/indian-express-tamil/media/media_files/2025/03/31/WKkkXJrTeH5TsWhFWmup.jpg)
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ100.80-க்கும், டீசல் விலை, ரூ92.39-க்கும், கேஸ் விலை ரூ90.50-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
-
Mar 31, 2025 20:49 IST
"மௌனம் அனைத்தும் நன்மைக்கே": செங்கோட்டையன்
தனது மௌனம் அனைத்தும் நன்மைக்கே என அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பதிலளித்துள்ளார். டெல்லி பயணம் தொடர்பாக எதுவும் கூறவில்லை என்ற கேள்விக்கு செங்கோட்டையன் இவ்வாறு பதில் தெரிவித்தார்.
-
Mar 31, 2025 20:10 IST
ஸ்டாலின் மீது டி.டி.வி தினகரன் விமர்சனம்
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகள் நடைபெறாத நாட்களே இல்லை என அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் குற்றம் சாட்டியுள்ளார். குறிப்பாக, "ஸ்டாலின் அவர்கள் அறியாமை எனும் மாய உலகத்திலிருந்து விழித்தெழுந்து சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளை தடுக்க வேண்டும்" என்று அவர் தெரிவித்துள்ளார்.
-
Mar 31, 2025 19:32 IST
டெலிவரி ஊழியர்களுக்காக ஏ.சி அறைகள்
டெலிவரி ஊழியர்களுக்காக ஏ.சி வசதியுடன் கூடிய ஓய்வறைகள் அமைக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. அதன்படி, அண்ணா நகர், நுங்கம்பாக்கம், ராயப்பேட்டை, மயிலாப்பூர், தி.நகர் உள்ளிட்ட பகுதிகளில் இவற்றை அமைக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
-
Mar 31, 2025 18:41 IST
தமிழகத்தில் 40 சுங்கச்சாவடிகளில் நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது சுங்க கட்டணம் உயர்வு
தமிழகத்தில் 6,606 கிலோ மீட்டருக்கு உள்ள தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் தமிழகம் முழுவதும் 78 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடிகள், வாகனங்களின் வகைகளின்படி 6 வகையான கட்டணங்கள் நிர்ணயித்து வசூல் செய்யப்படுகிறது. அதன்படி, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 1 மற்றும் செப்டம்பர் 1 என இரு கட்டங்களாக சுங்க கட்டணம் உயர்த்தப்படுவது வழக்கம். மொத்தமுள்ள 74 சுங்கச்சாவடிகளில் முதற்கட்டமாக 40 சுங்கச்சாவடிகளுக்கு இன்று நள்ளிரவு முதல் கட்டண உயர்த்தப்படுகிறது.
-
Mar 31, 2025 18:38 IST
திரௌபதி அம்மன் கோயிலை வைத்து சிலர் அரசியல் செய்யலாம் என்று நினைக்கிறார்கள் - அமைச்சர் சேகர்பாபு
இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு: “திரௌபதி அம்மன் கோயிலை வைத்து சிலர் அரசியல் செய்யலாம் என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். அந்த கோயிலின் அன்றாட பூஜையை நடத்த அனைத்து முயற்சி செய்துள்ளோம். இன்னும் ஒருவார காலத்திற்குள் அந்த கோயில் திறக்கப்பட உள்ளது. காலம் கனிந்து நடக்கிற விஷயங்களுக்கு சிலர் போராட்டம் அறிவித்து, அதற்கு தான்தான் காரணம் என்று கூறுகிறார்கள்.” என்று கூறினார்.
