/indian-express-tamil/media/media_files/z1DKV1qTQWS9wEGkNuo0.jpg)
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ100.80-க்கும், டீசல் விலை, ரூ92.39-க்கும், கேஸ் விலை ரூ90.50-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
பிரதமர் வருகை - மீன்பிடிக்க தடை: பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைக்க ஏப். 6-ம் தேதி பிரதமர் மோடி, ராமேஸ்வரம் வருவதையொட்டி பாதுகாப்பு நடவடிக்கைக்காக ஏப். 4 - 6ஆம் தேதி வரை மீனவர்கள் மீன்பிடிக்கத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. மீன்வளத் துறை சார்பில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
-
Apr 03, 2025 22:33 IST
மத்திய அரசுக்கு எதிரான குரலை உயர்த்த வேண்டும்: பினராயி விஜயன்
மாநில அரசுகளின் ஆலோசனையின்றி தொகுதி மறுசீரமைப்பு நடைபெறுவதால் தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையும். மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக நமது குரலை உயர்த்த வேண்டும். மாநில அரசுகள் நிறைவேற்றி அனுப்பும் சட்டங்களை காரணமேயின்றி மத்திய அரசு கிடப்பில் போடுவது ஜனநாயக விரோதமானது என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.
-
Apr 03, 2025 20:53 IST
பள்ளி ஆண்டுவிழாவில் சாதி சின்னங்கள்: பள்ளி கல்வித்துறை எச்சரிக்கை
பள்ளி ஆண்டு விழாவில் திரைப்படப் பாடல்களை ஒளிபரப்புவது, சாதி ரீதியான சின்னங்களை வைத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும். இதை மீறும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மீது குடிமைப்பணிகள் விதியின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளி கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
Apr 03, 2025 19:53 IST
அதிமுக சின்னம் தொடர்பான வழக்கு: இ.பி.எஸ் மனு தாக்கல்
அதிமுக சின்னம், மற்றும் உட்கட்சி விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி மனுத்தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், அதிமுக உட்கட்சி விவகாரம் - ஆரம்பக்கட்ட விசாரணைகளுக்கு உரிய காலக்கெடு நிர்ணயிக்க வேண்டும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு தயாராக வேண்டிய சூழல் உள்ளதால், காலக்கெடுவை நிர்ணயிக்க வலியுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது,
-
Apr 03, 2025 19:20 IST
ஏப்ரல் மாதம் வங்கிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை
ஏப்ரல் மாதம் அனைத்து வங்கிகளுக்கும் இன்று முதல் ஏப்ரல்-6 ஞாயிறு, ஏப்ரல்-10 மகாவீர் ஜெயந்தி, ஏப்ரல்-12 இரண்டாம் சனி, ஏப்ரல்-13 ஞாயிறு, ஏப்ரல்-14 தமிழ் புத்தாண்டு, ஏப்ரல்-18 புனித வெள்ளி, ஏப்ரல்-20 ஞாயிறு, ஏப்ரல்-26– நான்காம் சனி, ஏப்ரல்-27 ஞாயிறு என மொத்தம் 9 நாட்கள் விடுமுறை ஆகும். எனவே பொதுமக்கள் தங்கள் வங்கி சேவைகளை இந்த விடுமுறை நாட்களை கவனத்தில் கொண்டு முன்கூட்டியே திட்டமிடுவது நல்லது. ஆன்லைன் வங்கி சேவைகள் வழக்கம்போல் செயல்படும்.
-
Apr 03, 2025 19:18 IST
வக்பு சட்டத்திருத்த மசோதா ஜனநாயகத்திற்கு எதிரானது - தவெக தலைவர் விஜய்
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-
மத்திய பா.ஜ.க அரசால் மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ள வக்பு சட்டத் திருத்த மசோதா, மதச்சார்பற்ற இந்திய ஜனநாயகத்தின் அடிப்படைக் கொள்கைகளையும் அரசியலமைப்பின் மாண்பையும் மீண்டும் ஒருமுறை கேள்விக்கு உள்ளாக்கி உள்ளது.
மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு, தொடர்ந்து அரசியலமைப்பின் மீது களங்கம் ஏற்படுத்தி வரும் ஒரு மோசமான போக்காக. வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதாவை நிறைவேற்றி உள்ளது
இந்தியாவில் உள்ள இஸ்லாமிய சகோதரர்கள் தங்களின் வழிபாட்டு முறையிலான பண்பாட்டு வாழ்வைப் பின்பற்றும் அனைத்து உரிமைகளையும் இந்திய அரசியலமைப்பு சட்டம், 'இஸ்லாமியத் தனியுரிமைச் சட்டங்கள் வழியே அடிப்படை உரிமையாக அங்கீகரிக்கிறது.
'வக்பு வாரியச் சட்டம் என்பது, முஸ்லிம்களின் இறையியல் வாழ்வு மற்றும் சமூகப் பொருளாதாரத்தோடு பின்னிப் பிணைந்தது. இஸ்லாமியத் தனியுரிமைச் சட்டத்தின் முக்கிய அமைப்பு
வக்பு வாரியச் சட்டத்தைச் சிதைப்பது என்பது சிறுபான்மையினருக்கு நம் அரசியலமைப்பும் நம் நாட்டின் தலைவர்களும் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் காற்றில் பறக்க விடுவதன்றி வேறென்ன?
மத்திய பா.ஜ.க. அரசு மேற்கொண்டு வரும் பெரும்பான்மைவாத மற்றும் பிளவுவாத அரசியலானது, இஸ்லாமியச் சகோதரர்களைத் தொடர்ச்சியாகப் பாதுகாப்பற்ற நிலையிலும் அச்சத்திலும் உறைய வைத்திருக்கும் உளவியல் தாக்குதலன்றி வேறென்ன?
கையில் ஆட்சி அதிகாரம் இருக்கிறது என்ற ஒரே காரணத்திற்காகக் கூட்டணிக் கட்சிகளின் துணையோடு, எந்தவொரு சமூக நல்லிணக்கத்துக்கு எதிரான சட்டத்தையும் நிறைவேற்றிவிடலாம் என்ற மனநிலை கொண்ட ஆட்சியாளர்கள். மக்களின் தன்னெழுச்சி மூலம் எதிர்கொண்ட விளைவுகளை வரலாறு முழுக்க நாம் பார்த்திருக்கிறோம்.
இஸ்லாமியச் சிறுபான்மையினரின் நலன் காக்கவே இச்சட்டத் திருத்தம், எதிர்க்கட்சியினர் அவர்களைத் தவறாகத் திசைதிருப்புகிறார்கள்" என்ற வெற்று வாதத்தை மத்திய ஆளும் கட்சியினர் முன்வைக்கின்றனர்.
மத்திய பா.ஜ.க. அரசு சொல்வது போல, இது இஸ்லாமியர்களின் நலன் காக்கும் சட்டம் என்பது உண்மையானால், அதைத் தாக்கல் செய்யக் கூட அவர்களிடம் ஏன் இஸ்லாமியப் பிரதிநிதி ஒருவர்கூட இல்லை?
ஜனநாயக அவையில் அதுபற்றி விவாதிக்கப் போதுமான இஸ்லாமிய உறுப்பினர்கள் இல்லையே ஏன்?
இதுதான், இன்று பா.ஜ.க. அரசு நிறுவியுள்ள மிக மோசமான பெரும்பான்மைவாத ஆதிக்க அரசியல்
இந்தியாவின் அனைத்து எதிர்க்கட்சிகளும் மற்றும் ஜனநாயகச் சக்திகளும் இந்த சட்டத் திருத்த மசோதாவை எதிர்க்கின்றன. ஒருமித்த குரலில் மத்திய அரசின் செயலைக் கண்டிக்கின்றன.
