சென்னையில் இருந்து புறப்படும் உள்நாட்டு விமானத்தில், பவுடர் வடிவில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும், அது சீக்கிரம் வெடிக்கும் என கொல்கத்தா விமான நிலைய இணையதள முகவரிக்கு, நேற்று ஒரு இ-மெயில் வந்தது. மேலும் நகரில் உள்ள இரண்டு தனியார் பள்ளிகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல் வந்தது.
இதனையடுத்து கொல்கத்தா விமான நிலைய அதிகாரிகள் உடனடியாக சென்னையில் உள்ள தங்கள் சக ஊழியர்களை எச்சரித்தனர். தொடர்ந்து, சென்னை விமான நிலையத்தில் உயர்நிலை அதிகாரிகளின் அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் சென்னையில் இருந்து புறப்படும் உள்நாட்டு விமானங்கள், குறிப்பாக மும்பை, டெல்லி, கொல்கத்தா உள்ளிட்ட வட மாநிலங்களுக்குச் செல்லும் விமானங்களையும், விமானங்களில் பயணம் செய்யும் பயணிகளின் உடைமைகளையும் தீவிரமாக சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டது.
மேலும் பயணிகள் தங்கள் உடமைகளில் பவுடர் பொருட்கள் எடுத்துச் செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டது.
அதோடு, விமான நிலையத்திற்கு வரும் வாகனங்களில் சந்தேகப்படும் வாகனங்களை நிறுத்தி மோப்பநாய் உதவியுடன் சோதனை நடத்துவது, விமான நிலைய வளாகத்திற்குள் நீண்ட நேரமாக நிற்கும் வாகனங்களை கண்காணித்து சோதிப்பது உள்ளிட்ட பல்வேறு சோதனைகளும் தீவிரபடுத்தப்பட்டன. இந்த சோதனைகளில் சந்தேகபடும் படி எதுவும் சிக்கவில்லை.
எனவே இது வழக்கமான வெடிகுண்டு புரளிதான் என்பதை இறுதியாக, அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்,
இந்த சோதனைகள் காரணமாக சென்னை உள்நாட்டு விமான நிலையத்திலிருந்து மும்பை, டெல்லி, கொல்கத்தா, சிலிகுரி, சீரடி உள்ளிட்ட பல விமானங்கள் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக தாமதமாக சென்னையில் இருந்து புறப்பட்டுச் சென்றன.
இதேபோல் மயிலாப்பூர் மற்றும் சாந்தோமில் உள்ள இரண்டு தனியார் பள்ளிகளுக்கு நேற்று காலை மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது.
பள்ளி அதிகாரிகளின் எச்சரிக்கையை அடுத்து நகர காவல்துறையின் வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் செயலிழப்பு படையினர் (BDDS) வளாகத்தில் தீவிர சோதனை மேற்கொண்டனர். இரண்டு மிரட்டல் மின்னஞ்சல்களும் ஒரே மெயில் ஐடியில் இருந்து அனுப்பப்பட்டது தெரியவந்தது.
மின்னஞ்சல் அனுப்பியது யார் என்பதை கண்டுபிடிக்க சைபர் கிரைம் பிரிவு விசாரணையைத் தொடங்கியுள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
இதேபோல் அடிக்கடி வரும் புரளி வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் நிகழ்வுகளை விசாரிக்க சர்வதேச நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து வருவதாக நகர காவல்துறை இந்த மாத தொடக்கத்தில் கூறியது.
மிரட்டல்களை சமாளிக்க பள்ளிகளுக்கு நிலையான செயல்பாட்டு நடைமுறை வழங்கப்பட்டுள்ளது, என்று போலீசார் தெரிவித்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“