சென்னை விமான நிலையத்துக்கு 2 வாரத்தில் 5-வது முறையாக இன்றும் (ஜூன் 17) வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் சமூக விரோதிகளை கண்டுபிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருவதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை விமான நிலைய இயக்குநர் அலுவலகத்துக்கு இன்று அதிகாலை வந்த இமெயிலில், ‘சென்னை விமானநிலையத்தில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டு உள்ளன. அவை குறிப்பிட்ட நேரத்தில் வெடித்து சிதறும்’ என்று குறுந்தகவலில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இதனையடுத்து, வெடிகுண்டுகள் கண்டறியப்படும் குழுவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, உயர் அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள், மத்திய தொழில் பாதுகாப்பு அதிகாரிகள், வெடிகுண்டுகளை கண்டறியும் குழுவினர், போலீசார் உள்ளிட்டோர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இந்த வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. ஆனாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, விமான நிலைய பகுதிகளில் கூடுதல் கண்காணிப்பு சோதனை நடத்தப்பட்டது. வாகனங்கள் நிறுத்துமிடம், விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பும் இடம், விமானங்களில் சரக்கு பார்சல்கள் ஏற்றப்படும் இடங்கள் உள்ளிட்ட முக்கியமான பகுதிகளில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மற்றும் விமான நிலைய போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். விமான நிலையத்திற்கு வரும் வாகனங்களில் சந்தேகத்திற்குரிய வாகனங்களை வெடிகுண்டு நிபுணர்கள் நிறுத்தி சோதனை செய்தனர்.
இது தொடர்பாக சென்னை விமான நிலைய அதிகாரிகள் கூறுகையில், “சென்னை விமான நிலையத்துக்கு கடந்த இரண்டு வாரங்களாக வெடிகுண்டு மிரட்டல் வருகிறது. இதுவரை தொலைபேசி மற்றும் இமெயில் மூலமாக 5 முறை மிரட்டல்கள் வந்துள்ளன. வெடிகுண்டு மிரட்டல் புரளியாக இருந்தாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பாதுகாப்பு சோதனைகள் நடத்தப்படுகின்றன. இதனால் விமான சேவைகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை. விமானங்கள் அனைத்தும் வழக்கம் போல் இயங்கி வருகிறது. வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் சமூக விரோதிகளை கண்டுபிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்” என்று தெரிவித்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“