சென்னையில் நேற்று 7 இடங்களில் அடுத்தடுத்து செயின் பறிப்பு சம்பவங்கள் நடைபெற்றன. ஈஞ்சம்பாக்கம் பெத்தேல்நகர், அடையாறு சாஸ்திரி நகர், அடையாறு இந்திரா நகர், கிண்டி எம்ஆர்சி உள்ளிட்ட பகுதிகளில் இந்த சம்பவங்கள் நடைபெற்றன. இந்த தொடர் செயின் பறிப்பு சம்பவங்களின் மூளையாக செயல்பட்ட கொள்ளையன் ஜாபர் குலாம் ஹூசைன், போலீஸ் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
என்கவுன்டர் ஏன்? - காவல் ஆணையர் அருண் விளக்கம்
காலை 4.15-க்கு விமானத்தில் சென்னை வந்து, 6 மணிக்கு செயின் பறிப்பில் ஈடுபட்டு, 10 மணிக்கு விமானத்தில் தப்ப முயற்சி செய்துள்ளனர். இந்த கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட வடமாநில கொள்ளையர்கள் விமானங்கள் மூலம் தப்பிச் செல்ல முயன்றனர். ஆனால் சென்னை போலீசார் அதிவேகமாக செயல்பட்டு விமான நிலையத்துக்குள் சென்று வடமாநில கொள்ளையர்களை கைது செய்தனர். இதேபோல ரயில் மூலம் தப்பிச் செல்ல மற்றொரு கொள்ளையனை ஆந்திரா அருகே ஓடும் ரயிலில் மடக்கியும் போலீசார் கைது செய்தனர்.
சென்னையில் செயின் பறிப்பில் ஈடுபட்ட 3 பேரும் இரானி கொள்ளையர்கள். மக்களின் கவனத்தை திசைத் திருப்பி நகை பறிப்பில் ஈடுபடுவதே இரானி கொள்ளை. இந்த சம்பவத்தில் உள்ளூர் நபர்களுக்குத் தொடர்பு இல்லை. குற்றம் நடந்த 3 மணி நேரத்தில் 100-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளின்படி கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டனர். கொள்ளையர்கள் பறித்துச் சென்ற செயின்கள் அனைத்தும் மீட்கப்பட்டுள்ளன. பிடிபட்ட கொள்ளையர்கள் மீது நாடு முழுவதும் 50க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.
சென்னையில் நேற்று நிகழ்ந்த செயின் பறிப்பு சம்பவங்கள் அனைத்திலும் ஒரே நபர்தான் இரு சக்கரவாகனத்தில் அமர்ந்து பெண்களிடம் செயினை பறிப்பது தெரியவந்தது. செயின் பறிப்பு சம்பவங்களில் கில்லாடியான ஜாபர்தான் அந்த நபர் என்பதையும் போலீசார் உறுதி செய்தனர். மகாராஷ்டிரா மாநில போலீசாராலும் தேடப்பட்ட ஜாபர் மீது 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. தேடப்படும் குற்றவாளிகளில் டாப் 3-ல் குற்றவாளி ஜாபர் இருந்தார்.
இதனையடுத்து, ஜாபரை சுற்றிவளைத்த போலீசார் கைது செய்து பதுக்கி வைத்த நகைகளை மீட்பதற்காக அழைத்துச் சென்றனர். அப்போது தரமணி ரயில் நிலையம் அருகே, போலீஸ் பிடியில் இருந்து ஜாபர் தப்ப முயன்றார். இதனால் திருவான்மியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் புகாரி, ஜாபர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார். இதில் ஜாபர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் ராயப்பேட்டை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ஜாபர் உயிரிழந்தார்.
பறித்த நகைகளை 3 கொள்ளையர்கள் தனித்தனியாக எடுத்துச் சென்றுள்ளனர். கொள்ளையடிக்கப்பட்ட 26 சவரன் கொண்ட 6 செயின்கள் மீட்கப்பட்டுள்ளன. உடைகளை மாற்றியுள்ளனர், ஆனால் ஷூக்களை மாற்றவில்லை, அதை வைத்து கண்டு பிடித்தோம். குற்றவாளிகள் பயன்படுத்திய பைக், கர்நாடக மாநிலத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்ய கைதானவர்களை அழைத்துச் சென்றபோது என்கவுன்ட்டர் நடந்துள்ளது. சுட்டுக்கொல்லப்பட்ட குலாம் 2 ரவுன்ட் சுட்டது, போலீஸ் வாகனத்தில் பட்டது. தற்காப்புக்காக போலீஸ் ஒரு முறை சுட்டனர். தற்காப்பு நடவடிக்கையாக என்கவுன்டர் நடந்தது.
ஆந்திர மாநிலம் ஓங்கோலில் பிடிபட்ட குற்றவாளியை போலீஸ் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். சென்னையில் ஏற்கனவே கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார்களா என விசாரணை நடந்து வருகிறது. கடந்தாண்டு நடந்த 34 செயின் பறிப்பு சம்பவத்தில் 33-ல் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.