இந்த மசோதா பற்றிப் பரிசீலிக்க அமைக்கப்பட்ட நாடாளுமன்றக் கூட்டுக் குழு. வரலாற்றிலேயே முதன்முறையாக வழக்கத்திற்கு மாறாக, இணக்கமான பரிந்துரைகளை மறுத்தது என்று அக்கூட்டுக்குழுவில் இடம்பெற்ற எதிர்க்கட்சி உறுப்பினர்களே குற்றம் சாட்டி உள்ளனர். இது பா.ஐ.க. அரசின் கொடுங்கோல் அதிகாரமன்றி வேறென்ன?
தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் வக்பு சட்டத் திருத்த மசோதாவைத் திரும்பப் பெற வலியுறுத்தித் தீர்மானங்கள் இயற்றப்பட்டுள்ளன. தமிழக வெற்றிக் கழகமும் தனது பொதுக் குழுவில் அதே கருத்தை வலியுறுத்தித் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.
நம் நாட்டின் ஒட்டுமொத்த ஜனநாயக விழுமியங்களையும் மறுத்து, தனது பெரும்பான்மைவாத ஆதிக்கத்தின் துணையோடு. இஸ்லாமியச் சகோதரர்களுக்கு எதிரான அரசியலைக் கையில் எடுத்துள்ள மத்திய பா.ஜ.க. அரசுக்கு, தமிழக வெற்றிக் கழகத்தின் வன்மையான கண்டனங்கள்.
நாட்டின் ஒட்டுமொத்த ஜனநாயகக் குரல்களுக்கும் செவிமடுக்கும் விதமாக. ஜனநாயகத்திற்கு விரோதமான இந்தச் சட்டத் திருத்த மசோதாவை உடனே திரும்பப் பெற வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகம் வலியுறுத்துகிறது.
மத்திய பா.ஜ.க. அரசு இதனைச் செய்யாத பட்சத்தில், இஸ்லாமிய சகோதரர்களோடு இணைந்து அவர்களின் வக்ஃபு உரிமை சட்டப் போராட்டத்தில் தமிழக வெற்றிக் கழகமும் பங்கேற்றுப் போராடும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Apr 03, 2025 19:17 IST
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 322 புள்ளிகள் சரிவு
வர்த்தகம் தொடங்கியதில் இருந்தே சரிவுடன் காணப்பட்ட பங்குச் சந்தை குறியீட்டு எண்கள் 0.4% வரை சரிந்து முடிந்தன. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 322 புள்ளிகள் சரிந்து 76,295 புள்ளிகளானது. வர்த்தக தொடக்கத்தில் 800 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி அடைந்து 75,807 புள்ளிக்கு சென்ற சென்செக்ஸ் உடனே மீண்டது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவனங்களில் 17 நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்து விற்பனையாயின. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 82 புள்ளிகள் சரிந்து 23,250 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு பெற்றது.
-
Apr 03, 2025 17:34 IST
தமிழ்நாட்டில் மேலும் 6 மண்சார் உணவுப் பொருட்களுக்கு புவிசார் குறியீடு!
தமிழ்நாட்டில் மேலும் 6 மண்சார் உணவுப் பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. செட்டிக்குளம் சின்ன வெங்காயம், பண்ருட்டி பலாப்பழம், பண்ருட்டி முந்திரி, புளியங்குடி எலுமிச்சை, விருதுநகர் சம்பா வத்தல், ராமநாதபுரம் சித்திரை கார் அரிசி ஆகிய 6 பொருட்களுக்கு புவிசார் குறியீடு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம், தமிழ்நாட்டின் புவிசார் குறியீடு அங்கீகாரம் பெற்ற பொருட்களின் எண்ணிக்கை 69 ஆக உயர்ந்துள்ளது. -
Apr 03, 2025 17:30 IST
மோடியை சந்தித்துப் பேச ஓ.பி.எஸ் - இ.பி.எஸ். இருவருக்கும் நேரம் ஒதுக்கீடு
ஏப்ரல் 6-ம் தேதி தமிழ்நாடு வரும் பிரதமர் மோடியை தனித் தனியே சந்தித்துப் பேச எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வத்துக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
-
Apr 03, 2025 17:26 IST
பொதுமக்கள் அச்சமின்றி தர்பூசணி சாப்பிடலாம் - உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி விளக்கம்
உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சதீஸ்: “பொதுமக்கள் அச்சமின்றி தாராளமாக தர்பூசணிப் பழங்களை சாப்பிடலாம்; பழம் விற்பவர்கள் எங்களுக்கு எதிரி இல்லை; நான் கார்ப்பரேட் நிறுவனத்துக்கு ஆதரவாக செயல்படவில்லை” ன்று விளக்கம் அளித்துள்ளார்.
-
Apr 03, 2025 16:44 IST
அப்துல்லா என் தம்பி; நான் அவர் அண்ணன் - ராஜ்ய சபாவில் திருச்சி சிவா பேச்சு
மாநிலங்களவையில் வக்பு திருத்த மசோதா மீதான விவாதத்தில் தி.மு.க எம்.பி. திருச்சி சிவா பேசியதாவது: “அப்துல் கலாம் போல பல இஸ்லாமியர்கள் இந்திய நாட்டின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்திருக்கிறார்கள்; இங்கே இப்போதுகூட, அப்துல்லா என் தம்பி, நான் அவர் அண்ணன்; தமிழ்நாட்டில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெறும் போது இஸ்லாமியர்கள் பக்தர்களுக்கு குளிர்பானங்கள் வழங்குவார்கள்” என்று கூறினார்.
-
Apr 03, 2025 16:38 IST
இந்தியா - தாய்லாந்து உறவு ஆழமான கலாச்சாரம், ஆன்மீகத்துடன் தொடர்புடையது - மோடி
தாய்லாந்து சென்றுள்ள பிரதமர் மோடி: “இந்தியா - தாய்லாந்து இடையிலான நூற்றாண்டு கால உறவு என்பது ஆழமான கலாச்சாரம், ஆன்மீகத்தோடு தொடர்புடையது. தாய்லாந்தின் கிராமப்புற வாழ்க்கையுடன் ராமாயணக்கதை ஆழமாக வேரூன்றி உள்ளது. இந்தியா - தாய்லாந்து இடையே பரஸ்பர வர்த்தகம் மற்றும் முதலீட்டை அதிகரிப்பது தொடர்பாக இருவரும் விவாதித்தோம்.” என்று கூறினார்.
-
Apr 03, 2025 16:27 IST
வக்பு திருத்தச் சட்டத்தை சுப்ரீம் கோர்ட் ரத்து செய்யும் - ராஜ்ய சபாவில் திருச்சி சிவா பேச்சு
மாநிலங்களவையில் வக்பு திருத்த மசோதா மீதான விவாதத்தில் தி.மு.க எம்.பி. திருச்சி சிவா சிவா பேசியதாவது: “வக்பு விவகாரங்களை தங்கள் அதிகார வரம்புக்குள் கொண்டுவர ஒன்றிய அரசு முயற்சி செய்கிறது. இந்த மசோதா இஸ்லாமியர் மனதில் அச்சத்தை உண்டாக்கும். இந்த சட்டத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்யும். ஜின்னா இஸ்லாமிய நாட்டை உருவாக்கியபோது இந்திய இஸ்லாமியர்கள் பாகிஸ்தான் செல்லவில்லை. எதிர்க்கட்சிகள் ஆட்சி நடைபெறும் மாநிலங்களில் மத நல்லிணக்கம் சிறப்பாக உள்ளது. ஹரியானாவில் ரமலான் விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது. ஹோலி பண்டிகை சமயத்தில் ரமலான் கொண்டாட வெளியே வர வேண்டாம் என உத்தரப் பிரதேசத்தில் பேசப்படுகிறது” என்று பேசினார்.
