Chennai caa protest 7th day highlights vannarapettai
குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை கண்டித்து வண்ணாரப்பேட்டை ரவுண்டானா அருகில் கடந்த 14-ம் தேதி முதல் முஸ்லிம்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
Advertisment
போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தியதை கண்டித்தும், தமிழக சட்டசபையில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியும் முஸ்லிம்கள் அங்கு தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.
வண்ணாரப்பேட்டையில் இன்று 7-வது நாளாக தொடர் போராட்டம் நீடித்து வருகிறது. இதில் ஏராளமான முஸ்லிம் பெண்கள் போராட்டத்தில் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.
Advertisment
Advertisements
மத்திய அரசு குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறும் வரை போராட்டம் நீடிக்கும் என்று போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் தெரிவித்தனர்.
7-வது நாளாக முஸ்லிம்கள் போராட்டம் நீடித்து வருவதால் அப்பகுதியில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.
இன்று மாலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தலைமை குழு உறுப்பினர் பிருந்தாகரத் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள முஸ்லிம்களை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவிக்க உள்ளார்.
இதே போல் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவிக்க உள்ளார்.
போராட்டம் குறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் பெண்கள் கூறியதாவது,
முஸ்லிம் மக்களுக்கும், சிறுபான்மை மக்களுக்கும் எதிராக குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்து உள்ளது. இதனால் முஸ்லிம்கள் உரிமைகள் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. எனவே மத்திய அரசு குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும். தமிழக அரசு குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். முஸ்லிம், சிறுபான்மை மக்களை பாதுகாக்க வேண்டும்" என்றனர்.