சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் புற்றுநோய் பிரிவு மருத்துவர் பாலாஜி கத்திக்குத்து சம்பவம் தொடர்பாக இருவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றன.
விசாரணையில் தனது தாய்க்கு முறையாக சிகிச்சை அளிக்காததால் விக்னேஷ் என்ற இளைஞர் ஆத்திரத்தில் நண்பர்களுடன் சேர்ந்து செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.
விரிவான விசாரணைக்கு முதல்வர் ஆணை
இந்நிலையில், சென்னை கிண்டியில் அரசு மருத்துவர் கத்திக்குத்து சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணைக்கு ஆணையிட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், "கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் திரு. பாலாஜி அவர்களை நோயாளியின் குடும்ப உறுப்பினர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது.
இக்கொடுஞ்செயலில் ஈடுபட்ட நபர் உடனடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். மருத்துவர் திரு. பாலாஜி அவர்களுக்குத் தேவையான அனைத்து சிகிச்சைகளை அளித்திடவும், இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்திடவும் ஆணையிட்டுள்ளேன்.
அரசு மருத்துவமனைகளை நாடி வரும் நோயாளிகளுக்கு நேரம் - காலம் பார்க்காமல் உரிய சிகிச்சை அளிப்பதில் நமது அரசு மருத்துவர்களின் தன்னலமற்ற பணி அளப்பரியது. இப்பணியின்போது அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்தல் நம் அனைவரின் கடமையாகும்.
இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நிகழாமல் தடுத்திடுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ளும்." என்று அவர் பதிவிட்டுள்ளார்.
மருத்துவர் பாலாஜியை நேரில் சந்தித்த துணை முதலமைச்சர்
இந்நிலையில் அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டு சிகிச்சையில் உள்ள மருத்துவர் பாலாஜியை துணை முதலமைச்சர் நேரில் சந்தித்து அவரது நிலை குறித்து கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்த ஆணையிட்டுள்ளதாகவும் கத்தியால் குத்திய விக்னேஷ் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
மேலும் மருத்துவர் பாலாஜிக்கு சிகிச்சை அளிக்க அனைத்து ஏற்பாடுகள் தயார் செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் உள்ளதாகவும் கூறினார்.
தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவர்கள் அனைவர் மீதும் அக்கறை உள்ளதாகவும் அவர்களது பாதுகாப்புக்கு உரிய பாதுகாப்பை முழுமையாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“