/indian-express-tamil/media/media_files/2025/04/30/lOnqG1PMWddibDYH21DH.jpg)
MK Stalin
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.80-க்கும், டீசல் 92.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு (Compressed Natural Gas) ஒரு கிலோ ரூ. 91.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.
-
Jul 01, 2025 11:33 IST
‘வெற்றி நிச்சயம்' என்ற புதிய திட்டத்தை தொடங்கி வைத்தார் மு.க.ஸ்டாலின்.
நான் முதல்வன் திட்ட த்தின் மூலம் ‘வெற்றி நிச்சயம்' என்ற புதிய திட்டத்தை தொடங்கி வைத்தார் மு.க.ஸ்டாலின்.
தமிழ்நாட்டில் 18- 35 வயதுள்ள படித்த வேலையில்லாத இளைஞர்கள், பள்ளி அல்லது கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்தியவர்கள், 10, 12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெறாதவர்கள் பயன்பெறும் வகையில் பயிற்சி அளிக்க திட்டம்
-
Jul 01, 2025 09:48 IST
கர்நாடகாவில் இருமொழிக் கொள்கைதான்- சித்தராமையா
கர்நாடகாவில் இருமொழிக் கொள்கைதான் நடைமுறையில் உள்ளது என கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். கன்னடம், ஆங்கிலம் என்ற இருமொழிக் கொள்கையைதான் கர்நாடக பின்பற்றுகிறது என அவர் தெரிவித்தார்.
-
Jul 01, 2025 09:17 IST
தட்கல் டிக்கெட் முன்பதிவுக்கு இன்று முதல் ஆதார் கட்டாயம்
ஜூலை 1-ந் தேதி முதல் ஆதார் ஓ.டி.பி. அடிப்படையில் மட்டுமே தட்கல் முன்பதிவு டிக்கெட்டுகளை பெற முடியும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்து இருந்தது. ஐ.ஆர்.சி.டி.சி. இணையதள கணக்குகளை வைத்துள்ள பயனாளர்கள் தங்களது ஆதாரை இணைக்க ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தியது. இந்நிலையில், ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் மற்றும் செயலியில், ஆதார் உறுதிப்படுத்தப்பட்டவர்கள் மட்டுமே இன்று முதல் இருந்து 'தட்கல்' டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும்.
-
Jul 01, 2025 09:11 IST
”குறுந்தொழில் நுகர்வோர்களுக்கு மின்கட்டண உயர்வு இல்லை”
தமிழ்நாட்டில் தொழில் நிறுவனங்கள், ஆலைகள், ஐடி, நிறுவனங்களுக்கான மின்கட்டணம் இன்று முதல் ஒரு கிலோ வாட் ரூ.7.25லிருந்து ரூ.7.50 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. விவசாயம், கைதறி, விசைத்தறி, வழிபாட்டு தலங்கள், தாழ்வழுத்த ஆலைக்கு மின்சார மானியம் தொடரும். வீட்டு மின் இணைப்புகள், குடிசை மற்றும் குறுந்தொழில் நுகர்வோர்களுக்கு மின்கட்டண உயர்வு இல்லை என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
-
Jul 01, 2025 09:10 IST
அகிலேஷ் யாதவுக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து
உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். வி.பி.சிங் பிறந்த மண்ணில் சமுக நீதி விளக்கை முன்னோக்கி எடுத்துச் செல்ல வாழ்த்துக்கள் என தனது சமுக வலைதள பக்கத்தில் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
-
Jul 01, 2025 08:59 IST
ஆம்ஸ்ட்ராங் முதலாம் ஆண்டு நினைவு தினம்: வாகன தணிக்கை
ஜூலை 5-ம் தேதி ஆம்ஸ்ட்ராங் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர். சென்னை பெரம்பூரை சுற்றியுள்ள பகுதிகளில் 5 இடங்களில் 24 மணி நேரமும் வாகன தணிக்கை நடைபெறுகிறது. பெரம்பூர் பாலம் அருகே மின் கண்ட்ரோல் ரூம் அமைத்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். 8 இடங்களில் ஒரு உதவி ஆய்வாளர், 2 காவலர்கள் நின்று பாதுகாபு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
-
Jul 01, 2025 08:58 IST
தமிழ்நாட்டில் மின்கட்டண உயர்வு இன்று முதல் அமல்
தமிழ்நாட்டில் தொழில் நிறுவனங்கள், ஆலைகள், ஐடி, நிறுவனங்களுக்கான மின்கட்டணம் இன்று முதல் ஒரு கிலோ வாட் ரூ.7.25லிருந்து ரூ.7.50 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. விவசாயம், கைதறி, விசைத்தறி, வழிபாட்டு தலங்கள், தாழ்வழுத்த ஆலைக்கு மின்சார மானியம் தொடரும். வீட்டு மின் இணைப்புகள், குடிசை மற்றும் குறுந்தொழில் நுகர்வோர்களுக்கு மின்கட்டண உயர்வு இல்லை என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
-
Jul 01, 2025 08:38 IST
உணவு டெலிவரிபாய் கொலை வழக்கில் ரவுடி சரவணன் கைது
சென்னை அசோக் நகரில் உணவு டெலிவரி பாய் கலையரசன் கொலை வழக்கில், ரவுடி சரவணன் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இவர் மீது மொத்தம் 8 வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் மேலாளராக இருந்த சங்கரராமன் கொலை வழக்கில் தொடர்புடைய கே.கே.நகர் கதிரவனை கொன்ற வழக்கில் இவர் தொடர்புடையவர் எனத் தெரிகிறது.
