/indian-express-tamil/media/media_files/2025/07/03/pm-modi-addressing-ghana-parliament-2025-07-03-18-30-20.jpg)
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.80-க்கும், டீசல் 92.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு (Compressed Natural Gas) ஒரு கிலோ ரூ. 91.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.
-
Jul 03, 2025 19:33 IST
'கூலி' படத்தில் அமீர் கான் - போஸ்டரை பகிர்ந்த சன் பிக்சர்ஸ்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் 'கூலி' படத்தில் ‘Dahaa’ என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார் பாலிவுட் நடிகர் அமீர் கான். இது தொடர்பான போஸ்டரை பகிர்ந்து அறிவித்தது சன் பிக்சர்ஸ்.
-
Jul 03, 2025 19:26 IST
கேப்டன் கில் இரட்டை சதம் விளாசி மிரட்டல்
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதில் நேற்று முதல் தொடங்கி நடைபெற்று வரும் 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய கேப்டன் சுப்மன் கில் இரட்டை சதம் விளாசி அசத்தியுள்ளார்.
2வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 311 பந்துகளில் சுப்மன் கில் இரட்டை சதம் விளாசினார். டெஸ்ட் கேப்டனாக முதல் போட்டியில் சதம் விளாசியதை அடுத்து 2வது ஆட்டத்தில் இரட்டை சதம் அடித்து அசத்தியுள்ளார். சுப்மன் கில்லின் இரட்டை சதத்தால் இந்தியா முதல் இன்னிங்ஸில் 472 ரன்களுக்கு மேல் குவித்து விளையாடி வருகிறது.
-
Jul 03, 2025 19:12 IST
காசா மீது இஸ்ரேல் தாக்குதல்: 48 மணி நேரத்தில் 300 பாலஸ்தீனர்கள் உயிரிழப்பு
காசா மீது இஸ்ரேல் ராணுவம் குண்டுவீசி தாக்கியதில் கடந்த 48 மணிநேரத்தில் 300 பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர். அதிகாலையில் இருந்து இஸ்ரேல் குண்டு வீசியதிலும் துப்பாக்கியால் சுட்டதிலும் 73 பாலஸ்தீனர்களும், அமெரிக்கா ஆதரவுடன் சில அமைப்புகள் வழங்கும் உணவுப்பொருளை வாங்கச் சென்ற சிறுவர்கள் 33 பேரும் பலியாகியுள்ளனர். பள்ளியில் தங்கியிருந்த மக்கள் 16 பேரையும் நிவாரண முகாமில் இருந்த 13 பேரையும் இஸ்ரேல் கொன்றுள்ளது. காசா மருத்துவமனை இயக்குநரை குடும்பத்துடன் இஸ்ரேல் கொன்றுவிட்டதாக காசா அரசு செய்தித்துறை தகவல் தெரிவித்துள்ளது.
-
Jul 03, 2025 18:44 IST
பீகார் தேர்தலில் ஆம் ஆத்மி போட்டி: கெஜ்ரிவால் அறிவிப்பு
பீகார் சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி தனித்து போட்டி என்று அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். இந்தியா கூட்டணி என்பது மக்களவை தேர்தலுக்காக மட்டுமே என்றும் அரவிந்த் கெஜ்ரிவால் பேசினார்.
