இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI), சென்னை பெருநகர நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம் (CMWSSB) மற்றும் கிரேட்டர் சென்னை கார்ப்பரேஷன் (GCP) ஆகிய மூன்று அமைப்புகளின் அதிகாரிகள், முறையான உரிமம் இல்லாமல் இயங்கிய 6 குடிநீர் யூனிட்களை சமீபத்தில் கண்டறிந்துள்ளனர்.
கோயம்பேடு, நெசப்பாக்கம் போன்ற பகுதிகளில் இயங்கி வந்த 6 முறைகேடு யூனிட்களுக்கும் சீல் வைக்கப்பட்டது.
இதுகுறித்து சென்னையின் உணவு பாதுகாப்பு அதிகாரி பி சதீஷ் குமார் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் பேசுகையில், வடசென்னையில் உள்ள குடிநீர் யூனிட் ஒன்றின் ஆய்வகத்தில் ஒரு புறா இறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தேன், என்றார்.
சென்னை மற்றும் அதன் அண்டை மாவட்டங்களில் கடந்த வாரம் 19 பேக்கேஜ்டு குடிநீர் யூனிட்களில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது பல ஆய்வகங்களில் தண்ணீரின் தரத்தை சோதிக்க தேவையான ரசாயனங்கள் நிரப்பப்பட்ட பாட்டில்களில் உற்பத்தி அல்லது காலாவதி விவரங்கள் இல்லை என்பதையும் அதிகாரிகள் கண்டறிந்தனர்.

கோடையில், சென்னையில் நீர்மட்டம் பொதுவாக குறைந்து, பெரும்பாலான மக்கள் தினசரி பயன்பாட்டிற்கு லாரி தண்ணீரையும், முறையான நீர் இணைப்புகள் இல்லாத குடியிருப்புகள் குறிப்பாக அடுக்குமாடி குடியிருப்புகளில், குடிநீருக்காக பேக்கேஜ் செய்யப்பட்ட தண்ணீரையே பெரிதும் நம்பியிருக்கிறார்கள்.
CMWSSB இன் மூத்த அதிகாரியின் கூற்றுப்படி, கோடை காலத்தில் பேக்கேஜ் செய்யப்பட்ட குடிநீருக்கான தேவையை பூர்த்தி செய்ய, பல அங்கீகரிக்கப்படாத, உரிமம் இல்லாத பேக்கேஜிங் யூனிட்கள் நகரத்தில் வளர்கின்றன, அதே நேரத்தில் தற்போதுள்ள யூனிட்கள் தரத்திற்கான நுணுக்கமான சோதனைகளை புறக்கணித்து தங்கள் உற்பத்தியை அதிகரிக்க முயற்சிக்கின்றன.

குமார் கூறுகையில், அசுத்தமான தண்ணீர் காலரா மற்றும் டைபாய்டு போன்ற தண்ணீரால் பரவும் நோய்களுக்கு வழிவகுக்கும். ஒவ்வொரு தொகுதியும் அனுப்பப்படும் முன் மாதிரி சோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். சரியான லேபிளிங் இருக்க வேண்டும். தண்ணீர் கேன்களில் ISI, BIS மற்றும் FSSAI உரிம விவரங்கள் இருக்க வேண்டும். உற்பத்தி விவரங்கள் சீல் கவரில் இருக்க வேண்டும் மற்றும் கேன்கள் சுத்தமாகவும் வெளிப்படையாகவும் இருக்க வேண்டும். இந்த விவரங்கள் இல்லை என்றால், அது நிச்சயமாக விதிமீறலாகும், என்று குமார் கூறினார்.
மேலும், மக்கள், சுகாதார கேடுகளை உணராமல், இந்த அங்கீகரிக்கப்படாத யூனிட்களில் இருந்து கேன்களை வாங்குகிறார்கள், ஏனெனில் அவர்கள் முறையாக இயங்கும் யூனிட்கள் வசூலிக்கும் கட்டணத்தை விட ரூ. 10 முதல் ரூ. 15 வரை குறைவாக வசூலிக்கிறார்கள் அல்லது அவர்கள் வீடுகளுக்கு அருகில் இருப்பதால் டெலிவரி நேரம் குறைவாக உள்ளது. .ஆனால் சுகாதாரக் கேடுகள் குறித்து அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார்.
பேக்கேஜ் செய்யப்பட்ட குடிநீரின் தரம் குறித்த புகார்களை வாட்ஸ்அப்பில் தெரிவிக்க விரும்புவோர் உணவு பாதுகாப்பு துறையின் 9444042322 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மேலும் http://www.foodsafety.tn.gov.in அல்லது TN நுகர்வோர் செயலி மூலம் அவர்கள் தங்கள் புகாரை பதிவு செய்யலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”