/indian-express-tamil/media/media_files/2025/04/01/DNemriA4J9r6Ii3xXFgR.jpg)
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ100.80-க்கும், டீசல் விலை, ரூ92.39-க்கும், கேஸ் விலை ரூ90.50-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
-
Apr 01, 2025 20:49 IST
கச்சத்தீவை திரும்பப் பெற வலியுறுத்தி நாளை தீர்மானம்
கச்சத்தீவை திரும்பப் பெற வலியுறுத்தி சட்டப்பேரவையில் நாளை (ஏப்ரல் 2) தீர்மானம் கொண்டு வரப்படுகிறது. இந்த தீர்மானத்தை முதலமைச்சர் ஸ்டாலின் நாளை கொண்டு வருகிறார். தமிழ்நாடு மீனவர்களின் பிரச்சனையை போக்க இதுவே நிரந்தர தீர்வாக அமையும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
-
Apr 01, 2025 20:10 IST
பட்டாசு ஆலை விபத்து; நிவாரண நிதி அறிவிப்பு
குஜராத் பட்டாசு ஆலை தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், அவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 2 லட்சம் நிவாரண நிதி அறிவித்து உத்தரவிட்டுள்ளார்.
-
Apr 01, 2025 19:50 IST
ஒரு மாதத்தில் 1.17 லட்சம் மாணவர்கள் சேர்க்கை
அரசு பள்ளிகளில் ஒரு மாதத்தில் 1.17 லட்சம் மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். மார்ச் 1-ஆம் தேதி தொடங்கிய இந்த மாணவர் சேர்க்கையில் தற்போது வரை 1.17 லட்சம் என்ற அளவில் மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
-
Apr 01, 2025 19:27 IST
வக்ஃபு வாரிய திருத்த மசோதா நாளை தாக்கல் - எதிர்க் கட்சிகள் ஆலோசனை
வக்ஃபு வாரிய திருத்த மசோதா நாளை (ஏப்.2) மக்களவையில் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் எதிர்க்கட்சிகள் ஆலோசனை நடத்தி வருகின்றன.
-
Apr 01, 2025 19:22 IST
தெலங்கானாவின் ஆதிலாபாத்-ல் இன்று அதிகபட்சமாக 106°F வெயில் பதிவு
தெலங்கானாவின் ஆதிலாபாத்-ல் இன்று அதிகபட்சமாக 106°F வெயில் பதிவானதால் மக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். ஆந்திராவின் நந்தியால் மற்றும் கர்னூலில் 101°F வெயில் பதிவாகியுள்ளது.
-
Apr 01, 2025 19:13 IST
இந்தியாவில் 97 லட்சம் பயனர்களின் வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்
இந்தியாவில் கடந்த பிப்ரவரியில் மட்டும் 97 லட்சம் பயனர்களின் வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது. 14 லட்சம் பயனர்களின் கணக்குகள் எந்த புகாரும் இன்றி முடக்கப்பட்டதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
-
Apr 01, 2025 19:10 IST
மரபுக் கட்டடங்கள் வட்ட அலுவலகம்
"பாரம்பரிய கட்டடங்களை புதுப்பிக்க தனி அலுவலகம் பாரம்பரியக் கட்டடங்களைப் புதுப்பிக்கவும், மறுசீரமைக்கவும் சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு புதிதாக "மரபுக் கட்டடங்கள் வட்ட அலுவலகம்" ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது." என்று அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
-
Apr 01, 2025 19:03 IST
எடப்பாடி பழனிசாமிக்கு நீதிமன்றம் சம்மன்
கே.சி.பழனிசாமி தொடர்ந்த அவதூறு வழக்கில் எடப்பாடி பழனிசாமி 15ம் தேதி ஆஜராக கோவை நீதிமன்றம் சம்மன் அனுப்பி உள்ளது. கோவையில் செய்தியாளர் சந்திப்பின்போது எடப்பாடி பழனிசாமி தன்னைப் பற்றி அவதூறாக பேசியதாக வழக்கு தொடரப்பட்டது. கே.சி.பழனிசாமி தொடர்ந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆஜராக கோவை குற்றவியல் நீதிமன்றம் சம்மன் அனுப்பியது.