-
Jul 01, 2025 08:34 IST
”மாற்றுத் திறனாளிகள் நியமன பதவிக்கு விண்ணப்பிக்கலாம்”
தமிழ்நாடு நகர்புர உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் 1998, (தமிழ்நாடு சட்டம். 9/1999) தமிழ்நாடு சட்டம் 30/2025 –ன் மூலம் மேற்கொள்ளப்பட்ட திருத்தம், பிரிவு 37(1) (i-a) ன் படி மாற்றுத்திறனாளி நபர்களிடமிருந்து பேரூராட்சி/ நகராட்சி/மாநகராட்சி மன்றத்திற்கு உறுப்பினராக நியமனம் செய்வதற்கான விண்ணப்பப் படிவங்கள் வரவேற்கப்படுகின்றன. பெருநகர சென்னை மாநகராட்சி மாமன்றத்திற்கு https://chennaicorporation.gov.in என்ற இணையதள முகவரியிலும், பிற மாநகராட்சி/நகராட்சி மன்றத்திற்கு https://tnurbantree.tn.gov.in/whatsnew என்ற இணையதள முகவரியிலும், பேரூராட்சி மன்றத்திற்கு https://tn.gov.in/dtp அல்லது https://dtp.tn.gov.in என்ற இணையதள முகவரியிலும் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் 17-ம் தேதி வரை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
-
Jul 01, 2025 08:01 IST
அரசுப் பள்ளிகளில் ‘வாட்டா் பெல்’ திட்டம் இன்று முதல் அமல்
நீா்ச்சத்து குறைபாட்டை போக்கும் பொருட்டு, மாணவா்கள் தினமும் மூன்று முறை தண்ணீா் அருந்தும் வகையில் ‘வாட்டா் பெல்’ திட்டம் தமிழகம் முழுவதும் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் திங்கள்கிழமை (ஜூன்30)முதல் அமலுக்கு வந்தது. இந்தத் திட்டத்தின்படி, அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை 11 மணி, மதியம் 1 மணி, பிற்பகல் 3 மணிக்கு வாட்டா் பெல்’அடித்து மாணவா்களை தண்ணீா் அருந்த அறிவுறுத்த வேண்டும். இதற்காக வகுப்பறைகளை விட்டு மாணவா்கள் வெளியில் செல்லாமல் இருக்கும் இடத்திலேயே தண்ணீா் அருந்த ஏற்பாடு செய்ய வேண்டும். மாணவா்கள் தண்ணீா் அருந்துவதற்கு 5 நிமிஷங்கள் ஒதுக்கச் செய்ய வேண்டும்.