-
Mar 31, 2025 18:16 IST
பெண்கள் பெயரில் வீடு, நிலம் பதிவு செய்தால் பத்திரப்பதிவு கட்டணம் 1% குறைப்பு; நாளை முதல் அமல்
பெண்கள் பெயரில் வீடு, நிலம் பதிவு செய்தால் பத்திரப்பதிவு கட்டணம் 1% குறைக்கப்பட்டுள்ளது. நாளை முதல் பெண்களுக்கான கட்டண குறைப்பு சலுகை நடைமுறைக்கு வருகிறது. சமூகத்தில் மட்டுமின்றி அவரவர் குடும்பங்களிலும் மகளிருக்கான சம பங்கை உறுதி செய்திட அரசின் புதிய அறிவிப்பு உதவியாக இருக்கும். நாளை முதல் பெண்கள் பெயரில் ரூ.10 லட்சம் வரை பத்திரப்பதிவு செய்தால் ஒரு சதவீதம் கட்டண குறைக்கப்படும். திட்டம் மூலம் தற்போதைய பதிவுகளில் 75 சதவீத மகளிர் சலுகையை பெற தகுதியானவர்கள். தமிழகத்தில் சொத்து பத்திரங்களை பதிவு செய்யும்போது அதன் மதிப்பில் 7%-யை முத்திரை தீர்வையாகவும், 2%யை பதிவு கட்டணமாகவும் செலுத்த வேண்டும்.
-
Mar 31, 2025 18:12 IST
தம்பி ஜோசப் விஜய்... களத்திற்கு வாங்க, உங்களை எதிர்த்துப் போட்டியிட நான் இருக்கிறேன் - நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன்
நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன்: “தம்பி ஜோசப் விஜய்... களத்திற்கு வாங்க, வந்தால்தான் வெற்றி தோல்வியை நிர்ணயிக்க முடியும். மேடையில் வீரபாண்டியன் கட்டபொம்மன் வசனம் எல்லாம் பேசுகிறார். கூட்டம் எனக்குகூடத்தான் கூடுகிறது. கூட்டத்தை வைத்து கணிக்க முடியாது. நானும் கட்சி ஆரம்பிக்க வேண்டும் என தீவிரமாக முயற்சி செய்தேன். என்ன சூழ்நிலையோ, தள்ளிப் போய்விட்டது. என்னுடைய அருமை தம்பி எங்கே நின்னாலும், அவரை எதிர்த்து நிற்க நான் தயாராக இருக்கிறேன்” என்று கூறினார்.
-
Mar 31, 2025 17:31 IST
விசைத்தறியாளர்களின் கோரிக்கையை நிறைவேற்ற அண்ணாமலை வலியுறுத்தல்
தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை: “கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றுக; கோவை திருப்பூரில் விசைத்தறிகளுக்கு 2022-ல் ஏற்றுக்கொள்ளப்பட்ட 15% கூலி உயர்வு இன்னும் தரப்படவில்லை என தொழிலாளர்கள் வருத்தம். விசைத்தறி உரிமையாளர், ஜவுளித்துறையினர் இடையே அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.
-
Mar 31, 2025 17:13 IST
ஆதிதிராவிடர் மாணவர் விடுதிகளில் தரமற்ற உணவு - தி.மு.க அரசுக்கு அண்ணாமலை வலியுறுத்தல்
பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், "ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை நடத்தும் மாணவர் விடுதிகளில் வழங்கப்படும் உணவு, தரமற்ற முறையில் இருப்பதால், மாணவர்கள் சாப்பிடுவதில்லை என்றும், இந்த வீணாகும் உணவு, கால்நடைப் பண்ணைகளுக்கு விற்கப்படுவதாகவும், இன்றைய தினமலர் நாளிதழில் வெளிவந்துள்ள செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
சென்னையில், ஒருங்கிணைந்த சமையல் கூடத்தில் சமைக்கப்படும் உணவு, அனைத்து விடுதிகளுக்கும் அனுப்பப்படுவதாகக் கூறப்படுகிறது. ஆனால், இந்த உணவு சுவையற்றதாக, தரமற்றதாக இருப்பதால், மாணவர்கள் உணவு உண்பதில்லை என்றும், மேலும், குறித்த நேரத்தில் மாணவர்கள் வரவில்லை என்றால், மாணவர்களுக்கு உணவு வழங்கப்படுவதில்லை என்றும் புகார்கள் எழுந்துள்ளன. விடுதி ஊழியர்கள் இந்த உணவை, அருகிலுள்ள கால்நடைப் பண்ணைகளுக்கு விற்பனை செய்து விடுகிறார்கள் என்றும் மாணவர்கள் புகார் கூறியிருக்கின்றனர். சென்னை மட்டுமல்ல, தமிழகம் முழுவதுமே, ஆதிதிராவிடர் மாணவர் விடுதிகளில் இதே நிலைதான் நிலவுகிறது எனத் தெரிகிறது.