-
Apr 01, 2025 18:37 IST
பெண் பத்திரிகையாளர்கள் குறித்து மீண்டும் அவதூறு - எஸ்.வி.சேகருக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம்
சென்னை பத்திரிகையாளர் மன்றம் தலைவர் ம. சுரேஷ் வேதநாயகம் மற்றும் பொதுச்செயலாளர் மு.அசீப் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பெண் பத்திரிகையாளர்களை மீண்டும் இழிவுபடுத்தியுள்ள எஸ்.வி.சேகரை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாக கண்டிக்கிறது.
கடந்த 2018 ஆம் ஆண்டு பெண் பத்திரிகையாளர்களை மிகவும் கீழ்த்தரமாக சித்தரிக்கும் பதிவு ஒன்றை நடிகர் எஸ்.வி.சேகர் தன்னுடைய முகநூலில் மறுபதிவிட்டிருந்தார். இந்தப் பதிவு பத்திரிகையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பத்திரிகையாளகர்ளும் பத்திரிகையாளர் அமைப்புகளும் கடும் கண்டனத்தை பதிவு செய்தனர். எஸ்.வி.சேகரை கண்டித்து ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது.
பெண் பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தும் வகையில் செயல்பட்ட எஸ்.வி.சேகர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது. இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் எஸ்.வி.சேகருக்கு ஒரு மாத சிறை தண்டனை மற்றும அபராதம் விதித்தது. இதை எதிர்த்து எஸ்.வி.சேகர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தற்போது, நிவாரணம் கோரி உச்சநீதிமன்றத்தை எஸ்.வி.சேகர் நாடியுள்ளார்.
இந்தநிலையில், எஸ்.வி.சேகர் சமீபத்தில் நடத்தியுள்ள நாடகத்தில், பெண் பத்திரிகையாளர்களை மோசமாக சித்தரிக்கும் வகையிலும், அவர்களை பாலியல்ரீதியாக இழிவுபடுத்தும் வகையிலும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்தமுறை பெண் பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தும் வகையில் பதிவிட்டதற்கு, பத்திரிகையாளர்கள் மத்தியிலும், நீதிமன்றத்திலும் மன்னிப்பு கேட்ட எஸ்.வி.சேகர் தற்போத அதே தவறை மீண்டும் செய்துள்ளார். இதன்மூலம், தான் செய்த தவறை எஸ்.வி.சேகர் உணரவில்லை என்பது உறுதியாகிறது. மேலும், தான் செய்வது என்வென்பதை அறிந்தே அவர் செய்துள்ளார் என்பதும் தெளிவாகிறது.
ஆகவே, பெண் பத்திரிகையாளர்களை மீண்டும் கீழ்த்தரமாக பேசியுள்ள எஸ்.வி.சேகரை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாக கண்டிக்கிறது.
எஸ்.வி.சேகர் நடத்திய நாடகத்தில் பெண் பத்திரிகையாளர்களுக்கு எதிராக இடம்பெற்று காட்சி தொடர்பாக எஸ்.வி.சேகர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
அதேபோல், உச்சநீதிமன்றத்தில் எஸ்.வி.சேகர் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு காவல்துறை சார்பாக மனுதாக்கல் செய்ய வேண்டும் என்றும் சென்னை பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்துகிறது." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Apr 01, 2025 17:34 IST
பாஸ்போர்ட் மோசடி வழக்கு: அஜித் பட நடிகை மீது சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீஸ் வழக்குப்பதிவு
துணை நடிகையும், பிரபல சின்னத்திரை நடிகையுமான நேபாள நாட்டை சேர்ந்த ஷர்மிளா தாப்பா மீது வழக்குப் பதிவு செய்யபப்ட்டுள்ளது. 2011 முதல் 2021 வரை 10 ஆண்டுகள் சென்னை அண்ணாநகர் முகவரி ஆவணம் கொடுத்து இந்தியன் பாஸ்போர்ட் வைத்திருந்தார். பாஸ்போர்ட் காலாவதியான நிலையில் மீண்டும் வியாசர்பாடி முகவரி கொடுத்து விண்ணப்பித்துள்ளார். முறைகேடு இருப்பதால் நடிகை தாப்பா மீது உள்துறை அமைச்சகம் கீழ் செயல்படும் வெளி நாட்டினர் மண்டல பதிவு அலுவலகம் தரப்பில் புகார் அளிக்கப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
Apr 01, 2025 17:27 IST
கண்டெய்னர் லாரியில் இருந்து 111 ஏசி பெட்டிகள் திருடி பாதி விலைக்கு விற்பனை; 6 பேர் கைது
தடாவில் இருந்து சென்னை துறைமுகத்திற்கு கண்டெய்னர் லாரியில் கொண்டுவரப்பட்ட ஏசிகளில் 111 ஏசி பெட்டிகளை திருடி பாதி விலைக்கு விற்பனை செய்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 2 டன் திறன் கொண்ட 15 ஏசி பெட்டிகள் மற்றும் ரூ.18.75 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. ஜி.பி.எஸ் சிக்னல் நீண்ட நேரம் ஒரே இடத்தில் இருந்ததை வைத்து ஓட்டுநரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் உண்மை அம்பலமானது.
