10 வருடங்களுக்குப் பிறகு பெற்றோரை கண்டுபிடித்த வாலிபர்! சென்னையில் ஒரு நெகிழ்ச்சி சம்பவம்!

4 வயதில் மாயமான சிறுவன், தற்போது 24 வயது வாலிபராக பெற்றோரை தேடி போலீஸ் நிலையம் வந்திருப்பதாக தெரிவித்தனர்

10 வருடங்களுக்குப் பிறகு பெற்றோரை கண்டுபிடித்த வாலிபர் : சென்னையை அடுத்த பள்ளிக்கரணை அருகே உள்ள சித்தாலபாக்கம் ஒட்டியம்பாக்கம் சாலையில் வசித்து வருபவர் ராமச்சந்திரன். இவர் தனது தம்பி விஸ்வநாதனின் மகனான சதாசிவம் (வயது 14) என்பவரை கடந்த 2008-ம் ஆண்டு தத்தெடுத்து வளர்த்து வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 13-8-2008 அன்று பள்ளிக்கு சென்ற சதாசிவம், அதன்பிறகு வீடு திரும்பவில்லை. சதாசிவத்தின் தலையில் அடிபட்டு பழைய நினைவுகள் இழந்துவிட்டார். இதனால் வழிதவறி நின்ற அவரை சிலர் மீட்டு வியாசர்பாடியில் உள்ள தனியார் இல்லத்தில் சேர்த்ததாக தெரிகிறது.

2010-ம் ஆண்டு விழுப்புரத்தில் உள்ள அந்த தனியார் இல்லத்தின் கிளைக்கு சென்ற சதாசிவம், அங்கு தனியார் சோப் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அப்போது அங்கு வந்த லாரி டிரைவர் ஒருவர், தனக்கு குழந்தை இல்லாததால் சதாசிவத்தை வளர்ப்பதாக கூறி அவரை தன்னுடன் மீண்டும் சென்னைக்கு அழைத்து வந்து வளர்த்தார். தற்போது சதாசிவத்துக்கு 24 வயது ஆகிறது. சொந்தமாக கார் வைத்து ஓட்டி வருகிறார்.

இந்தச் சூழ்நிலையில், சதா சிவம், தனக்கு தலையில் அடிபட்டதால் பெற்றோர் பற்றி நினைவுக்கு வரவில்லை. அவர்களை கண்டுபிடிக்க உதவும்படி நண்பர் லோகேசிடம் கேட்டிருக்கிறார். இருவரும் வியாசர்பாடியில் உள்ள தனியார் இல்லத்துக்கு சென்று விசாரித்தனர். அங்கிருந்த சதாசிவத்தின் வங்கி கணக்கு புத்தகத்துக்கு கொடுத்த ஆவணங்களை ஆய்வு செய்தபோது, அதில் அவரது பள்ளி அடையாள அட்டை நகல் இருந்தது. அதில் அவரது தந்தை பெயர் ராமச்சந்திரன் எனவும், சித்தாலபாக்கம் எனவும் இருந்தது.

இதையடுத்து இருவரும் பள்ளிக்கரணை போலீஸ் நிலையம் சென்று போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆல்பின்ராஜிடம் நடந்த விவரங்களை கூறி, பெற்றோரை கண்டுபிடிக்க உதவும்படி கேட்டனர்.

பரங்கிலை போலீஸ் துணை கமிஷனர் முத்துசாமி உத்தரவின் பேரில் போலீசார் விசாரித்தபோது, 2008-ம் ஆண்டு சதாசிவம் மாயமானதாக ராமச்சந்திரன் புகார் மனு அளித்து இருப்பது தெரிந்தது. அதில் இருந்த முகவரியை வைத்து சித்தாலபாக்கத்தில் உள்ள ராமச்சந்திரன் வீட்டுக்கு சென்று போலீசார் விசாரித்தனர்.

அப்போது அவர், 2008-ம் ஆண்டு மாயமானது தனது தம்பி விஸ்வநாதனின் மகன் சதாசிவம் என தெரிவித்தார். இதையடுத்து 14 வயதில் மாயமான சிறுவன், தற்போது 24 வயது வாலிபராக பெற்றோரை தேடி போலீஸ் நிலையம் வந்திருப்பதாக தெரிவித்தனர்.

அதை கேட்டு மகிழ்ச்சி அடைந்த ராமச்சந்திரன், இதுபற்றி திருவண்ணாமலையில் உள்ள தனது தம்பி விஸ்வநாதனுக்கும் தகவல் தெரிவித்தார். உடனடியாக விஸ்வநாதன், தனது மனைவி அன்னலட்சுமி மற்றும் குடும்பத்துடன் பள்ளிக்கரணை போலீஸ் நிலையம் வந்தார். மாயமான தங்கள் மகன், 10 ஆண்டுகளுக்கு பிறகு தங்களை தேடி வந்து இருப்பதை கண்டதும், அவரை கண்ணீருடன் கட்டித்தழுவி முத்தமிட்டனர்.

பின்னர் பெற்றோருடன், சதாசிவத்தை போலீசார் அனுப்பி வைத்தனர். தனது பெற்றோருடன் சேர உதவிய போலீசாருக்கும், நண்பர் லோகேசுக்கும் சதாசிவம் மற்றும் அவரது பெற்றோர் கண்ணீர்மல்க நன்றி தெரிவித்தனர்.

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
×Close
×Close