-
Jul 03, 2025 18:28 IST
இந்தியாவின் பன்முகத்தன்மை சவால் அல்ல - கானா நாட்டு நாடாளுமன்றத்தில் மோடி உரை
"இந்தியாவின் பன்முகத்தன்மை சவால் அல்ல, மாறாக அது இந்தியாவின் பலம், கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா ஒரு பெரிய மாற்றத்தைக் கண்டுள்ளது. இந்தியா மற்றும் கானாவின் வரலாறுகள் காலனித்துவ ஆட்சியின் வடுக்களைத் தாங்கி நிற்கின்றன. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு உருவாக்கப்பட்ட உலக ஒழுங்கு வேகமாக மாறி வருகிறது" என்று கானா நாட்டு நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
Jul 03, 2025 17:19 IST
பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை
டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து குறித்து அவதூறு பரப்பும் வகையில் பதஞ்சலி நிறுவனம் வெளியிட்ட விளம்பரத்தை உடனடியாக நிறுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
Jul 03, 2025 17:16 IST
தினசரி பணி நேரத்தைத் தாண்டி வேலை செய்யும் ஊழியர்களை கண்காணித்து அறிவுறுத்தும் இன்போசிஸ் நிறுவனம்
வொர்க் ஃப்ரம் ஹோமில் இருப்போர் வேலை - வாழ்க்கை சமநிலையை முதன்மைப்படுத்த வேண்டும், நீண்ட நேரம் வேலை செய்வதை தவிர்க்க வேண்டும் என இன்போசிஸ் நிறுவனம் தனது பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வாரத்தில் 5 நாட்கள் தினசரி 9.15 மணி நேரத்தைக் கடந்து வேலை செய்வோரை கவனித்து அறிவுறுத்துவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
-
Jul 03, 2025 16:58 IST
விஷம் குடித்துவிட்டு புகாரளிக்க வந்த மாணவனால் பரபரப்பு
சென்னையை அடுத்த குன்றத்தூர் காவல் நிலையத்திற்கு விஷம் குடித்துவிட்டு புகாரளிக்க வந்த மாணவனால் பரபரப்பு ஏற்பட்டது. காவல் நிலையம் உள்ளே மயங்கி விழுந்த மாணவன், குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சி.ஐ.டி. பொறியியல் கல்லூரியில் இருந்து அம்மாணவனை நீக்கியதால், விஷம் குடித்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகி உள்ளது.
-
Jul 03, 2025 16:50 IST
ஈரானில் தமிழ் மீனவர்கள் - விஜய் வசந்த் MP கோரிக்கை
வெளியுறவு துறை இணை செயலாளர் ஆனந்த் பிரகாஷ் உடன் விஜய் வசந்த் MP சந்திப்பு. ஈரான் - இஸ்ரேல் போர் பதற்றம் விலகாத சூழலில், ஈரான் நாட்டின் கிஷ் தீவில் சிக்கி தவிக்கும் குமரி மீனவர்களை பத்திரமாக மீட்டு கொண்டு வர கோரிக்கை விடுத்தார்.
-
Jul 03, 2025 16:08 IST
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு
பகுஜன் சமாஜ் கட்சி முன்னாள் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி தொடரப்பட்ட வழக்கிற்கு காவல்துறை பதில் மனு தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
Jul 03, 2025 15:41 IST
"டிரான்ஸ்பார்மர் முறைகேடு புகார் - ஒரு வாரத்தில் முடிவு"
தமிழகத்தில் 45,800 டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதலில் முறைகேடு நடந்ததாக செந்தில் பாலாஜி உள்ளிட்டோருக்கு எதிரான புகார். வழக்குப்பதிவு செய்ய அனுமதி வழங்குவது குறித்து ஒரு வாரத்தில் முடிவெடுப்பதாக உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.
-
Jul 03, 2025 15:38 IST
போரை நிறுத்தியது யார்?
இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்த ராணுவ மட்டத்திலான பேச்சுவார்த்தையே போர் முடிவுக்கு வர காரணம். போரை தாம்தான் நிறுத்தியதாக ட்ரம்ப் கூறி வரும் நிலையில் அமெரிக்காவில் இருந்தபடியே வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம் அளித்துள்ளார்.