தமிழக ஆதிதிராவிடர் நலத்துறையின் 2024 - 25 ஆண்டிற்கான கொள்கைக் குறிப்பின்படி, தமிழகத்தில் உள்ள 1,331 ஆதிதிராவிடர் மாணவர் விடுதிகளில், 98,909 மாணவ, மாணவியர் தங்கிப் படித்து வருகின்றனர். மானிய கோரிக்கையின்படி இந்த மாணவர்களுக்கு உணவுச் செலவாக, ரூ.142 கோடி செலவிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, சராசரியாக, ஒரு மாணவருக்கு, ஒரு நாளைக்கு ரூ.39 மட்டுமே உணவுக்காகச் செலவிடப்படுகிறது. ஆனால், உணவுப் படி ஒருவருக்கு ரூ.50 வீதம், மாதம் ரூ.1,500 வழங்கப்படுவதாகக் கூறி வருகிறார்கள். உணவுப் படி ஒரு நாளைக்கு ரூ. 50 என்பதே மிகக் குறைவாக இருக்கையில், திமுக அரசு உண்மையில் செலவிடுவது ரூ.39 மட்டுமே. இந்தத் தொகையில் மாணவர்களுக்கு என்ன உணவு வழங்க முடியும்?
தமிழகத்தில் மொத்தம் 1,138 ஆதிதிராவிடர் நலப்பள்ளிகள் உள்ளன. இந்தப் பள்ளிகளுக்கு, புதிய விளையாட்டுக் கருவிகள் வாங்க ஒதுக்கப்பட்ட மொத்த தொகை, ரூ. 2 லட்சம். சராசரியாக, ஒரு பள்ளிக்கு, ரூ. 175. இந்தத் தொகையில் என்ன விளையாட்டுக் கருவிகள் வாங்க முடியும் என்பதைத் திமுக அரசின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைதான் கூற வேண்டும்.
இதே ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைக்கான 2023 - 2024 விளம்பரச் செலவு, ரூ.1.65 கோடி. 2024 - 25 நடப்பாண்டில் விளம்பரச் செலவு, ரூ. 11.48 கோடி. விளம்பரத்துக்காகச் செலவிடுவதில் 1% கூட, மாணவர்கள் நலனுக்காகச் செலவிடவில்லை திமுக அரசு.
ஆதிதிராவிடர் மாணவர் விடுதிகளின் தரத்தை மேம்படுத்த, நடப்பாண்டில் ரு.50 கோடி செலவிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த நிதி ஆண்டில், விடுதிகள் மேம்பாட்டுக்கு வெறும் ரூ.20 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளின் மேம்பாட்டிற்காக, நடப்பாண்டில் ரூ. 7.86 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், இன்றுடன் முடியும் நிதியாண்டில், அதில் 10 சதவீத நிதியைக் கூட, திமுக அரசு செலவிடவில்லை.
வெறும் வாய்வார்த்தையில் சமூகநீதி பேசி, காலம் காலமாக மக்களை ஏமாற்றுவதிலேயே திமுக குறியாக இருக்கிறது. ஏற்கனவே, ஆதிதிராவிடர் மாணவர் விடுதிகள் பராமரிப்பின்றி, தரமான குடிநீர் வசதி இன்றி, சுத்தமான கழிப்பறை வசதிகள் இன்றி இருப்பது குறித்து, தமிழக பாஜக கேள்வி எழுப்பியிருந்தது. தற்போது, தரமான உணவும் வழங்கப்படாமல், உண்மையில் எதற்காக இந்த மாணவர் விடுதிகளை நடத்தி, பொதுமக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறது திமுக என்ற கேள்வி எழுகிறது.
பட்டியல் சமூக மக்கள் மேம்பாட்டுக்காக மத்திய அரசு வழங்கும் நிதியையும் செலவிடாமல், ஆண்டுதோறும் திருப்பி அனுப்பும் திமுக அரசு, ஏன் அந்த நிதியை, ஆதிதிராவிடர் பள்ளிகள், மாணவர் விடுதிகளை மேம்படுத்தச் செலவிடவில்லை? ஏன் பட்டியல் சமூக மாணவர்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துகிறது திமுக அரசு?