-
Apr 01, 2025 16:42 IST
சென்னை மெட்ரோ ரயிலில் மார்ச் மாதத்தில் 92 லட்சம் பேர் பயணம்
சென்னை மெட்ரோ ரயில்கள் மூலம் மார்ச் 2025-ல் மாதத்தில் 92 லட்சம் பேர் பயணிகள் பயணித்துள்ளனர். அதிகபட்சமாக மார்ச் 7-ம் தேதி 3.45 லட்சம் பயனிகள் மெட்ரோ ரயில்களில் பயணித்துள்ளனர். ஜனவரி, பிப்ரவரி, மாதங்களுடன் ஒப்பிடும்போது மார்ச் மாதத்தில் பயணிகள் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
-
Apr 01, 2025 16:39 IST
மீனவர்கள் விவகாரம்: மத்திய அமைச்சரின் பேச்சுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தி.மு.க, காங். எம்.பி.க்கள் வெளிநடப்பு
மீனவர்கள் விவகாரம் - ஒன்றிய அமைச்சரின் பேச்சுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தி.மு.க, காங்கிரஸ் உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
-
Apr 01, 2025 16:37 IST
அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்து கோயில்களை விடுவிக்கக் கோரி மனு; முடித்து வைத்த சுப்ரீம் கோர்ட்
தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திராவில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்து கோயில்களை விடுவிக்கக் கோரிய ரிட் மனுவை உச்ச நீதிமன்றம் முடித்து வைத்தது. கோவையைச் சேர்ந்த தயானந்த சரஸ்வதி உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கில், இவ்விவகாரத்தில் உயர் நீதிமன்றத்தை அணுகுவதே சிறந்ததாக இருக்கும் என நீதிபதிகள் நாகரத்னா அமர்வு கருத்து தெரிவித்தது.
-
Apr 01, 2025 16:36 IST
மோகன் லால் நடித்த எம்புரான் படத்திற்கு தடை விதிக்க கேரள ஐகோர்ட் மறுப்பு
எம்புரான் படத்திற்கு தடை விதிக்க கேரள உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. எம்புரான் படத்தால் எங்கேயாவது ஒரு இடத்திலாவது வன்முறை ஏற்பட்டுள்ளதா என வழக்கு தொடர்ந்த பா.ஜ.க நிர்வாகி பிஜேசுக்கு நீதிபதி கேள்வி எழுப்பினார். நீங்கள் எம்புரான் பார்த்துவிட்டீர்களா? உங்கள் ஆட்சேபனை என்ன? இடு விளம்பரத்திற்காக போடப்பட்டுள்ள மனு என கண்டித்த நீதிபதி கோடை விடுமுறைக்கு பின் வழக்கு விசாரிக்கப்படும் என அறிவித்தார்.
-
Apr 01, 2025 16:20 IST
தமிழ்நாட்டின் இரும்பு மனிதர், எம்.ஜி.ஆரின் முதல் ரசிகர்... ஸ்டாலினுக்கு புகழாயம் சூட்டிய எம்.வ.வேலு
சட்டப்பேரவையில் அமைச்சர் எ.வ. வேலு பேச்சு: “எம்.ஜி.ஆரின் முதல் ரசிகர் முதல்வர் ஸ்டாலின்தான். காரில் பயணிக்கும்போதெல்லாம் முதல்வர் ஸ்டாலின் எம்.ஜி.ஆர் பாடலைத்தான் கேட்கிறார். தனது படம் வெளியானதும் எப்படி இருக்கிறது என்று எம்.ஜி.ஆர் முதலில் ஸ்டாலினிடம்தான் கேட்பார்.” என்று கூறியுள்ளார்.