-
Jul 03, 2025 15:14 IST
கொடிக்கம்பம் வழக்கு: 2க்கும் மேற்பட்ட நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்ற மார்க்சிஸ்ட் கோரிக்கை
கொடிக் கம்பம் வழக்கை 2க்கும் மேற்பட்ட நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்ற மார்க்சிஸ்ட் கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் கொடிக்கம்பங்களை அகற்றுவது தொடர்பான வழக்கு குறித்து மார்க்சிஸ்ட் கோரிக்கை விடுத்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஐகோர்ட் தலைமை பதிவாளரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. பொது இடங்களில் உள்ள அனைத்து அரசியல் கட்சி கொடிக்கம்பங்களை அகற்றும் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
-
Jul 03, 2025 15:12 IST
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: இடைக்கால தடை விதிக்க சென்னை ஐகோர்ட் மறுப்பு
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்க சென்னை ஐகோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் 2024 ஜூலை 5ம் தேதி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை 27 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றக் கோரி பகுஜன் சமாஜ் கட்சி மாநில பொதுச்செயலாளர் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், வழக்கில் சம்போ செந்தில், மொட்டை கிருஷ்ணன் தலைமறைவாக உள்ளதால் சிபிஐக்கு மாற்ற கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. அரசு தரப்பில் பதில்மனு தாக்கல் செய்ய அவகாசம் கேட்ட நிலையில் காவல்துறை பதிலளிக்க ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது.
-
Jul 03, 2025 14:58 IST
தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை இயல்பை விட12% கூடுதலாக பெய்துள்ளது!!
தமிழ்நாட்டில் தென்மேற்குப் பருவமழை இன்று வரை இயல்பை விட 12% கூடுதலாக பெய்துள்ளது. இயல்பான நிலையில் 55.5 மி.மீ. மழை பொழியும் நிலையில் இன்று வரை 61.9 மி.மீ மழை பொழிந்துள்ளது. சென்னையில் தென்மேற்கு பருவமழை இன்று வரை இயல்பை விட 27% கூடுதலாக பெய்துள்ளது. சென்னையில் இயல்பாக 72.5 மி.மீ. மழை பெய்யும் நிலையில் இன்று வரை 92.4 மி.மீ மழை பொழிந்துள்ளது.
-
Jul 03, 2025 14:52 IST
சென்னை திருவொற்றியூரில் மின்சாரம் தாக்கி 17 வயது சிறுவன் பலி: போராட்டம்
சென்னை திருவொற்றியூரில் மின்சாரம் தாக்கி 17 வயது சிறுவன் உயிரிழந்தார். சாலையில் தேங்கிய மழையில் நடந்த சென்றபோது மின்சாரம் பாய்ந்து சிறுவன் பலியானான். மின்வாரிய செயற்பொறியாளரை கைது செய்ய வலியுறுத்தி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
-
Jul 03, 2025 14:32 IST
19 ஆண்டு தலைமறைவாக இருந்தவர்கள் கைது..!!
2003 சைபர் கிரைம் காவல் நிலைய வழக்கில் 19 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த 2 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை நுங்கம்பாக்கத்தில் சையது இப்ராஹிம், முகமது தாஹா யாசின் ஹமீம் ஆகியோரை போலீசார் கைதுசெய்தனர்.
-
Jul 03, 2025 14:18 IST
ஜூலை 21ல் நாடாளுமன்ற கூட்டத் தொடர் தொடங்கவுள்ள நிலையில் ஜூலை 19ல் அனைத்துக் கட்சிகள் கூட்டம்!!
ஜூலை 21ல் நாடாளுமன்ற கூட்டத் தொடர் தொடங்கவுள்ள நிலையில் ஜூலை 19ல் அனைத்துக் கட்சிகள் கூட்டம் நடைபெற உள்ளது. ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 21ம் தேதி வரை ஒருமாத காலம் நாடாளுமன்ற கூட்டத் தொடர் நடக்கிறது.
-
Jul 03, 2025 14:02 IST
அஜித்குமார் மரணம் - மனித உரிமைகள் ஆணையம் விசாரணை
இளைஞர் அஜித்குமார் உயிரிழந்த விவகாரம் குறித்து தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது. விரிவாக விசாரணை நடத்தி 6 வாரங்களில் அறிக்கை அளிக்க மனித உரிமை ஆணைய புலன் விசாரணை பிரிவு ஐ.ஜி.க்கு உத்தரவிட்டுள்ளது.