உடனடியாக, ஆதிதிராவிடர் மாணவர்கள் விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவர்களுக்கான உணவுப் படியை, மாதம் ரூ.1,500 ல் இருந்து, ரூ.5,000 ஆக உயர்த்த வேண்டும் என்றும், அனைத்து மாணவர்களுக்கும் தரமான, சுவையான உணவு, மூன்று வேளையும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும், மாணவர் விடுதிகளை மேம்படுத்தி, சுத்தமான குடிநீர், சுகாதாரமான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்றும், திமுக அரசை வலியுறுத்துகிறேன்." என்று அவர் கூறியுள்ளார்.
-
Mar 31, 2025 17:09 IST
காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டம்: அ.தி.மு.க நாளை கவன ஈர்ப்பு தீர்மானம்
காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டம் தொடர்பாக அ.தி.மு.க நாளை கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வருகிறது. அ.தி.மு.க சார்பில் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் நாளை கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வருகிறார். அ.தி.மு.க-வின் கவன ஈர்ப்பு தீர்மானம் மீது நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பதிலளிக்க உள்ளார்.
-
Mar 31, 2025 16:58 IST
வி.ஆர்.வணிக வளாகத்தில் பார்க்கிங் கட்டணம் வசூலிக்கக் கூடாது - நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை திருமங்கலத்தில் உள்ள வணிக வளாகத்தில் வாகனங்கள் நிறுத்த, பார்க்கிங் கட்டணம் வசூலிக்கக் கூடாது என சென்னை மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. சென்னையைச் சேர்ந்த அருண்குமார் என்பவர் தொடர்ந்த வழக்கில் நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. வி.ஆர்.வணிக வளாகத்தில் வாகன நிறுத்த கட்டணமாக முதல் ஒரு மணி நேரத்துக்கு ரூ.50 வசூலிக்கின்றனர். அடுத்த ஒவ்வொரு மணி நேரத்துக்கும் தலா ரூ.30 வசூலிப்பதாக மனுதாரர் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
-
Mar 31, 2025 16:46 IST
சென்னை வழக்கறிஞர் கொலை - 2 பேர் கைது
சென்னை விருகம்பாக்கத்தில் வழக்கறிஞர் வெங்கடேஷ் என்பவர் அவரது வீட்டில் வைத்து கொலை செய்யப்பட்ட வழக்கில் உறவினர் உள்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதான கார்த்திக் ஏற்கனவே பல வழக்குகளில் சிக்கியுள்ள நிலையில், வெங்கடேஷ் அவரை சென்னைக்கு அழைத்துவந்து ஓட்டுநராக வைத்துள்ளார். பண விவகாரத்தில் அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.
-
Mar 31, 2025 16:17 IST
விடுபட்டவர்களுக்கு இன்னும் 3 மாதத்தில் மகளிர் உரிமைத் தொகை - அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி
"கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் நிதியுதவி பெற நிறைய பேர் மனு அளித்துள்ளனர், இன்னும் 3 மாதங்களில் இதற்கான விண்ணப்பம் பெறப்பட்டு தகுதி வாய்ந்தவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்" என்று விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டி அருகே அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தகவல் தெரிவித்துள்ளார்.