மேலும், “ரஷ்யாவின் மொழியையும் பண்பாட்டையும் காக்க முற்பட்ட ஜோசப் ஸ்டாலினை அந்த நாட்டு மக்கள் இரும்பு மனிதர் என்று அழைத்தனர். நம்முடைய தாய்மொழியான தமிழைக் காக்க போர்க் குரல் எழுப்பக்கூடிய தமிழ்நாட்டின் இரும்பு மனிதராக முதலமைச்சர் மு க ஸ்டாலின் உள்ளார்.” என்று அமைச்சர் எ.வ.வேலு புகழாரம் சூட்டினார்.
-
Apr 01, 2025 16:10 IST
குஜராத் பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 18 ஆக உயர்வு
குஜராத் மாநிலம், பனஸ்கந்தா மாவட்டம் தீசா தொழிற்பேட்டையில் செயல்பட்டு வந்த பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில் பலியாணவர்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது. தரைமட்டமான பட்டாசு ஆலையில் இருந்து 5 பேர் படுகாயங்களுடன் மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பட்டாசு வெடித்ததை தொடர்ந்து தொழிற்சாலையில் இருந்த கட்டடம் ஒன்றின் மேற்கூரை இடிந்து விழுந்தது. தீ விபத்துக்கான காரணம் குறித்து வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். -
Apr 01, 2025 15:18 IST
ஏப்ரல் 3, 4, 5 தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, தேனி மற்றும் திண்டுக்கல்லில் நாளை மறுநாள் முதல் 3 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
-
Apr 01, 2025 15:11 IST
சென்னையில் “U’’ வடிவ சர்வீஸ் சாலைகள் அமைக்கப்படும் - அமைச்சர் எ.வ.வேலு
சென்னை, பாடி அருகே “U’’ வடிவ சர்வீஸ் சாலை மற்றும் கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள திருவான்மியூர்-கொட்டிவாக்கம் வரை உள்ள சாலையை அகலப்படுப்படுத்த ரூ.95 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்
-
Apr 01, 2025 15:08 IST
வில்லிவாக்கம் ரயில்வே மேம்பாலத்தின் அடியில் U வடிவ சர்வீஸ் சாலை ரூ.14 கோடியில் அமைக்கப்படும்; அமைச்சர் எ.வ.வேலு
வில்லிவாக்கம் ரயில்வே மேம்பாலத்தின் அடியில் கொரட்டூர் மற்றும் பாடி மார்க்கமாக செல்ல ”U” வடிவ சர்வீஸ் சாலை ரூ.14 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்
-
Apr 01, 2025 14:14 IST
மியான்மர் நாட்டுக்கு அத்தியாவசியப் பொருட்களை அனுப்பிய இந்தியா
இயற்கை பேரிடரால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மியான்மர் நாட்டுக்கு, 442 மெட்ரிக் டன் அத்தியாவசியப் பொருட்களை இந்தியா கடற்படை கப்பல் மூலம் அனுப்பி வைத்தது. அரிசி, பருப்பு, பால் மாவு உள்ளிட்டவை அனுப்பப்பட்டுள்ளன
-
Apr 01, 2025 14:12 IST
அன்போடு கேட்கும் கோரிக்கைகளை அன்போடு பரிசீலிப்போம்: பா.ஜ.க.வுக்கு மு.க.ஸ்டாலின் பதில்
தொகுதி சார்ந்து, தான் வைக்கும் கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் நன்றி தெரிவிப்பதாகக் கூறி, புதிய கோரிக்கைகளை முன்வைத்த பாஜக உறுப்பினர் நயினார் நாகேந்திரனுக்கு பதில் அளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நயினார் நாகேந்திரன் அன்போடு கேட்கும் கோரிக்கைகளை நாங்களும் அன்போடு பரிசீலிப்போம் என்று கூறியுள்ளார்.
-
Apr 01, 2025 14:10 IST
வானுயரத்திற்கு பற்றி எரியும் தீ: மலேசியாவில் பரபரப்பு
மலேசியா நாட்டின் கோலாலம்பூர் புறநகர் பகுதியில் கியாஸ் குழாயில் ஏற்பட்ட வெடி விபத்தால், வானுயரத்திற்கு தீ பற்றி எரிந்து வரும் நிலையில்,தீயை கட்டுப்படுத்தும் பணி நடந்துவருவதாக அரசு தகவல் தெரிவித்துள்ளது, இந்த விபத்தில், உயிரிழப்பு விபரங்கள் வெளியாகவில்லை.
