சென்னையில் எம்.ஜி.ஆர் சென்னை சென்ட்ரல் நிலையத்தில், கடந்த பிப்ரவரி 26 அன்று இடைநிறுத்தப்பட்ட ஆடியோ அறிவிப்புகளை தெற்கு ரயில்வே திங்கள்கிழமை மீட்டெடுத்தது.
ரயில் தகவல் மற்றும் விளம்பரங்கள் குறித்த அறிவிப்புகள் அதிக சத்தத்தை ஏற்படுத்தியதால், பயணிகளிடம் இருந்து பல புகார்கள் வந்தது.
ஆகையால், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், ரயில் நிலையம் அமைதியாக இருக்க எடுக்கப்பட்ட இந்த முடிவு, கடுமையான விமர்சனத்தை ஈர்த்தது.
பலர் இந்த அறிவிப்புகளை மீட்டெடுக்க கோரி ரயில்வேக்கு மனு அளித்தன. இந்த கோரிக்கையை முன்வைத்து மாற்றுத்திறனாளிகள் குழு ஒன்று சென்ட்ரல் ரயில் நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் விளைவாக, ஆடியோ மற்றும் காட்சி அமைப்புகள் நெறிப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் அமைதியான ரயில் நிலைய சோதனை வாபஸ் பெறப்பட்டது என்று ரயில்வேயின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“ஆடியோவை முடக்கும் முடிவு சோதனை அடிப்படையில் மட்டுமே எடுக்கப்பட்டது. பயணிகளின் கோரிக்கையைத் தொடர்ந்து நாங்கள் அறிவிப்புகளை மீண்டும் நிலைநிறுத்தியுள்ளோம்,” என்று ரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கடந்த சில நாட்களாக பாட்னா மற்றும் நாட்டின் பிற பகுதிகளுக்குச் சென்ற பயணிகளிடம் இருந்து ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ள முன்னணி ரயில்வே ஊழியர்கள் ஏராளமான கேள்விகளைப் பெற்றதாக வட்டாரங்கள் தெரிவித்தன.
மறுசீரமைப்பிற்குப் பிறகு, அறிவிப்பு நெறிப்படுத்தப்பட்டது மற்றும் ரயில்களின் வருகை மற்றும் புறப்பாடு முந்தையதைப் போல் மீண்டும் மீண்டும் அறிவிக்கப்படவில்லை என்று வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil