தெற்கு ரயில்வேயின் முகமாக தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் அமைந்துள்ள டாக்டர் எம்.ஜி.ஆர் சென்னை சென்ட்ரல் (எஸ்.ஆர்) ரயில் நிலையம் உள்ளது. இங்கு தினசரி லட்சக்கணக்கான பயணிகள் வந்து செல்கிறார்கள். இதனால், நாட்டின் முன்னணி ரயில் நிலையமாகவும் சென்னை சென்ட்ரல் அறியப்படுகிறது.
இந்நிலையில், நாட்டிலேயே அதிக வருவாய் ஈட்டும் ரயில் நிலையங்களில் மூன்றாவது ரயில் நிலையமாக சென்னை சென்ட்ரல் உருவெடுத்துள்ளது. அதாவது, கடந்த நிதியாண்டில் மட்டும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் ரூ. 1,299 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.
ரயில்வே வாரியம், ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நாடு முழுதும் உள்ள ரயில் நிலையங்களில் தரவரிசை பட்டியலை வெளியிட்டு வருகிறது. அதில், ரயில் நிலையங்களில் பயணியர் எண்ணிக்கை மற்றும் வருவாய் உள்ளிட்ட விபரங்கள் இடம் பெறும். இந்நிலையில், கடந்த நிதியாண்டில், ரயில் நிலையங்களுக்கான தரவரிசை பட்டியலை ரயில்வே வாரியம் சமீபத்தில் வெளியிட்டது.
/indian-express-tamil/media/post_attachments/cdaa39b6-011.jpg)
இந்த பட்டியலில், 3,337 கோடி ரூபாய் வருவாய் ஈட்டி புதுடெல்லி ரயில் நிலையம் முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில், 1,692 கோடி ரூபாய் வருவாய் ஈட்டி மேற்கு வங்க ஹவுரா ரயில் நிலையம் உள்ளது. 1,299 கோடி ரூபாய் ஈட்டி, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் 2023-24 நிதியாண்டில், மொத்தமாக ரூ.1,299.31 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. அதில், முன்பதிவு செய்யப்படாத பயணிகளிடமிருந்து ரூ. 131.73 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.
மேலும், சென்னை சென்ட்ரல் 3.059 கோடி பயணிகளை பதிவு செய்துள்ளது. இதில் கடந்த ஆண்டு முன்பதிவு செய்யப்படாத பயணிகள் 1.53 கோடி பேர் ஆவர். இதன் மூலம், ரூ. 1,692.39 கோடி வருவாய் ஈட்டிய ஹவுரா (ஈஸ்டர் ரயில்வே) மற்றும் ரூ. 3,337.66 கோடியுடன் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்த புது டெல்லி நிலையம் (வடக்கு ரயில்வே) ஆகியவற்றைப் பின்னுக்குத் தள்ளியுள்ளது.
இதேபோல், தமிழகத்தில் உள்ள 541 ரயில் நிலையங்களின் பயணியர் எண்ணிக்கை மற்றும் வருவாய் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில், சென்ட்ரல் ரயில் நிலையத்தை தொடர்ந்து, எழும்பூர், தாம்பரம், கோவை, மதுரை என, முறையே இடம் பெற்றுள்ளன.
எழும்பூர் ரூ.600.28 கோடியுடன் பயணிகளின் மூலம் இரண்டாவது அதிகபட்ச வருவாயைப் பெற்றுள்ளது. தாம்பரம் ரூ.246.77 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. சேலம் கோட்டத்தில் உள்ள ரயில் நிலையமான கோயம்புத்தூர் ரயில் நிலையம், பயணிகள் மூலம் ரூ.345.32 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. எழும்பூரில் 1.95 கோடி பயணித்த நிலையில், தாம்பரம் 3.27 கோடி பயணிகளை பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“