-
Apr 01, 2025 14:07 IST
குமரியை அலங்கரிக்கும் கண்ணாடி பாலம்: எ.வ.வேலு பெருமிதம்
சீனாவில் “ஜாங் ஜியாஜியில்” மலைப்பகுதி, வியட்நாமில், “மோக் சாங்” தீவு, இந்தியாவில், பீகார், வனப்பகுதியில் கண்ணாடி பாலம் கட்டப்பட்டுள்ளது. ஆனால், இந்தியாவிலேயே கடல் நடுவே கட்டப்பட்டுள்ள ஒரே “கண்ணாடி இழைப் பாலம்“ தமிழ்நாட்டில் மட்டும் தான். 31.3.2025 வரை கண்ணாடி பாலத்தை பார்வையிட்ட சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 6.31 லட்சம். உலக சுற்றுலாப் பயணிகள் வியக்கத்தக்க வகையில் குமரியின் புதிய அடையாளமாக கண்ணாடி இழைப்பாலம் திகழ்கிறது.
"2025 -26 நிதிநிலை அறிக்கையில் முதலமைச்சரின் தாய் உள்ளம் வெளிப்பட்டுள்ளது. பொருளாதார வல்லுநர்கள், ஐஐடி பேராசிரியர்கள், பொறியாளர்கள் கலந்து கொண்ட கருத்தரங்கம் நடைபெற்றது" என அமைச்சர் எ.வ.வேலு கூறியுள்ளார்.
-
Apr 01, 2025 14:06 IST
புதிதாக 1255 ஒப்பந்ததாரர்கள் சேர்ப்பு: அமைச்சர் எ.வ.வேலு தகவல்
தி.மு.க அரசு வெளிப்படைத் தன்மையுடன் செயல்படுவதால், மின்னணு முறையில் “ஒப்பந்ததாரர் பதிவுகள்” மேற்கொள்ளப்பட்டு வருகிறது.. நெடுஞ்சாலைத்துறை உருவான காலம் முதல் 2021 மார்ச் வரை 1,074 ஒப்பந்ததாரர்கள் பதிவு செய்யப்பட்டு இருந்தனர். இந்த அரசு பொறுப்பேற்ற 4 ஆண்டுகளில், 1,255 ஒப்பந்ததாரர்கள் புதிதாக பதிவு செய்யப்பட்டு பணியில் ஈடுபட்டு உள்ளனர் என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
-
Apr 01, 2025 13:30 IST
2024-2025 நிதியாண்டில் சென்னை மாநகராட்சியில் மட்டும் ரூ.2750 கோடி வரி வசூல்
2024-2025 நிதியாண்டில் சென்னை மாநகராட்சியில் மட்டும் ரூ.2750 கோடி
வரி வசூல் செய்யப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டில் ரூ.1,733 கோடி வரி வசூல் செய்த நிலையில் 2024 -25ல் ரூ.1,017 கோடி அதிக வரி வருவாய் அதிகரித்துள்ளது. மாநகராட்சி வரலாற்றிலேயே ரூ.2 ஆயிரம் கோடிக்கு மேல் சொத்து வரி வசூலிக்கப்பட்டது இதுவே முதல்முறையாகும். இன்று முதல் செலுத்தப்படும் முந்தைய நிதியாண்டுகளுக்கான சொத்து வரிக்கு 2 சதவீதம் தனி வட்டி விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. -
Apr 01, 2025 12:59 IST
மியான்மருக்கு நிவாரணம் அனுப்பி வைப்பு
இயற்கை பேரிடரால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மியான்மர் நாட்டுக்கு, 442 மெட்ரிக் டன் அத்தியாவசியப் பொருட்களை இந்தியா கடற்படை கப்பல் மூலம் அனுப்பி வைத்தது அரிசி, பருப்பு, பால் மாவு உள்ளிட்டவை அனுப்பப்பட்டுள்ளன.
