சென்னை மற்றும் சுற்று வட்டார மாவட்டங்களில் வடகிழக்குப் பருவமழை மீண்டும் தீவிரமடைந்துள்ளது. நேற்று இரவு தொடங்கி விடிய விடிய அங்கு மழை பெய்து வருகிறது. இன்று (செவ்வாய்க் கிழமை) காலை நிலவரப்படி மீனம்பாக்கத்தில் 4 செ.மீ, நுங்கம்பாக்கத்தில் 2.4 செ.மீ, நந்தனத்தில் 4.5 செ.மீ, அண்ணா பல்கலையில் 4.4 செ.மீ, தரமணியில் 4.0 செ.மீ, பள்ளிக்கரணையில் 3 செ.மீ என மழை பதிவாகியுள்ளது.
மேலும் இன்றும் இங்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னையில் இன்று(நவ.12) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்க கடலில் நிலவிய காற்றழுத்த சுழற்றி நேற்று காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகி உள்ளது. இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற வாய்ப்பு உள்ளது. இந்த சுழற்றி காரணமாக தமிழகத்தில் 4-5 நாட்கள் மழை பெய்யும். இது புயலாக மாற வாய்ப்பில்லை எனக் கூறப்பட்டுள்ளது. மேலும் இது நீர்நிலைகளை நிரப்ப கூடிய மழையாக இருக்கும்.
முதற்கட்டமாக வடகடலோரா மாவட்டங்களில் மழை பெய்யும். சென்னை, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடி உடன் கூடிய மழையாக இருக்கும். 8-10 செ.மீ மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் இந்த மழை டெல்டா மற்றும் மேற்கு தொடர்ச்சி பகுதிக்கும் செல்ல வாய்ப்புள்ளது எனக் கூறப்பட்டுள்ளது.
இன்று (நவ.12) சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மற்றும் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நாளை (நவ.13) மேற்கண்ட மாவட்டங்கள் மற்றும் ராணிப்பேட்டை, மதுரை, விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“