-
Jul 03, 2025 13:45 IST
‘மருத்துவர் ராமதாஸும் அன்புமணியும் இணைந்தே ஆக வேண்டும்’ - பா.ம.க எம்.எல்.ஏ அருள்
சேலம் மேற்கு தொகுதி பா.ம.க எம்.எல்.ஏ அருள்: “மருத்துவர் ராமதாஸும் அன்புமணியும் இணைந்தே ஆக வேண்டும். இது கட்டாயம் விரைவில் நிகழும்; உயிர் உள்ளவரை பா.ம.க-வில்தான் என்னுடைய பணி இருக்கும். எனக்கு ஒரே தலைவர் மருத்துவர் ராமதாஸ்தான்.” என்று கூறினார்.
-
Jul 03, 2025 13:31 IST
வழக்குப்பதிவு குறித்து ஒரு வாரத்தில் முடிவு: செந்தில் பாலாஜி விவகாரத்தில் ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது வழக்குப்பதிவு செய்ய அனுமதி வழங்குவது குறித்து ஒரு வார காலத்திற்குள் முடிவெடுக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு தரப்பு வழக்கறிஞர் சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று (ஜூலை 3, 2025) தகவல் தெரிவித்துள்ளார்.
ட்ரான்ஸ்பார்மர்கள் கொள்முதல் விவகாரத்தில் முறைகேடு நடைபெற்றதாகக் கூறி, அப்போதைய மின்சாரத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி மீது வழக்குப்பதிவு செய்ய அனுமதி கோரி புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில், தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது வழக்குப்பதிவு செய்வது குறித்த அனுமதி தொடர்பான முடிவு ஒரு வார காலத்திற்குள் எடுக்கப்பட்டு நீதிமன்றத்தில் தெரிவிக்கப்படும் என்று உறுதியளித்தார்.
-
Jul 03, 2025 12:58 IST
தமிழகத்தில் மின் வாகனங்களுக்கான சார்ஜிங் மையங்கள்; இடத்தை தெரிந்துகொள்ள மொபைல் எண் அறிவிப்பு
தமிழகத்தில் மின் வாகனங்களுக்கான சார்ஜிங் மையங்கள் எங்கெங்கு உள்ளன என்பதை 89258 72398 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொண்டு அறியலாம் என்று மின்வாரிய பசுமை எரிசக்திக் கழகம் அறிவித்துள்ளது.
-
Jul 03, 2025 12:47 IST
சென்னையில் ரூ.40 கோடியி 'தமிழ் அறிவு வளாகம்' - அடிக்கல் நாட்டினார் ஸ்டாலின்
சென்னை தரமணியில் ரூ.40 கோடியில் 'தமிழ் அறிவு வளாகம்' அமைப்பதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார். மேலும், உதவிப் பொறியாளர் பதவிக்கு தெரிவு செய்யப்பட்ட 169 பேருக்கு பணி ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர் ஸ்டாலின்.
-
Jul 03, 2025 12:42 IST
போதைப் பொருள் வழக்கு: நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஜாமின் மனு; தீர்ப்பு தள்ளி வைத்தது கோர்ட்
போதைப் பொருள் பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்ட வழக்கில் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஜாமின் கோரி மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்களை விசாரித்த சென்னை போதைப் பொருள் தடுப்பு தீர்ப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பை தள்ளி வைத்தது.
-
Jul 03, 2025 11:30 IST
நீட் மறு தேர்வு நடத்த உத்தரவிட முடியாது- சென்னை உயர்நீதிமன்றம்
நீட் மறுத்தேர்வு நடத்த உத்தரவிட்டால் 20 லட்சம் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள்.