-
Mar 31, 2025 16:13 IST
அருமையான வெற்றிக் கூட்டணியை இ.பி.எஸ் அமைப்பார் - ராஜேந்திர பாலாஜி பேட்டி
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்த அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களிடம் பேசுகையில், “அருமையான வெற்றிக் கூட்டணியை எடப்பாடி பழனிசாமி அமைப்பார்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
-
Mar 31, 2025 15:47 IST
விடுபட்ட மகளிருக்கு இன்னும் 3 மாதத்தில் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் -அமைச்சர் தங்கம் தென்னரசு
விடுபட்ட மகளிருக்கு இன்னும் 3 மாதத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்
-
Mar 31, 2025 15:14 IST
தமிழகத்தில் 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 6 ஆம் தேதி வரை 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
Mar 31, 2025 15:11 IST
ஏப்ரல் 6-ம் தேதி மோடி வருகை; மண்டபம் முகாம் ஹெலிபேட் தளத்தில் ஹெலிகாப்டரை இறக்கி சோதனை
பாம்பன் புதிய ரயில்வே பாலத்தை திறக்க வரும் ஏப்ரல் 6ம் தேதி பிரதமர் மோடி வருகை தர உள்ள நிலையில், மண்டபம் முகாம் அருகே உள்ள ஹெலிபேட் தளத்தில் ஹெலிகாப்டரை இறக்கி சோதனை நடத்தப்பட்டது
-
Mar 31, 2025 14:19 IST
இலங்கை அகதி தம்பதி மகளுக்கு இந்திய குடியுரிமை: மத்திய அரசுக்கு உத்தரவு
இலங்கை தமிழ் அகதியாக தமிழகம் வந்த தம்பதியருக்கு பிறந்த பெண்ணுக்கு இந்திய குடியுரிமை வழங்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்று பதிவு செய்யப்பட்ட விண்ணப்பம் மீது மத்திய அரசு முடிவெடுக்கும் வரை, இந்தியாவில் இருந்து மனுதாரரை வெளியேற்ற கூடாது என மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
Mar 31, 2025 14:16 IST
விஜய்யை போல் எனக்கும் கூட்டம் கூடும்: நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன்
எந்த கட்சி அழைத்தாலும் விஜய்யை எதிர்த்து நிற்பேன். எனக்கும் ரசிகர்கள் உள்ளனர், விஜய்யை போல் எனக்கும் கூட்டம் கூடும். முதலில் விஜய்யை களத்திற்கு வர சொல்லுங்கள், மேடையில் பேசுவது எல்லாம் பஞ்ச் டயலாக் வசனங்கள் என்று நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் கூறியுள்ளார்.
-
Mar 31, 2025 13:21 IST
பிரதமர் மோடி தமிழகம் வருகை: காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம் அறிவிப்பு
வரும் 6-ந தேதி தமிழ்நாட்டுக்கு வரும் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வபெருந்தகை அறிவித்துள்ளார். இந்தி திணிப்பு, மும்மொழி கொள்கை, பேரிடர் நிதி ஒதுக்காதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக அறிவித்துள்ளார்.
-
Mar 31, 2025 12:45 IST
Twins - பெண் குழந்தைகளை கொன்ற தந்தை
ராஜஸ்தானில் ஆண் குழந்தைக்காக, 5 மாத பெண் குழந்தைகளை தந்தையே கொலை செய்துள்ளார். ஏற்கனவே 5 வயதில் பெண் குழந்தை உள்ள நிலையில் மீண்டும் 2 பெண் குழந்தைகள் பிறந்ததால் வெறிச்செயலில் ஈடுபட்டுள்ளார். இரட்டை பெண் குழந்தைகளை கொன்று, வீட்டில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் புதைத்துள்ளார்.
-
Mar 31, 2025 12:09 IST
இபிஎஸ் அமித்ஷாவை தற்செயலாக சந்தித்தார் - செல்லூர் ராஜூ
உள்துறை அமைச்சர் அமித்ஷாவை இபிஎஸ் தற்செயலாக சென்றுதான் சந்தித்தார். எங்களைப் பார்த்து பயமில்லை எனில் எங்களை ஏன் பேரவையில் இருந்து வெளியேற்ற வேண்டும் என செல்லூர் ராஜு கேள்வி எழுப்பி உள்ளார்.
-
Mar 31, 2025 11:39 IST
உதகை பூங்காக்களில் படப்பிடிப்புக்கு ஜூன் 5 வரை தடை
நீலகிரி மாவட்டத்தில் உதகை தாவரவியல் பூங்கா உள்ளிட்ட பூங்காக்களில் ஜூன் 5 வரை படப்பிடிப்புகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. குன்னூர் சிம்ஸ் பூங்கா, நூற்றாண்டு ரோஜா பூங்கா உள்ளிட்ட பூங்காக்களில் நாளை(ஏப்.1) முதல் படப்பிடிப்புக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல், மே மாதங்களில் மலர் கண்காட்சி உட்பட கோடை விழாக்கள் நடத்த ஏதுவாக தோட்டக்கலைத்துறை அறிவித்துள்ளது.
