சென்னை ஆவடி அருகே நகைக் கடையில் துப்பாக்கி முனையில் ரூ.1.5 கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் மூளையாக செயல்பட்ட இருவரை சென்னையில் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
சென்னை, ஆவடியை அடுத்த முத்தாப்புதுப்பேட்டை எல்லையம்மன் நகர் ஐஏஎப் சாலையைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவர் கிருஷ்ணா ஜூவல்லர்ஸ் என்ற பெயரில் நகைக்கடை மற்றும் அடகு கடை நடத்தி வருகிறார். இங்கு கடந்த ஏப்ரல் 15ஆம் தேதி கடையில் பிரகாஷ் மட்டும் தனியாக இருந்த போது, காரில் வந்த 4 மர்ம நபர்கள் திடீரென கடைக்குள் புகுந்தனர்.
இவர்கள் பிரகாஷின் கை மற்றும் கால்களை கட்டிப்போட்டுத் துப்பாக்கி முனையில் மிரட்டி நகைக் கடையில் இருந்து ரூ.1.5 கோடி மதிப்பிலான தங்க நகைகள், வெள்ளி, ரூ.5 லட்சம் பணம் மற்றும் ஐபோன் ஆகியவற்றை கொள்ளையடித்துவிட்டு தப்பியோடிவிட்டனர்.
இந்த சம்பவம் குறித்து முத்தாபுதுப்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். துப்பாக்கி காட்டி நகைகளை கொள்ளையடித்து சென்ற 4 பேரின் சிசிடிவி காட்சி படங்களை வெளியிட்ட போலீசார், கொள்ளையர்களை பிடிக்க 8 தனிப்படைகள் அமைத்து ஆந்திரா, ராஜஸ்தானில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில், கொள்ளை சம்பவத்தில் மூளையாக செயல்பட்டு கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த தினேஷ் குமார், சேட்டன் ராம் ஆகியோரை சென்னையில் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் நெருங்கி வருகின்றனர். கூடிய விரைவில் அவர்களும் கைது செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“