மழையால் ஏற்பட்ட மின்சார துண்டிப்பால் மறுதேர்வு நடத்த வேண்டும் என்ற 16 மாணவர்களின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி -
Jul 03, 2025 11:27 IST
'ஓரணியில் தமிழ்நாடு' முன்னெடுப்பை தொடங்கி வைத்த மு.க.ஸ்டாலின்
Video: Sun News
#Watch | திமுக சார்பில் ஓரணியில் தமிழ்நாடு என்ற முன்னெடுப்பை சென்னை ஆழ்வார்பேட்டையில் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
— Sun News (@sunnewstamil) July 3, 2025
இன்று முதல் அரசின் சாதனைகளை அமைச்சர்கள் மக்களிடம் எடுத்து கூறவுள்ளனர். #SunNews | #CMMKStalin | #OraniyilTamilNadu | @mkstalin pic.twitter.com/RXcdNmLM6n -
Jul 03, 2025 11:26 IST
போராடிய மக்களை மிரட்டுவதா? இபிஎஸ் பிஎஸ் கண்டனம்
விருதுநகர் பட்டாசு ஆலை விபத்தில் பலியானவர்களுக்கு நிவாரணம் கோரி போராடியவர்களை எஸ்பி மிரட்டியது கண்டிக்கத்தக்கது. போராடிய மக்களை பார்த்து "ஒழுங்கா இருக்கணும்,இல்லனா வேற மாதிரி ஆகிடும்" என்று விருதுநகர் எஸ்பி மிரட்டியுள்ளார்''
மக்களை மிரட்டுவது, சட்டத்தை மீறி செயல்படுவதை காவல்துறை உடனடியாக கைவிட வேண்டும் - இபிஎஸ் -
Jul 03, 2025 11:15 IST
என் மனம் வேதனைப்படும் அளவு நடக்கின்றனர்- ராமதாஸ்
கட்சியில் இருந்து நீக்கும் எம்எல்ஏ அருளை நீக்கும் அதிகாரம் அன்புமணிக்கு இல்லை, அவரை நீக்கும் அதிகாரம் எனக்கு மட்டுமே உண்டு. கட்சியில் இருந்து யாரையும் நீக்கும் அதிகாரம் அன்புமணிக்கு இல்லை'. கட்சியின் இணை செயலாளர் பொறுப்பில் அருள் தொடர்வார்.
என் மனம் வேதனைப்படும் அளவு நடக்கின்றனர், எல்லாவற்றையும் புறந்தள்ளிவிட்டு கட்சியை நடத்தி வருகிறேன். பாமக பொதுக்குழு, செயற்குழு, நிர்வாக குழுவை கூட்டி தேர்தல் கூட்டணி குறித்து முடிவு செய்வோம்
- ராமதாஸ்
-
Jul 03, 2025 10:56 IST
ஆம்ஸ்ட்ராங் நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுப்பு
ஜூலை 5ம் தேதி பெரம்பூரில் ஆம்ஸ்ட்ராங் நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்த காவல்துறை அனுமதி மறுப்பு. பெரம்பூர் பகுதி குறுகலான இடம் என்பதால் வேறு இடத்தில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்த போலீசார் அறிவுறுத்தல்
-
Jul 03, 2025 10:53 IST
சிறுமிக்கு வன்கொடுமை: தாயை தாக்கியவர்கள் மீது வழக்கு
சென்னையில் 8 வயது சிறுமிக்கு காவல் உதவி ஆய்வாளர் பாலியல் தொல்லை அளித்த விவகாரத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுமியை பார்க்க சென்ற தாயாரை தாக்கியதாக சிறுமியின் தந்தை, பாட்டி, சித்தப்பா உள்ளிட்ட 5 பேர் மீது கீழ்பாக்கம் போலீசார் வழக்கு
-
Jul 03, 2025 10:26 IST
போதைப்பொருள் வழக்கு: 4 பேரை காவலில் எடுத்து போலீசார் விசாரணை.
சென்னை நுங்கம்பாக்கம் போதைப்பொருள் வழக்கு தொடர்பாக 4 பேரை காவலில் எடுத்து போலீசார் விசாரணை.
அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத், பிரதீப்குமார், ஜான், கெவின் ஆகிய 4 பேரையும் 6 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சென்னை எழும்பூர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
-
Jul 03, 2025 10:25 IST
சென்னையில் நடைமேடையில் மின்சாரம் பாய்ந்து சிறுவர்கள் படுகாயம்
சென்னை திருவல்லிக்கேணியில் நடைமேடையில் சாலையை கடக்க சென்ற 2 சிறுவர்கள் மின்சாரம் பாய்ந்து ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து திருவல்லிக்கேணி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
Jul 03, 2025 09:44 IST
ஆம்ஸ்ட்ராங் நினைவேந்தல் நிகழ்ச்சி- அனுமதி மறுப்பு
ஜூலை 5-ம் தேதி சென்னை பெரம்பூரில் ஆம்ஸ்ட்ராங் நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்த காவல்துறையினர் அனுமதி மறுத்துள்ளனர். பெரம்பூர் பகுதி குறுகலான இடம் என்பதால், வேறு இடத்தில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்த காவல்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
-
Jul 03, 2025 09:36 IST
"10 நாட்களில் வன்னியர் இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும்"
10 நாள்களில் வன்னியர் இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து அரசுக்கு பரிந்துரைக்க தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு வழங்கப்பட்டு, நான்காவது முறையாக நீட்டிக்கப்பட்ட காலக்கெடு வரும் 11ம் தேதியுடன் நிறைவடையவுள்ளது. வெறும் 3 மாதங்கள் மட்டுமே வழங்கப்பட்ட காலக்கெடு 30 மாதங்களாக நீட்டிக்கப்பட்டும் கூட, ஆக்கப்பூர்வமான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
-
Jul 03, 2025 09:35 IST
மின்சார பேருந்துகளில் ரூ.1000 பயண அட்டை செல்லும்
சென்னையில் புதிதாக இயக்கப்படும் மின்சார பேருந்துகளில் இதர பேருந்துகளை போல் சிங்கார சென்னை பயண அட்டை, ரூ.1000 பயண அட்டை ஆகியவற்றை பயன்படுத்தலாம் என மாநகரப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. மின்சார பேருந்துகளில் டீலக்ஸ் பேருந்துகளின் கட்டணமே வசூலிக்கப்படும் எனவும் விளக்கமளித்துள்ளது.
-
Jul 03, 2025 08:59 IST
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னையில் பிரபலமான மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் வெடிகுண்டு இருப்பதாக மின்னஞ்சல் மூலம் வியாழக்கிழமை காலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் கோயில் வளாகம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். சோதனையின் முடிவில், வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி எனத் தெரியவந்துள்ளது.
-
Jul 03, 2025 08:46 IST
திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோயில் அருகே தீ விபத்து
திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோயில் அருகே உள்ள கடையில் நேற்று நள்ளிரவு ஏற்பட்ட மின் கசிவால் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. சில நிமிடங்களிலேயே தீ மளமளவென பரவத்தொடங்கியது. மேலும் பக்தர்களுக்கு வெயிலின் தாக்கம் தெரியாமல் இருக்க அமைக்கப்பட்ட நிழற்பந்தலும் உடன் சேர்ந்து தீப்பிடித்து எரிந்தது. இதுகுறித்து தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் எரிந்துகொண்டிருந்த தீயை போராடி கட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்த தீ விபத்தால் திருப்பதி முழுவதும் பரபரப்பான சூழல் நிலவியது.
-
Jul 03, 2025 08:23 IST
ஓசூர் அருகே சட்டவிரோதமாக தங்கியிருந்த 4 பேர் கைது
ஓசூர் அருகே சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆலப்பள்ளியில் கடந்த 7 ஆண்டுகளாக தங்கி இருந்த 4 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
-
Jul 03, 2025 08:22 IST
ஒகேனக்கல் நீர்வரத்து வினாடிக்கு 20,000 கன அடியாக சரிவு
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 20,000 கன அடியாக சரிந்துள்ளது. நேற்று 28,000 கன அடியாக இருந்த நீர்வரத்து காலை முதல் குறைந்துள்ள நிலையில், ஆற்றில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் விதிக்கப்பட்ட தடை 9-வது நாளாக தொடர்கிறது.