-
Mar 31, 2025 11:35 IST
மெரினாவில் 2 இளம்பெண்கள் தற்கொலை முயற்சி
சென்னை மெரினா கடலில் குதித்து 2 இளம்பெண்கள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர். தாய், தந்தையின் விவாகரத்து முடிவால், உயிரை மாய்த்துத் கொள்ள முயன்ற 2 இளம்பெண்கள் கடலில் இறங்கி செல்வதை பார்த்த ரோந்து காவலர்கள் உடனே கடலில் இறங்கி 2 பெண்களையும் மீட்டனர்.
-
Mar 31, 2025 11:02 IST
பறவைகளுக்கு நீரும் உணவும் கொடையளிப்போம் - முதல்வர் மு.க.ஸ்டாலின்
கோடை வெயிலால் தவிக்கும் பறவைகளுக்கு நீரும் உணவும் கொடையளிப்போம். பறவைகளுக்கு உணவு, குடிநீர் வழங்கும் புகைப்படத்தை எக்ஸ் தளத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பகிர்ந்துள்ளார்.
-
Mar 31, 2025 10:00 IST
புதிய உச்சத்தை அடைந்த ஆபரணத் தங்கத்தின் விலை
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ரூ.67,400க்கும், ஒரு கிராம் ரூ.8,425-க்கும் விற்பனையாகிறது.
-
Mar 31, 2025 09:40 IST
நாடு முழுவதும் ரமலான் பண்டிகை கொண்டாட்டம்
நாடு முழுவதும் ரமலான் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமிய மக்கள் காலை முதல் மசூதிகளுக்கு சென்று தொழுகையில் ஈடுபட்டனர். நன்றியுணர்வை பிரதிபலிக்கும் வகையில் சமூக மக்கள் ஒன்றாக திரண்டு தங்களுடைய அன்பை பகிர்ந்து கொண்டனர். அமைதி மற்றும் வளத்திற்காக வேண்டி கொண்ட அவர்கள், குடும்பத்தினருடனும், நண்பர்களுடனும் மற்றும் அண்டை வீட்டாருடனும் கொண்டாட்டங்களை பகிர்ந்து கொண்டனர்.
-
Mar 31, 2025 09:39 IST
ஐ.பி.எல்.-முதல் வெற்றியை பெறுமா மும்பை அணி?
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் மும்பை அணி கொல்கத்தாவுடன் இன்று பலப்பரீட்சை நடத்துகிறது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் போட்டி இன்றிரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ள மும்பை தனது முதல் வெற்றியை பெறுமா என எதிர்பார்க்கப்படுகிறது.
-
Mar 31, 2025 09:35 IST
"சதித்திட்டங்களை முறியடித்து 2026 தேர்தலில் வெற்றி பெறுவோம்"
மத்திய பாஜக அரசின் சதித் திட்டங்களுக்கு முதன்மை தடையாக இருப்பது தமிழ்நாடும், திமுகவும்தான். எந்த திட்டத்தை போட்டாலும் அதை முறியடிக்கும் வலிமை நம்மிடம் உள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் வெற்றிக்காக நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் காணொளி வாயிலாக பேசிய ஸ்டாலின், எதிர்க்கட்சிகளின் சதித் திட்டங்களை முறியடித்து 2026 தேர்தலில் உறுதியாக வெற்றி பெறுவோம் என்றார்.
