சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கல்லூரி மாணவி பாலியல் தொல்லைக்கு ஆளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்து வரும் ஒரு மாணவரும், மாணவியும் காதலித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்றிரவு, உணவு அருந்திய பிறகு தான் காதலிக்கும் 4 ஆம் ஆண்டு மாணவர் உடன் கல்லூரி வளாகத்தில் மாணவி பேசிக்கொண்டு இருந்துள்ளார். அப்போது, அங்கு வந்த அடையாளம் தெரியாத 2 பேர் மாணவரை தாக்கியுள்ளனர். மேலும், மாணவரை அடித்து துரத்திவிட்டு, மாணவியை பாலியல் ரீதியாக துன்புறுத்தி உள்ளனர்.
இதனையடுத்து அந்த மாணவி கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரையடுத்து கோட்டூர்புரம் உதவி ஆணையர் பாரதிராஜன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாணவியிடம் அத்துமீறியவர்கள் பல்கலைக்கழக மாணவர்களா? அல்லது வெளியில் இருந்து வந்தவர்களா? என்பது குறித்து சி.சி.டி.வி காட்சிகளைக் கொண்டு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். புகாரளித்த மாணவியிடமும் பெண் காவல் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தச் சம்பவத்தை அடுத்து அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவ, மாணவிகள் அடையாள அட்டை பரிசோதனைக்குப் பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்தநிலையில், இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ”சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள், மாணவி ஒருவருக்குப் பாலியல் தாக்குதல் நடைபெற்றிருக்கும் செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலுமாகச் சீர்குலைந்து விட்டது. தினமும் படுகொலைச் சம்பவங்கள், போதைப் பொருள்கள் புழக்கம் அதிகரிப்பு, பொதுமக்கள், அரசு அதிகாரிகள், காவல்துறையினர், பெண்கள், குழந்தைகள் என யாருக்கும் பாதுகாப்பில்லாத இருண்ட காலத்தில் இருப்பது போன்ற சூழ்நிலையில் தமிழகம் தற்போது இருப்பது மிகுந்த வருத்தமளிக்கிறது. குறிப்பாக, குற்றவாளிகள் தி.மு.க.,வினர் என்றால், அவர்கள் மீதான நடவடிக்கை தாமதப்படுத்தப்படுகிறது.
மாநிலத் தலைநகரத்தின் மையப்பகுதியில், பொறியியல் கல்வி தலைமை நிறுவன வளாகத்தின் உள்ளே, பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத நிலை இருக்கிறது என்றால், சமூக விரோதிகளுக்கு, அரசின் மீதோ, காவல்துறையின் மீதோ எந்த பயமும் இல்லை என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.
உடனடியாக, இந்தக் குற்றத்தில் தொடர்புடைய அனைவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மாநகர காவல்துறையும், காவல்துறைக்குப் பொறுப்பான முதலமைச்சரும், மாணவி மீதான பாலியல் தாக்குதலுக்கு முழு பொறுப்பேற்று, பொதுமக்களுக்கு விளக்கமளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்,” என்று பதிவிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“