-
Jul 03, 2025 08:09 IST
தண்டவாள பராமரிப்பு பணி - இன்று 40 புறநகர் ரயில்கள் ரத்து
கவரைப்பேட்டை-கும்மிடிப்பூண்டி தண்டவாள பராமரிப்பு பணியால் இன்று 40 புறநகர் ரயில்கள் ரத்துசெய்யப்பட்டுள்ளது. காலை 9.15 மணி முதல் பகல் 3.15 வரை பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் ரயில் சேவையில் மாற்றப்பட்டுள்ளது. சென்னை – கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை இடையே ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
-
Jul 03, 2025 08:07 IST
இளைஞர் மரணம் வழக்கில் முக்கிய சாட்சி டிஜிபிக்கு கடிதம்
திருப்புவனம் இளைஞர் மரணம் வழக்கில் முக்கிய சாட்சியாக இருக்கும் சக்தீஸ்வரன் பாதுகாப்பு கோரி தமிழக டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், ரவுடிகளுடன் தொடர்பிலுள்ள காவலர்கள், ஏற்கனவே தன்னை மிரட்டினர். வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள காவலர் ராஜா கடந்த 28-ம் தேதியே தன்னை மிரட்டினார். தனக்கும், தன்னை சார்ந்தோரின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று அதில் கோரிக்கை வைத்துள்ளார்.
-
Jul 03, 2025 07:50 IST
இந்திய தடகள வீரர்கள் 4 பேர் மீதான தடை ஓராண்டு குறைப்பு
தடகள வீரர், வீராங்கனைகள் 4 பேர் மீதான தடை ஓராண்டு குறைக்கப்பட்டுள்ளது. பூஜா ராணி, கிரண், பங்கஜ், செலிமி பிரத்யூஷாவுக்கு விதிக்கப்பட்ட 4 ஆண்டு தடை 3 ஆண்டுகளாக குறைக்கப்பட்டுள்ளது. ஊக்கமருந்து பரிசோதனையை 4 பேரும் தவிர்த்ததால் 4 பேருக்கும் தலா 4 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டிருந்தது. தடை விதிக்கப்பட்ட 20 நாட்களுக்குள் குற்றத்தை ஒப்புக் கொண்டதால் 4 பேர் மீதான தடை ஓராண்டு குறைக்கப்பட்டுள்ளது.
-
Jul 03, 2025 07:47 IST
முதியவர்களை கட்டிப்போட்டு 200 சவரன் நகை கொள்ளை
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முதியவர்களை கட்டிப்போட்டு 200 சவரன் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக புகார் அளிக்கப்பட்டதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் முதியவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
Jul 03, 2025 07:46 IST
பிரதமர் மோடிக்கு கானா நாட்டின் உயரிய விருது
கானா அதிபர் ஜான் டிரமனி மஹாமா அழைப்பின்பேரில் அந்நாட்டிற்கு சென்ற பிரதமர் மோடிக்கு கோடகா விமான நிலையத்தில் இந்தியர்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும், பிரதமர் மோடியை அதிபர் ஜான் டிரமனி மஹாமா கைக்குலுக்கி வரவேற்றார். பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் உயரிய விருதான ஆபிஸ் ஆட் தி ஆர்டர் ஆப் தி ஸ்டார் ஆப் கானா விருது அளித்து கவுரவிக்கப்பட்டது. கானா அதிபர் ஜான் தர்மனி மஹாவாவிடம் இருந்து இந்த விருதை மோடி பெற்றுக்கொண்டார்.
