ஜெய்ப்பூரிலிருந்து சென்னைக்கு வந்த ஸ்பைஸ்ஜெட் விமானம் இன்று அதிகாலையில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சென்னை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. ஜெய்ப்பூர் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட பிறகு, விமானி தொழில்நுட்பக் கோளாறைக் கண்டறிந்தார். சென்னை வந்தடைந்தவுடன், அவசர தரையிறக்கத்துக்கு அனுமதி அளிக்கும்படி கட்டுப்பாட்டு அறையில் கோரிக்கை வைத்தார். அவருக்கு அனுமதி வழங்கிய நிலையில், விமானம் அதிகாலை 5:46 மணிக்கு பாதுகாப்பாக தரையிறங்கியது.
முதற்கட்ட விசாரணையில் டயர் வெடித்து சேதமடைந்தது தெரியவந்தது. ஓடுதளத்தில் உரிய முன்னேற்பாடுகளுடன் விமான நிலைய பணியாளர்கள் இருந்த நிலையில் சாதுரியமாகச் செயல்பட்ட விமானி அசம்பாவிதம் இன்றி விமானத்தைத் தரையிறக்கினார்.அதன்பின் விமானத்தின் டயர்களை பரிசோதித்ததில், 2-வது சக்கரத்திலுள்ள டயர் வெளியே வெடித்து வந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த விபத்தில் நல்வாய்ப்பாக விமானத்திலிருந்தோர் அனைவரும் உயிர் தப்பியுள்ளனர்.