-
Apr 01, 2025 12:10 IST
நக்சல் இல்லாத பாரதம் - அமித் ஷா
நக்சல் இல்லாத பாரதத்தை கட்டியெழுப்புவதில் பெரிய அடியை எடுத்து வைத்துள்ளோம். நாட்டில் தீவிரவாதத்தால் பாதித்த மாவட்டங்களின் எண்ணிக்கை 12யில் இருந்து 6 ஆக குறைந்துள்ளது. பிரதமர் மோடி அரசு தீவிரவாதிகளுக்கு எதிராக இடைவிடாத முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. 2026 மார்ச் 31க்குள் நாட்டில் நக்சலிஸம் நிரந்தரமாக ஒழிக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
-
Apr 01, 2025 12:07 IST
ஆபத்தான நாய்களை கருணைக் கொலை செய்யலாம் - அன்புமணி
ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்ட ஆபத்தான நாய்களை கருணைக் கொலை செய்வதே தீர்வாகும். தமிழ்நாடு எதிர்கொண்டு வரும் பெரும் நெருக்கடியில் ஒன்றாக தெருநாய்க்கடி மாறியுள்ளது. மக்கள் தொண்டு நிறுவனங்களை இணைத்து தெருநாய்க்கடிக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும். ஒவ்வொரு நாளும் நாய்க்கடி நிகழ்வு அதிகரித்துள்ள நிலையில் அதற்கு தீர்வு காண்பது அவசரத் தேவையாக உள்ளது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
-
Apr 01, 2025 11:22 IST
இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது
மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் 982 புள்ளிகள் சரிந்து 76,432 புள்ளிகள் வர்த்தகமாகிறது. தேசிய பங்குச்சந்தையின் நிஃப்டி 235 புள்ளிகள் குறைந்து 23,284 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்த பதில்வரி நாளை அமலுக்கு வரும் நிலையில் சந்தைகள் சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது.
-
Apr 01, 2025 11:09 IST
அடுக்குமாடி குடியிருப்புகள் - அமைச்சர் முத்துசாமி பதில்
ஒரு பகுதியின் சாலை அகலம், விமான நிலையம் போன்றவற்றை பொறுத்துதான் எத்தனை மாடியில் வீடு கட்ட முடியும் என்பதை தீர்மானித்து வருகிறோம் என பேரவையில் கீழ்பெண்ணாத்தூர் எம்எல்ஏ பிச்சாண்டிக்கு, அமைச்சர் முத்துசாமி பதில் அளித்துள்ளார்.
-
Apr 01, 2025 11:08 IST
அமித்ஷா பேச்சு நகைச்சுவையாக உள்ளது - திருமா
அமித்ஷா பேசுவது நகைச்சுவையாக உள்ளது. 2வது இடத்திற்குதான் தமிழ்நாட்டில் போட்டி நிலவுகிறது. தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும் என ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியது குறித்து விசிக தலைவர் திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார்.
-
Apr 01, 2025 10:51 IST
கல்லாற்றின் குறுக்கே மேலும் ஒரு தடுப்பணை: துரைமுருகன்
பெரம்பலூர் மாவட்டம் கல்லாற்றின் குறுக்கே மேலும் ஒரு தடுப்பணைக் கட்டப்படும் என்று சட்டப்பேரவையில் நீர்வளத்துறை அமைச்சர் துரை முருகன் தெரிவித்துள்ளார். கேள்வி நேரத்தின்போது, நீர்வளத்துறை அமைச்சர் துரை முருகன் பேசுகையில், ”கல்லாற்றின் குறுக்கே மேலும் ஒரு தடுப்பணைக் கட்டப்படும். ரூ. 6.50 கோடியில் திட்ட மதிப்பீடுகள் தயாராக உள்ளது. சின்னமுட்டலுவில் 12 மீ வரை பூமியில் கூழாங்கல் கலந்த மண் உள்ளது. சிதைவுற்ற மணலும் காணப்படுவதால் நீர்தேக்கம் அமையும் சாத்தியக்கூறுகள் இல்லை” என்றார்
-
Apr 01, 2025 10:45 IST
குரூப் 1, 1 ஏ தேர்வுகளுக்கான அறிவிப்பாணை வெளியானது!