-
Jul 03, 2025 07:44 IST
10-ம் வகுப்பு மறுமதிப்பீட்டு முடிவுகள் இன்று வெளியாகிறது
10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதி, மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான முடிவுகள் இன்று பிற்பகல் வெளியிடப்படுகிறது. மதிப்பெண்களில் மாற்றம் உள்ள மாணவர்களின் பட்டியல்கள் www.dge.tn.gov.in என்ற இணைய தளத்தில் வெளியாகிறது. இந்த பட்டியலில் இடம் பெறாத மாணவ மாணவியரின் விடைத்தாள்களில் எந்த மதிப்பெண் மாற்றமும் இல்லை என்று தெரிவிக்கப்படுகிறது. மறு கூட்டல், மறு மதிப்பீட்டில் மதிப்பெண் மாற்றம் உள்ள மாணவர்கள் மட்டும், மேற்குறிப்பிட்ட இணைய தளத்தில் தங்களின் பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து, தங்களுக்கான திருத்தப்பட்ட மதிப்பெண் அடங்கிய தற்காலிக மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
-
Jul 03, 2025 07:44 IST
8 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் 8 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நீலகிரி மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களில் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர், திருப்பூர் மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Jul 03, 2025 07:43 IST
வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தம்
வைகை அணையில் இருந்து ராமநாதபுரம் மாவட்ட பாசன தேவைக்காக தண்ணீர் திறப்பது நிறுத்தம் செய்யப்பட்டது. வைகை அணையில் இருந்து ஏற்கனவே திண்டுக்கல், மதுரை மாவட்ட முதல் போக பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. ஆனால் வைகை அணையில் இருந்து பாசனத்திற்கு மட்டும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. கடந்த ஒரு வாரமாக கூடுதலான தண்ணீர் திறக்கப்பட்டதால் வைகை அணையின் நீர்மட்டம் 4 அடி குறைந்து 59 அடியாக சரிந்துள்ளது. அதே நேரத்தில் நீர்வரத்து கூடுதலாக உள்ளதால் வைகை அணையின் நீர்மட்டம் சீராக உயர்ந்து வருகிறது.
-
Jul 03, 2025 07:23 IST
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு- ஹால் டிக்கெட் வெளியீடு
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் தற்போது வெளியாகியுள்ளது. தேர்வர்கள் தங்களது ஹால் டிக்கெட்டுகளை டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் சென்று பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு இளநிலை உதவியாளர், விஏஓ உள்ளிட்ட பணியிடங்களுக்காக நடத்தப்படுகிறது. 3,935 பணியிடங்களுக்கு இந்த தேர்வு நடைபெறுகிறது. இந்த தேர்வு வருகிற ஜூலை 12 ஆம் தேதி நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
-
Jul 03, 2025 07:14 IST
சீமானுக்கு எதிராக டிஐஜி வருண்குமார் தொடர்ந்த வழக்கு- விசாரிக்க தடை
நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது திருச்சி சரக டிஐஜி வருண்குமார் தொடர்ந்த அவதூறு வழக்கை விசாரிக்க இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. தன்னை பற்றியும் தனது குடும்பத்தை பற்றியும் பல்வேறு நிகழ்வுகளில் அவதூறு பரப்பி வருவதாக சீமான் மீது திருச்சி சரக டிஐஜி வருண்குமார் திருச்சி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
-
Jul 03, 2025 07:13 IST
ஜூலை 21 முதல் ஆக.21 வரை நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்
நாடாளுமன்ற பருவகால கூட்டத்தொடர் ஜூலை 21 முதல் ஆகஸ்டு 21 வரை நடைபெறும் என மத்திய நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறியுள்ளார். இதற்கான ஒப்புதலை ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கியுள்ளார். சுதந்திர தின கொண்டாட்டங்களை முன்னிட்டு, ஆகஸ்டு 13 மற்றும் 14 ஆகிய 2 நாட்களில் நாடாளுமன்றத்தில் எந்த அமர்வும் இருக்காது என அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.