சென்னை மெரினா கடற்கரையில் நேற்று (அக்.6) இந்திய விமானப் படை சார்பில் பிரம்மாண்ட விமான சாகச நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியை காண லட்சக்கணக்கான மக்கள் மெரினா கடற்கரையில் குவிந்தனர்.
இதனால், கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டது மற்றும் வெயிலின் தாக்கமும் அதிகமாக இருந்ததால் பலர் மயக்கமடைந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனை அழைத்து செல்லப்பட்டனர்.
இந்நிலையில், விமான சாகச நிகழ்ச்சியை கண்டு களித்த போது கூட்ட நெரிசல் மற்றும் வெயிலினால் ஏற்பட்ட நீா்ச்சத்து இழப்பு காரணமாக 5 பேர் உயிரிழந்தனர். இது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. அரசு முறையான ஏற்பாடு செய்யாதது மற்றும் கவனக் குறைவு காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டதாக எதிர்க்கட்சிகள் உள்பட பலர் குற்றஞ்சாட்யுள்ளனர்.
இந்நிலையில், தி.மு.க கூட்டணியில் உள்ள திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா அரசை கடுமையாக சாடியுள்ளார். அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "மெரினா கடற்கரையில் இந்திய விமானப் படையின் ‘வான்படை சாகச’ கண்காட்சியை காண மக்கள் கூட்டம் இவ்வளவு வரும் என்று அரசு ஏன் முன்கூட்டியே கவனிக்க தவறியது.
கொளுத்தும் வெயிலில் சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கூடும் பொழுது அங்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்படும். அதன் காரணமாக உடலில் நீர்ச்சத்து குறைந்து மயக்கம் ஏற்படும். சிலருக்கு மாரடைப்பும் ஏற்படும். இது அறிவியல் எதார்த்தம். இதையெல்லாம் திட்டமிட்டு ஏற்பாடுகளைச் செய்த பிறகே அரசு இந்த நிகழ்விற்கு பொதுமக்களை அனுமதித்திருக்க வேண்டும். இந்த நிகழ்விலோ கூடிய லட்சக்கணக்கான மக்கள் கூட்டத்திற்கு ஏற்ற வகையில் தேவையான குடிநீர் வசதியை ஏற்படுத்தவில்லை.
ஆக்ஸிஜன் பற்றாக்குறையை அகற்ற போதிய இடவசதியை ஒழுங்கு படுத்தவில்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க முறையான முதல் உதவி சிகிச்சை மையங்களையும் ஏற்பாடு செய்யவில்லை என்றே தெரிகிறது. குறிப்பாக குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் கூட்ட நெரிசலில் சிக்கி பாதிப்புக்கு உள்ளானதையும் காண முடிகிறது.அப்படி பாதிப்புக்கு உள்ளானவர்களை ஆம்புலன்ஸ்கள் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து செல்லவும் முடியாத நிலையில் போக்குவரத்து நெருக்கடியும் இருந்துள்ளது.
இவ்வளவு மக்கள் திரளும் போது மக்களை ஒழுங்குபடுத்தவும் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் முன் ஏற்பாடுகளை தமிழக காவல்துறை, சுகாதாரத்துறை, பொதுப்பணித்துறை, போக்குவரத்து துறை உள்ளிட்டை துறையினர் போர்க்கால அடிப்படையில் முன்ஏற்பாடுகளை செய்திருக்க வேண்டும். அதில் போதிய கவனம் செலுத்தாமல் போனதாலே இந்த உயிர் இழப்புகளும் நடந்துள்ளது.
மெரினா கடற்கரையில் இந்திய விமானப்படையின் ‘வான்படை சாகச’ கண்காட்சியை காண மக்கள் கூட்டம் இவ்வளவு வரும் என்று அரசு ஏன் முன்கூட்டியே கவனிக்க தவறியது.
— Aadhav Arjuna (@AadhavArjuna) October 6, 2024
கொளுத்தும் வெயிலில் சுமார் பத்துலட்சத்திற்கும் மேறபட்ட மக்கள் கூடும் பொழுது அங்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்படும். அதன்காரணமாக உடலில்… pic.twitter.com/q6V17VlUWy
அரசின் மூத்த நிர்வாகத்தினர் அனைவரும் வான்படை சாகச நிகழ்வை காணும் ஆர்வத்தில் மட்டுமே இருந்துள்ளனர். தேவையான அமைச்சர்களையோ, அதிகாரிகளையோ இந்த நிகழ்வுக்கான ஏற்பாடுகளைக் கவனிக்க முடக்கிவிடவில்லை என்பதை மக்களின் குமுறலில் இருந்தே அறிய முடிகிறது.
எந்த அரசு தன்நலன் பேணாது தன் மக்கள் நலனையே பெரிதாக பேணும் அரசோ அந்த அரசே மக்களுக்கான அரசாக விளங்கும். அரசின் கவனக்குறைவால் வான் படை சாகச நிகழ்வு சாதனை நிகழ்வாக மாறாமல் வேதனை நிகழ்வாக மாறிவிட்டது. அரசு இனிவரும் காலங்களிலாவது இது போன்ற நிகழ்வுகளில் விழிப்புடன் இருக்க வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.