-
Jul 01, 2025 07:56 IST
ரசாயன ஆலை விபத்து - பலி எண்ணிக்கை 34ஆக அதிகரிப்பு
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் ரசாயன ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 34ஆக உயிரிழந்துள்ளது. மேலும், 30-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
-
Jul 01, 2025 07:39 IST
கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத் தொகை - அரசாணை
2024-2025 அரவைப் பருவத்திற்கு சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு பதிவு செய்து வழங்கிய விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத் தொகை வழங்குவதற்காக ரூ.297 கோடி வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ‘கரும்புக்கு சிறப்பு ஊக்கத் தொகையாக டன் ஒன்றுக்கு ரூ.349 வழங்க ரூ.297 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சிறப்பு ஊக்கத்தொகையால் சுமார் 1.30 லட்சம் கரும்பு விவசாயிகள் பயன் பெறுவர் என அமைச்சர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
-
Jul 01, 2025 07:37 IST
சென்னையில் இன்று மின் தடை ஏற்படும் இடங்கள்
சென்னையில் 01.07.2025 அன்று காலை 9 முதல் மதியம் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும். தாம்பரம் செம்பாக்கம் நூத்தஞ்சேரி மெயின் ரோடு, மாமூர்த்தி அம்மன் கோயில் தெரு, ஜோதி நகர், மாணிக்கம் நகர், பாலா கார்டன், ஜாய் நகர், ராஜ்பாரீஸ் ஆதித்யா நகர், நூத்தன் செரி மாம்பாக்கம் மெயின் ரோடு, சுவாமிநாதபுரம், வாதாபி நகர் ,சபாபதி நகர், வேணுகோபால்சாமி நகர், மாருதி நகர், கிருஷ்ணா தெரு, யமுனா தெரு, கோமாதி தெரு, வைகை தெரு, வாசுகி தெரு, விவேகானந்தன் தெரு, நேதாஜி தெரு, ஐயப்பா நகர் 1 முதல் 7வது தெரு, இபி காலனி, வெங்கடாத்திரி நகர், பாலாஜி நகர், எஎல்எஸ் பசுமை நிலம், பெரியார் நகர், லட்சுமி நகர், கொம்மி அம்மன் நகர், கக்கன் தெரு ஆகிய இடங்கள் ஆகும்.
-
Jul 01, 2025 07:28 IST
இளைஞர் மரணம்: கைதான 5 போலீசாருக்கு 15 நாள் காவல்
திருப்புவனம் இளைஞர் மரண வழக்கில் கைதான 5 போலீசாரையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி வெங்கடேஷ் பிரசாத் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன்படி பிரபு, ஆனந்த், கண்ணன், ராஜா, சங்கரமணிகண்டன் ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டனர். மரண வழக்கு தொடர்பாக, அதிகாலை 4 மணி வரை ஆவணங்கள் தயார் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் 5 பேரையும் வேனில் ஏற்றி, திருப்புவனம் மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி வெங்கடேஷ் பிரசாத் முன் போலீசார் ஆஜர் செய்தனர். இதனையத்தொடர்ந்து 5 போலீசாரையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்
-
Jul 01, 2025 07:23 IST
6 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் 6 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கன்னியாகுமரி, நீலகிரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Jul 01, 2025 07:11 IST
நாடு முழுவதும் ரயில் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது
500 கிலோ மீட்டருக்கு மேலான தூர பயணங்களுக்கு ரயில் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. புறநகர் மின்சார ரெயில்கள் மற்றும் மாதாந்திர சீசன் டிக்கெட்டுகளுக்கு எவ்வித மாற்றமும் இல்லை. முன்பதிவில்லா சாதாரண பெட்டிகளுக்கு 500 கிலோ மீட்டர் வரை கட்டண உயர்வு இல்லை. 501 கிலோ மீட்டரில் இருந்து 1,500 கிலோ மீட்டர் வரை ரூ.5-ம், 1,501 கிலோ மீட்டரில் இருந்து 2,500 கிலோ மீட்டர் வரையில் ரூ.10-ம், 2,501 கிலோ மீட்டரில் இருந்து 3,000 கிலோ மீட்டர் வரையில் ரூ.15-ம் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. படுக்கை வசதி கொண்ட பெட்டிகளுக்கும், முதல் வகுப்பு பெட்டிகளுக்கும் கிலோ மீட்டருக்கு ½ பைசா வீதம் உயர்த்தப்பட்டுள்ளது.
-
Jul 01, 2025 07:10 IST
ஒகேனக்கல் காவிரியாற்றில் 5வது நாளாக குளிக்க தடை
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 65,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துவரும் நிலையில், தீவிர பாதுகாப்பு பணிகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒகேனக்கல் காவிரி ஆற்றிலும், அருவிகளிலும் பொதுமக்கள் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வரும் நிலையில், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டடுள்ளது.
-
Jul 01, 2025 07:09 IST
ராமேஸ்வரம் மீனவர்கள் மேலும் 7 பேர் சிறைபிடிப்பு
இன்று கச்சத்தீவு அருகே நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்கள் 7 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்து உள்ளனர். ஆரோக்கியா டேனியல் என்பவரின் படகில் இருந்த மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படையினர், அந்த படகையும் பறிமுதல் செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட 7 மீனவர்களும் தலைமன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். ஏற்கனவே 8 மீனவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் 7 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்திருப்பது மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.