பயன்பாட்டிற்காக திறக்கப்படும் என்றூ கூறப்படுகிறது.
இந்த விரிவாக்கப் பணிகள் அனைத்தும் ஜூலை 2025-க்குள் முடிக்கப்படும் என 2023 ஆண்டில் அப்போதைய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சராக இருந்த வி.கே. சிங் தெரிவித்தார். இந்திய விமான நிலைய ஆணையம், இதனை டிசம்பர் 2025-க்கு மாற்றியமைத்தது. இந்நிலையில், மார்ச் 2026-க்குள் இதன் பணிகளை முடிக்க காலக்கெடு நிர்ணயித்துள்ளனர்.
2018 ஆம் ஆண்டில் ரூ. 2,467 கோடி மதிப்பீட்டில் இந்திய விமான நிலைய ஆணையம் இந்த பணிகளை தொடங்கியது. தற்போது ஆண்டுக்கு 2.3 கோடி பயணிகள் கையாளப்பட்டு வரும் நிலையில், அதன் எண்ணிக்கையை 3.5 கோடி பயணிகளாக தரம் உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. 2.36 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில் இதற்கான பணிகள் நடைபெறுகின்றன. முதற்கட்டமாக, 1.36 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில், ரூ. 1,260 கோடியில் புதிய ஒருங்கிணைந்த முனையம் கட்டப்பட்டது. இது ஏப்ரல் 2023 இல் பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்பட்டது.
இருப்பினும், கடந்த இரண்டு ஆண்டுகளாக புதிய ஒருங்கிணைந்த முனையத்தின் ஒரு பகுதியை மட்டுமே சர்வதேச விமானப் பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர். அதிக பயணிகளுக்கு இடமளிக்கும் வகையில், டெர்மினல் இடத்தை அதிகரிக்க, இரண்டாம் கட்ட விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
புதிய டெர்மினல் கட்டிடத்தில் 60 செக்-இன் கவுண்டர்கள், 10 ஸ்கேனிங் திரைகள் மற்றும் எட்டு ஏரோபிரிட்ஜ்கள், நவீன தொழில்நுட்பங்களுடன் எட்டு நுழைவு வாயில்கள் இருக்கும் என்று கூறப்படுகிறது. ஏ.ஏ.ஐ கன்வேயர் பெல்ட்டை மேம்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் தங்கள் பொருட்களை பெறுவதற்கு நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியதில்லை.
"தற்போதைய முனையத்தில் பீக் ஹவரில் 12,000 பேர் பயணிக்கின்றனர். புதிய முனையத்தின் திறப்பிற்குப் பிறகு, இதன் எண்ணிக்கை உயரலாம். கூடுதல் வசதிகள் மற்றும் விசாலமான சுற்றுச்சூழலுடன், பயணிகள் இயக்கம் சீராக இருக்கும். காத்திருப்பு நேரம் குறைவாக இருக்கும்" என்று விமான நிலைய வட்டாரம் தெரிவித்துள்ளது.
தற்போது, விமான நிலையம் 1, 2 மற்றும் 4 ஆகிய மூன்று முனையங்களுடன் செயல்படுகிறது. முனையம் 3 திறக்கப்பட்டவுடன், சென்னை விமான நிலையம் ஆண்டுக்கு 3.5 கோடி பயணிகளைக் கையாளும் திறன் கொண்டதாக இருக்கும், மேலும், விமான சேவைகளும் 500-ஐ கடக்கும் என்று கூறப்படுகிறது.
சரக்கு விமானங்களுக்காக பிரத்தியேக 5-வது முனையம்:
3-வது முனையத்தின் பணிகள் நிறைவடைந்தவுடன், சரக்கு விமானங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கும் வகையில், 5-வது முனையத்தை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான நிலம் இந்திய விமான நிலைய ஆணையத்திடம் இருக்கிறது. இதற்கான பணிகளும் விரைவில் தொடங்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
நன்றி - DT Next