சென்னையில் கிருமிநாசினி மருந்து அடிக்க வந்ததாகக் கூறி ஏடிஎம் மையத்துக்குள் நுழைந்த மர்ம நபர் ஏடிஎம்-மில் இருந்து ரூ.8.2 லட்சம் கொள்ளையடித்துச் சென்ற சம்பவத்தில் வங்கி ஊழியர் ஒருவரை போலிஸார் கைது செய்துள்ளனர்.
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பொது இடங்களில் கிருமிநாசினி மருந்து தெளிக்க மாநகராட்சி, நகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. அதனால், தெருக்கள், சாலைகள், மக்கள் நடமாடும் பொது இடங்கள் என அனைத்து இடங்களிலும் கிருமிநாசினி மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது.
சென்னையில், எம்.எம்.டி.ஏ கிழக்கு பிரதான சாலையில் ஒரு ஏடிஎம் உள்ளது. இந்த ஏடிஎம் மையத்துக்கு 65 வயதான பாதுகாவலர் ஒருவர் உள்ளார். இந்த நிலையில், நேற்று இந்த ஏடிஎம் மையத்துக்கு முகக்கவசம் அணிந்த ஒரு நபர், மாநகராட்சியில் இருந்து ஏடிஎம் மையத்துக்கு கிருமிநாசினி மருந்து தெளிக்க வந்துள்ளதாக ஏடிஎம் பாதுகாவலரிடம் கூறியுள்ளார். ஏடிஎம் பாதுகாவலரும் கிருமிநாசினி மருந்து தெளிக்க அனுமதித்து வெளியே சென்றுள்ளார்.
இதையடுத்து, அந்த மர்ம நபர் ஏடிஎம் மையத்துக்குள் சென்று, ஏடிஎம் இயந்திரத்தில் பணம் உள்ள பெட்டியின் கடவுச் சொல்லை பதிந்துள்ளார். அப்போது அங்கே ஏடிஎம்-க்கு பணம் எடுக்க வந்த வாடிக்கையாளர் ஒருவர், ஏடிஎம் இயந்திரத்தை திறக்கும் நபர் வங்கி ஊழியராக இருக்கலாம் என்று தவறாக நினைத்து அமைதியாக வெளியே வந்து காத்திருந்துள்ளார்.
அடுத்த 10 நிமிடத்திற்குள் அந்த மர்ம நபர் ஒரு பையுடன் வெளியே வந்து அங்கே காத்திருந்த ஆட்டோவில் ஏறி புறப்பட்டுள்ளார். இதற்குப் பிறகுதான், அந்த வாடிக்கையாளர் ஏதோ தவறாக நடந்துள்ளது என்று சந்தேகித்து, ஏடிஎம் மைய பாதுகாவலரிடம் தெரிவித்துள்ளார். அவர்கள் அந்த அடையாளம் தெரியாத மர்ம நபரை தடுத்த நிறுத்த முயற்சி செய்தும் அந்த ஆட்டோ வேகமாக புறப்புட்டு சென்றுள்ளது.
இது குறித்து தகவல் அறிந்து, சம்பவம் நடந்த ஏடிஎம் மையத்திற்கு வந்த வங்கி மேலாளர், ஏடிஎம் இயந்திரத்தை சோதனை செய்ததில், ஏடிஎம்-மில் இருந்த ரூ.8.2 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதைக் கண்டுபிடித்தார்.
இந்த கொள்ளை சம்பவம் குறித்த புகாரின் பேரில், வழக்குப் பதிவு செய்த மதுரவாயல் போலீசார் ஏடிஎம் மையத்தில் பணம் நிரப்பும் பணியில் ஈடுபட்டிருந்த 6 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர். ஏடிஎம் மெஷின் பணப்பெட்டியின் கடவுச்சொல்லை பயன்படுத்தி கொள்ளையடிக்கப்பட்டிருப்பதால் பணம் நிரப்பும் பணி செய்பவர்கள் யாரேனும் இந்த கொள்ளையில் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்தனர். மேலும், ஏடிஎம் மையத்தில் உள்ள கண்காணிப்பு வீடியோ பதிவுகளையும் ஆய்வு செய்தனர்.
இதையடுத்து, இந்த ஏடிஎம் கொள்ளையில் அந்த வங்கி ஊழியர் சிவானந்தம் என்பவது ஈடுபட்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்ததைத் தொடர்ந்து, அவரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
சென்னையில் எம்.எம்.டி.ஏ கிழக்கு பிரதான சாலை ஏடிஎம்-மில் கிருமி நாசினி மருந்து தெளிக்க வந்திருப்பதாகக் கூறி ஏடிஎம்-மின் சரியான கடவுச்சொல்லை பதிந்து 8.2 லட்சம் ரூபாயை வங்கி ஊழியரே கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.