-
Mar 31, 2025 09:33 IST
செங்கோட்டையன் இன்று மீண்டும் டெல்லி பயணம்
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இன்று இரவு மீண்டும் டெல்லிக்கு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
Mar 31, 2025 08:54 IST
நடிகை ஸ்ருதி நாராயணன் இன்ஸ்டா பதிவு
வீடியோவுக்கு பின்னால் பெண்களின் வாழ்க்கையை சீரழித்துக் கொண்டு இருக்கும் ஆண் குறித்து யாருமே கேள்வி கேட்கவில்லை என்று நடிகை ஸ்ருதி நாராயணன் கேள்வி எழுப்பி உள்ளார். வீடியோவை பகிர்ந்தவர்கள், அதனால் ஒரு பெண்ணின் தனிப்பட்ட வாழ்க்கை பாதிப்பை சந்திக்கும் என 2 நொடிகள் கூட நினைக்கவில்லை. ஒரு பெண்ணை உடல், மனம், உணர்வு ரீதியாக பெரும் பாதிப்பை உண்டாக்கியிருக்கும் என்பதை தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
-
Mar 31, 2025 08:29 IST
"ரமலான்: இன்று வங்கிகள் வழக்கம்போல் செயல்படும்"
ரமலான் பண்டிகை தினமான இன்று வங்கிகள் வழக்கம்போல் செயல்படும் என்று ஆர்.பி.ஐ அறிவித்துள்ளது. 2024-25 நிதியாண்டுக்கான கணக்குகளை முடிக்க வேண்டியுள்ளதால் வங்கிகளுக்கு விடுமுறை இல்லை. அரசு விடுமுறை தினமான இன்று வங்கிகள் செயல்படுவது தொடர்பாக ஆர்.பி.ஐ. விளக்கம் அளித்துள்ளது.
-
Mar 31, 2025 08:05 IST
சென்னையில் சொத்து வரி செலுத்த இன்று கடைசிநாள்
சென்னை மாநகராட்சியில் சொத்து வரி, தொழில் வரி செலுத்துவதற்கு இன்று (மார்ச் 31) கடைசி நாள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி அலுவலங்கள், இ-சேவை மையங்கள், இணையதளம் மூலம் சொத்து வரியை செலுத்தலாம். நிகழ் நிதியாண்டு இன்றுடன் முடிவடைய உள்ளதால், நிலுவையில் உள்ள சொத்து வரியை செலுத்த மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. நாளை முதல் சொத்து வரி செலுத்துவோருக்கு மாதம் ஒரு சதவீதம் அபராதம் விதிக்கப்படும் என்றும், நீண்ட காலமாக சொத்து வரி செலுத்தாதவர்களைக் கண்டறிந்து அவர்களின் சொத்துகளை ஜப்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாநகராட்சி எச்சரித்துள்ளது.
-
Mar 31, 2025 07:37 IST
சுங்கச்சாவடிகளில் நள்ளிரவு முதல் கட்டண உயர்வு
தமிழகத்தில் உள்ள 40 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலாகிறது. 5 முதல் 10 சதவீதம் வரை கட்டணம் வசூலிக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
-
Mar 31, 2025 07:35 IST
எல்.பி.ஜி. டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தம் வாபஸ்
புதிய ஒப்பந்தத்தில் உள்ள கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை எண்ணெய் நிறுவனங்கள் ஏற்றன. இதனால், கடந்த 4 நாட்களாக நீடித்த எல்.பி.ஜி. டேங்கர் லாரிகள் காலவரையற்ற வேலைநிறுத்தம் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
-
Mar 31, 2025 07:27 IST
சென்னை விருகம்பாக்கத்தில் வழக்கறிஞர் வெட்டிக்கொலை
சென்னை விருகம்பாக்கத்தில் வழக்கறினர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். கணபதிராஜ் நகர் பிரதான சாலையில் உள்ள வீட்டில் தலையில் வெட்டுக்காயங்களுடன் சடலமாக கிடந்த வழக்கறிஞர் வெங்கடேசனின் உடலைக் கைப்பற்றி வெட்டிக்கொன்றது யார்? எதற்காக கொலை செய்தனர்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். உடல் அழுகிய நிலையில் காணப்பட்டதால், அவர் கொலை செய்யப்பட்டு 2 நாட்களுக்கு மேல் ஆகி இருக்கலாம் என தெரிகிறது.
-
Mar 31, 2025 07:17 IST
ரமலான் பண்டிகை கோலாகல கொண்டாட்டம்
தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் ரமலான் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. மாநிலம் முழுவடதும் நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் திரளான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர். நேற்று பிறை தெரிந்ததால் இன்று ரமலான் கொண்டாடப்படும் என தமிழ்நாடு அரசின் தலைமை காஜி அறிவித்து இருந்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.