சென்னையில் அலுமினியம் அச்சுகளை திருடிய வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேர்களும் சென்னை அம்பத்தூர் தொழிற்பெட்டை காவல் நிலையத்தில் இருந்து தப்பி ஓடியதைத் தொடர்ந்து, போலீசார் 6 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
ஒரு வாரத்திற்கு முன்பு, சென்னையில் அலுமினியம் உற்பத்தி தொழிற்சாலையில் இருந்து ரூ.80,000 மதிப்புள்ள அலுமினியம் அச்சுகளைத் திருடியதாக ஆவடியைச் சேர்ந்த எஸ்.அண்ணாதுரை (30), அவருடைய சகோதரர் முருகா, ராஜேஷ் (19), மற்றும் அம்பத்தூரைச் சேர்ந்த பாபு (21) ஆகிய 4 பேரும் கைது செய்யப்பட்டனர்.
அலுமினியம் அச்சு திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட இந்த 4 பேரும், சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த நிலையில், சனிக்கிழமை காலை 6 மணிக்கு தப்பிச் சென்றனர். இதையடுத்து, போலீசார் விரைந்து செயல்பட்டு, காவல் நிலையத்தில் இருந்து தப்பி சென்ற 4 பேரையும் ஞாயிற்றுக்கிழமை போலீசார் மீண்டும் கைது செய்தனர்.
இதனைத் தொடர்ந்து, அலுமினியம் அச்சு திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த 4 பேரும் தப்பிச்சென்றதால், பணியில் அஜாக்கிரதையாக இருந்ததாக, ஆவடி சப்-இன்ஸ்பெக்டர் அனிருதீன், காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் இளங்கோவன், தலைமை காவலர்கள், ரகுநாதன் மற்றும் சுரேஷ் பாபு, காவலர்கள் கல்யாணசுந்தரம் மற்றும் கருணாகரன் ஆகிய 6 பேர்களை சென்னை கிழக்கு இணை போலீஸ் கமிஷனர் மகேஸ்வரி சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"