சென்னை பிராட்வே பகுதியில் உள்ள கட்டிடம் இடிந்து விபத்துக்கு உள்ளான சம்பவத்தில் கட்டிடத்தின் உரிமையாளர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை பிராட்வே அரண்மனைக்காரன் தெருவில் உள்ள பழமையான நான்கு மாடி கட்டிடம் இன்று புதுப்பிக்கும் பணியின்போது இடிந்து விழுந்தது. இந்த கட்டிட விபத்து குறித்து தகவலறிந்த போலீசார், தீயணைப்பு, தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த கட்டிட விபத்தில் தொழிலாளர்கள் சிலர் சிக்கி இருக்கலாம் என்று முதற்கட்ட தகவல் வெளியானது.
இதையும் படியுங்கள்: ‘மக்கள் அனைத்தையும் நம்புகின்றனர், அரசு விவேகம் காட்ட வேண்டும்’; சென்னை உயர் நீதிமன்றம்
இந்தநிலையில் கட்டிட விபத்து நடந்த இடத்திற்கு நேரில் சென்று மீட்புப்பணிகளை அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர்பாபு, சென்னை மேயர் பிரியா உள்ளிட்டோர் பார்வையிட்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே.என்.நேரு, கட்டிட விபத்தில் தொழிலாளர்கள் யாரும் சிக்கவில்லை என்று தெரிவித்தார்.
இந்தநிலையில், கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில், ராஜசேகர், பார்த்திபன், அரசு ஆகிய மூவருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது. முகமது ஆரிப் என்பவருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, காயமடைந்தவர்களிடம் இருந்து புகாரைப் பெற்றுக் கொண்ட காவல்துறையினர், கட்டிட விபத்து தொடர்பாக, சூளை பகுதியை சேர்ந்த கட்டிடத்தின் உரிமையாளர் பரத் சந்திரன் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். பரத் சந்திரன் மீது அஜாக்கிரதையாக செயல்படுதல், கட்டிடம் மறுசீரமைக்கும்போது இடிந்து உயிருக்கு ஆபத்து ஏற்படுத்துதல், பொதுச்சொத்தை சேதப்படுத்துதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil