சென்னை மற்றும் பெங்களூரு இடையேயான கிரீன்ஃபீல்ட் வழித்தடம் டிசம்பர் மாதத்திற்கு முன் திறந்து வைக்கப்படும் என மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
மத்திய நெடுஞ்சாலை துறை சார்பில் நாட்டின் நகரங்களுக்கு இடையே விரைவாக செல்வதற்காக நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டு வருகிறது. அதன்படி, பெங்களூரு-சென்னை விரைவுச்சாலை தற்போது அமைக்கப்பட்டு வரும் 36 கிரீன்பீல்டு விரைவுச்சாலைகளில் ஒன்றாகும்.
17,930 கோடி ரூபாய் செலவில் 262 கிமீ நீளமுள்ள பெங்களூரு-சென்னை விரைவுச் சாலை கர்நாடகா, ஆந்திரா மற்றும் தமிழ்நாடு வழியாகச் செல்கிறது. இதில் தமிழ்நாட்டில் 85 கிமீ செல்லும் இந்த சாலை, ஆந்திராவில் 71 கிலோமீட்டரும், கர்நாடகாவில் 106 கிலோமீட்டரும் செல்கிறது. மொத்த நீளத்தில் 240 கிமீ தூரத்திற்கு எட்டு வழிச்சாலையாக இந்த நெடுஞ்சாலை அமைக்கப்படும். இத்திட்டத்திற்காக மொத்தம் 2650 ஹெக்டேர் நிலத்தை அரசு கையகப்படுத்தியுள்ளது. முக்கியமாக இந்த சாலையில் 90 சதவீதம் ஸ்பீட் பிரேக் கிடையாது.
இந்தநிலையில், வியாழக்கிழமை பெங்களூருவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு பேசிய மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி ”ரூ.17,930 கோடி மதிப்பிலான பெங்களூரு-சென்னை கிரீன்ஃபீல்ட் வழித்தடமானது, இரு நகரங்களுக்கு இடையேயான பயண நேரத்தை வெறும் இரண்டு மணி நேரமாகக் குறைக்கும். இந்த விரைவுச்சாலை கட்டுமான பணிகள் தற்போது விரைவாக நடைபெற்று வருகிறது,” என்று கூறினார்.
மேலும், இந்த கிரீன்ஃபீல்ட் வழித்தடத்தை பிரதமர் நரேந்திர மோடி டிசம்பர் மாதத்திற்கு முன் திறந்து வைப்பார் என்றும் நிதின் கட்கரி கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“