குரூப் 1, 1ஏ தேர்வுகளுக்கான அறிவிப்பாணையை வெளியிட்டது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம். குரூப் 1, 1ஏ தேர்வுகளுக்கு இன்று முதல் ஏப்.30 வரை விண்ணப்பிக்கலாம். துணை ஆட்சியர், டி.எஸ்.பி, வணிக வரித்துறை இணை ஆணையர் உள்ளிட்ட பதவிகளுக்கு தேர்வு நடத்தப்பட உள்ளது. ஜூன் 15-ம் தேதி குரூப் 1 முதல்நிலைத் தேர்வு நடைபெறும்
-
Apr 01, 2025 10:16 IST
3 நாட்களுக்குப் பிறகு இன்று மீண்டும் தமிழ்நாடு சட்டப்பேரவை
3 நாட்களுக்குப் பிறகு தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடியுள்ளடது. கேள்வி நேரம், அதைத் தொடர்ந்து நேரமில்லா நேரத்தில் பல விவகாரங்கள் விவாதிக்கப்படுகிறது. காவிரி-வைகை-குண்டாறு இணைப்புக் கால்வாய் திட்டப்பணி குறித்து சி.விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ. கொண்டுவரும் கவன ஈர்ப்புத் தீர்மானம் மீது பேரவையில் இன்று விவாதிக்கப்படுகிறது. கவன ஈர்ப்புத் தீர்மானம் மீதான் விவாதத்திற்கு நீர்வளத்துறை அமைச்சர் பதிலளிக்க உள்ளார்.
-
Apr 01, 2025 10:14 IST
மியான்மரில் 2,000-ஐ கடந்த பலி எண்ணிக்கை
மியான்மரில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,000-ஐ கடந்தது. மியான்மரில் மட்டும் 2,065 பேர் உயிரிழந்துள்ள நிலையில், சுமார் 4,000-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாக அநாட்டு அரசு தகவல் தெரிவித்துள்ளது. தாய்லாந்தில் 19 பேர் உயிரிழந்து உள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
-
Apr 01, 2025 09:50 IST
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை உயர்வு
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ஒரு சவரன் ரூ.68,080-க்கும் ஒரு கிராம் ரூ.8,510-க்கும் விற்பனையாகிறது.
-
Apr 01, 2025 08:54 IST
3 நாட்களுக்கு பிறகு இன்று கூடுகிறது தமிழ்நாடு சட்டப்பேரவை
3 நாட்கள் இடைவெளிக்குப் பிறகு தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று கூடுகிறது. பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை மீதான மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற உள்ளது.
-
Apr 01, 2025 08:39 IST
"3 மாத காலத்தில் மகளிர் உரிமைத் தொகை"
3 மாதங்களில் மீண்டும் விண்ணப்பம் பெறப்பட்டு, அவர்களில் தகுதி வாய்ந்தவர்களுக்கு நிச்சயம் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
-
Apr 01, 2025 07:33 IST
செங்கல்பட்டு அருகே சாலை விபத்தில் 3 பேர் உயிரிழப்பு
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள்கோவில் அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நள்ளிரவில் சிக்னலில் நின்ற கார் மீது கனரக லாரி மோதியதில் ஒரு வயது குழந்தை உட்பட 3 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.
-
Apr 01, 2025 07:16 IST
தமிழக அரசு தாக்கல் செய்த வழக்குகள் மீது இன்று விசாரணை
டாஸ்மாக் நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியதற்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வருகிறது.
-
Apr 01, 2025 07:13 IST
வணிக கேஸ் சிலிண்டர் விலை குறைவு
தமிழகத்தில் 19 கிலோ எடை கொண்ட வணிகப் பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை இம்மாதம் ரூ.43.50 குறைந்துள்ளது. கடந்த மாதம் ரூ.1,965 ஆக இருந்த வணிக சிலிண்டர் விலை ரூ.43.50 குறைந்து தற்போது ரூ.1,921.50 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வீட்டுப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலையில் மாற்றமின்றி ரூ.818-க்கு விற்பனையாகிறது.
-
Apr 01, 2025 07:07 IST
40 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு நள்ளிரவு முதல் அமல்
தமிழ்நாட்டில் நள்ளிரவு முதல் சுங்கக் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது. 40 சுங்கச் சாவடிகளில் 5 முதல் 50 ரூபாய் வரை கட்டணம் உயர்ந்ததால் வாகன ஓட்டிகள் அதிருப்தியடைந்துள்ளனர். இதனால், அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.