சென்னை அண்ணா சாலை பகுதியில், மெட்ரோ ரயில் பணிகள் நிறைவடைந்துள்ளதை தொடர்ந்து மீண்டும் அண்ணா சாலை பகுதி இயல்புநிலைக்கு திரும்ப உள்ள தகவல், சென்னைவாழ் மக்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் பொருட்டு, மெட்ரோ ரயில் சேவை துவங்க திட்டமிடப்பட்டது. அதன்படி, சென்னையில், 2009ம் ஆண்டு முதல் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றன. விமான நிலையம் தொடங்கி வண்ணாரப்பேட்டை வரையில் ஒரு பிரிவாகவும், சென்ட்ரல் தொடங்கி பரங்கிமலை வரை ஒரு பிரிவாகவும் பணிகள் நடைபெற்று வந்தன.
இதில், கோயம்பேடு முதல் விமானநிலையம் வரையிலும், கோயம்பேடு முதல் வண்ணாரப்பேட்டை வரையிலும் பணிகள் பணிகள் முடிந்து சேவைகள் துவங்கியுள்ளன.. இதற்கிடையே , 12 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட அண்ணா சாலையில் எல்.ஐ.சி., ஆயிரம் விளக்கு, அண்ணா மேம்பாலம், டி.எம்.எஸ்., நந்தனம் ஆகிய இடங்களில் பணிகள் நடைபெற்று வந்தது. இதன்காரணமாக, 2012ம் ஆண்டு முதல் அண்ணா சாலை, ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டது. அண்ணா சிலையில் இருந்து ஜெமினி நோக்கிச் செல்லும் பாதை மூடப்பட்டு, ஜெனரல் பீட்டர்ஸ் சாலையில் வாகனங்கள் திருப்பி விடப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் ஒயிட்ஸ் சாலை, சத்யம் திரையரங்கம் வழியாக அண்ணா சாலைக்குச் செல்ல வேண்டிய கட்டாய்த்திற்கு உள்ளாயினர். இதனால் வாகனஓட்டிகள் கடும்சிரமத்திற்கு உள்ளாகினர். மெட்ரோ ரயில் பணிகளால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில் சிக்கி, சென்னை மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
தற்போது, அண்ணா சாலையில் மெட்ரோ ரயில் பணிகள் நிறைவடைந்துள்ளன. இதனையடுத்து, அண்ணா சாலை விரைவில் இயல்புநிலைக்கு திரும்ப உள்ளது. ஒருவழிப்பாதையாக இருந்த அண்ணா சாலை, விரைவில் இருவழிப்பாதையாக மாற்றப்பட உள்ளது. இதனால் அண்ணாசாலை வாகன ஓட்டிகள் இனி வழக்கம் போல் செல்ல முடியும். எந்த சாலையையும் இனி சுற்றி செல்ல வேண்டியது இருக்காது என்ற தகவல், சென்னை மக்களுக்கு நிச்சயம் மகிழ்ச்சி தரக்கூடிய செய்தியாகவே அமையும் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்தில்லை...