சென்னை விமான நிலையத்திற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கிருந்து உள்நாட்டு, வெளிநாட்டு விமானங்கள் இயக்கப்படுகின்றன. அதே போல் அங்கிருந்தும் இங்கு வருகின்றன.
சென்னை விமான நிலையத்தில் ஒரு உள்நாட்டு முனையம் மற்றும் 2 வெளிநாட்டு முனையங்கள் என மொத்தம் 3 முனையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், சென்னை விமான நிலைய வளாகத்தில் 10க்கும் மேற்பட்ட நாய்கள் சுற்றி திரிகிறது. அவ்வப்போது சண்டையிட்டு கொள்ளவதால் அங்கு வரும் பயணிகள் அச்சமடைகின்றனர்.
மேலும் கார், பைக் என அங்கு வந்து செல்வதால் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. அதோடு நாய்களும் சுற்றி திரிவதால் பயணிகள் பாதிக்கப்படுகின்றனர். மேலும் சென்னையில் அண்மைகாலமாக பொதுமக்கள், சிறுவர்களை நாய் கடித்து காயமடைந்த சம்பவங்களும், சாலைகளில் சுற்றி திரியும் மாடுகள் மோதி காயமடைந்த சம்பவங்களும் நிகழ்ந்துள்ளதால் மக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர்.
சென்னை விமான நிலையத்தில் சுற்றித் திரியும் நாய்களை சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உள்ளனர். சென்னை மாநகராட்சி நிர்வாகமும், விமான நிலைய நிர்வாகமும் இணைந்து இதற்கு தீர்வு காண வேண்டும் என பயணிகள், பொது மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“