மாநில அரசு CAA மற்றும் NPR க்கு எதிராக தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும், CAA ஐ திரும்பப் பெற வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்னெடுத்து சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியில் மூன்றாவது நாளாக போராட்டாம் நடந்து வருகிறது. டெல்லி ஷாகீன் பாக்கில் நடக்கும் போராட்டங்களை போன்றே சென்னை வண்ணாரப்பேட்டை நடக்கும் போராட்டத்தை பெண்கள் முன்னெடுத்து நடத்தி வருகின்றனர்.
3வது நாளாக தொடரும் போராட்டம்:
கடந்த பிப்ரவரி 14ம் தேதி மாலை 5 மணியளவில் சென்னை வன்னாராப்பேட்டையில் உள்ள தெருக்களிலும், தத்தம் வீடுகளுக்கு முன்பாக சிஏஏ,என்பிஆர்,என்ஆர்சி போன்றவைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் மற்றும் முதியவர்கள் அமைதி போராட்டத்தில் இறங்கினர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சென்னை காவல் துறை கலைந்து செல்லுமாறு அறிவுறித்தியது. காவல்துறையின் கோரிக்கையை ஏற்க மறுத்த பொது மக்கள் தங்கள் போராட்டம் பிரதான சாலைக்குக் கூட வரவில்லை , ஆகவே அமைதி போராட்டத்தை தொடர்ந்தனர். இதனால், பதட்டம் உருவாகியது. ஒரு கட்டத்தில் காவல்துறை வலுகட்டாயமாக மக்களை அப்புறப்படுத்தியதோடு மட்டுமல்லாமல் 50க்கும் அதிகமான மக்களை சிறைபிடித்தது.
இதனால், வண்ணாரப்பேட்டையில் ஒரு அசாதாரன சூழல் உருவாகியது. இரவு 10 மணியளவில் சிறை பிடித்தவர்களை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என்ற கோரிக்கை ஒலிக்க ஆரம்பித்தது. போராட்டக்காரக்ளின் எண்ணிக்கையும் அதிகமானது. அண்ணா சாலை, வண்ணாரபேட்டை, கிழக்கு கடற்கரை சாலை போன்ற இடங்களில் காவல்துறையினரின் செயலைக் கண்டித்து இர்வு முழுவதும் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் கண்டனங்களைத் தெரிவித்தனர்.
அடுத்த நாள் வண்ணாரப்பேட்டையில் ஒலித்த சத்தம் தமிழகம் முழுக்க பரவியது. மதுரை, ராமநாதபுரம், திருநெல்வேலி, திருவள்ளூர், நீலகிரி போன்ற மாவட்டங்களிலும் பொது மக்கள் தங்களது கண்டனங்களை பதிவு செய்தனர். தமிழகத்தில் இன்றும் பல இடங்களில் சிஏஏ எதிர்ப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. சட்டம் ஒழுங்கை பாதுகாக்க அதிகளவில் போலிஸாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.
வண்ணாரப் பேட்டையில் ஒரு ஷாகீன் பாக் :
புதுடெல்லியில் உள்ள கலிந்தி குன்ஜ்-ஷகீன் பக் சாலை பகுதி நாட்டின் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான களமாக மாறி ஒரு மாதத்துக்கும் மேல் ஆகிறது. ஷாகீன் பக் போராட்டக்காரர்கள் இஸ்லாமியர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். ஆனால் அது முற்றிலும் தவறானது. இந்திய குடியரசு தின விழாவின் போது இந்திய தேசியக் கோடியை ரோகித் வேமுலாவின் தாயார் தான் ஏற்றினர் என்பது குறிபிடத்தக்கது. போராட்டக்களத்தில் அவர்கள் குரானில் இருந்தும், பைபிளில் இருந்தும் கருத்துகளை படிக்கிறார்கள். ஹோமம் நடத்துகின்றனர். சீக்கிய வழிபாடு நடத்துகின்றனர்.சுருங்க சொன்னால் ஷாகீன் பக் போராட்டம் ஒரு மத நல்லிணக்க போரட்டமாக மாறியுள்ளது.
சென்னை வண்ணாரப்பேட்டையில் தற்போது நடந்து வரும் சிஏஏ எதிர்ப்பு ஷாகீன் பாக் அளவு தேசிய முக்கியத்துவமாக மாறும் என்று அரசியல் வல்லுனர்கள் யூகிக்கின்றனர். பெண்கள் அதிகளவில் கலந்து கொள்வதாலும், போராட்டத்தின் தன்மையை தீர்மானிக்கும் அதிகாரம் அவர்களிடம் இருப்பதாலும் இந்த போராட்டம் சிஏஏ எதிர்ப்பில் ஒரு முக்கிய இடத்தை அடையும் என்று நம்பப்படுகிறது.
இதற்காக, சென்னை வண்ணாரப்பேட்டையில் போராடும் மக்கள் குறிப்பாக பெண்கள் சிறப்பு யுக்திகளை தயாரித்து வருகின்றனர். குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் வசதியாக ஷிபிட் முறையில் போராட்ட களத்திற்கு வருகை புரிவது பற்றியும் யோசித்து வருகின்றனர்.
குறைத்து மதிப்பிட வேண்டாம் : த.லெனின்
சென்னை வண்ணாரப்பேட்டை போராட்டத்தை குறைத்து மதிப்பிட வேண்டாம் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஊடகத் தொடர்பாளர் த.லெனின் தெரிவித்துள்ளார். ஒரு பொறுப்பற்ற சட்டம் தங்களை கட்டுபடுத்தக் கூடாது என்பதில் தமிழக மக்கள் மிக தெளிவாக இருக்கின்றனர். “சென்னையின் ‘ஷாகின் பாக்’ வண்ணாரப்பேட்டை ஒரு குறிப்பிட்ட மதம் சார்ந்தோ, கட்சி சார்ந்தோ முன்னெடுக்க வில்லை. இது இயல்பான ஒரு போராட்டம். இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை” என்று தெரிவித்துள்ளார்.
6 சிறப்பு அதிகாரிகள் நியமனம் : குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டங்களை கண்காணிக்க சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி மேற்பார்வையில் ஆறு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு கூடுதல் டி.ஜி.பி. அபய்க்குமார் சிங் மதுரை மாநகர் மற்றும் மதுரை சரகத்திற்கும், கூடுதல் டி.ஜி.பி. மகேஷ்குமார் அகர்வால் திருநெல்வேலி மாநகர் மற்றும் நெல்லை சரகத்திற்கும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதேபோல் பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜி. முருகன் நெல்லை சரகத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.