-
Apr 03, 2025 16:00 IST
டிரம்பின் புதிய பரஸ்பர வரி – பிரதமர் அலுவலகம் அவசர ஆலோசனை
டிரம்பின் புதிய பரஸ்பர வரி தொடர்பாக பிரதமரின் முதன்மைச் செயலாளர் தலைமையில் அவசர ஆலோசனை நடைபெற்று வருகிறது. நிதி ஆயோக், வர்த்தகத் துறை மற்றும் வெளியுறவு துறையின் மூத்த அதிகாரிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். 27% பரஸ்பர வரியை அமெரிக்கா உயர்த்தி இருப்பதால் ஏற்படக்கூடிய விளைவுகள், தாக்கங்கள் குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது
-
Apr 03, 2025 15:42 IST
இந்தியாவுக்கு சொந்தமான 4,000 சதுர கி.மீ நிலத்தை சீனா ஆக்கிரமித்துள்ளது - ராகுல்காந்தி
இந்தியாவுக்கு சொந்தமான 4,000 சதுர கி.மீ நிலத்தை ஆக்கிரமித்துள்ளது. சீனா சில நேரங்களில் சீன தூதுவருடன் நமது வெளியுறவு அமைச்சர் கேக் வெட்டிக் கொண்டிருக்கிறார். சீனா ஆக்கிரமித்துள்ள நிலத்தை நாம் திரும்ப பெற வேண்டும். அமெரிக்காவின் 26% வரி உயர்வு, இந்திய பொருளாதாரத்தை சீரழிக்க போகிறது. அமெரிக்கா 26% வரி உயர்வு குறித்து மத்திய அரசு என்ன செய்யப்போகிறது என்பதை தெளிவுப்படுத்த வேண்டும் என ராகுல்காந்தி கூறியுள்ளார்
-
Apr 03, 2025 15:40 IST
நாடாளுமன்றத்தின் ஒப்புதலை பெறாமல் கச்சத்தீவு இலங்கைக்கு வழங்கப்பட்டது - டி.ஆர்.பாலு
நாடாளுமன்றத்தின் ஒப்புதலை பெறாமல் கச்சத்தீவு இலங்கைக்கு வழங்கப்பட்டது. கச்சத்தீவு இலங்கைக்கு வழங்கப்பட்ட போது அப்போதைய மத்திய அரசு மாநில அரசிடம் ஆலோசிக்கவில்லை. நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இல்லாமல் கச்சத்தீவு வழங்கப்பட்டது சட்ட விரோதமானது. இலங்கையிடம் இருந்து கச்சத்தீவை விரைவாக மீட்டெடுக்க வேண்டும். நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இல்லாமல் இந்தியாவின் எந்த ஒரு இடத்தையும் வழங்க முடியாது என உச்சநீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டி தி.மு.க எம்.பி டி.ஆர்.பாலு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்
-
Apr 03, 2025 15:17 IST
சிவாஜி இல்லம் ஜப்தி வழக்கில் நடிகர் பிரபு தரப்பு வாதம்; உயர் நீதிமன்றம் கேள்வி
சிவாஜி இல்லம் ஜப்தி வழக்கில், ராம்குமார் பெற்ற மூன்று கோடி ரூபாய் கடனுக்காக எனக்கு சொந்தமான 150 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை முடக்க உத்தரவிடப்பட்டுள்ளது என நடிகர் பிரபு தரப்பில் கூறப்பட்டது. அப்போது ராம்குமார் சகோதரர் தானே? அந்த கடனை நீங்கள் செலுத்தி விட்டு பின்னர் அவரிடம் இருந்து பெற்றுக்கொள்ளலாமே? என உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது
-
Apr 03, 2025 15:14 IST
த.வெ.க நிர்வாகிகள் - போலீசார் இடையே தள்ளுமுள்ளு
த.வெ.க சார்பில் நடைபெற்ற புதிய அலுவலகம் மற்றும் நீர்மோர் பந்தல் திறப்பு விழா நிகழ்ச்சியில் ஏராளமான த.வெ.க நிர்வாகிகள் குவிந்தனர். மக்களை இடையூறு செய்யக் கூடாது என போலீசார் அறிவுறுத்திய நிலையில், நாங்கள் யாருக்கும் இடையூறு ஏற்படுத்தவில்லை என த.வெ.க நிர்வாகிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்
-
Apr 03, 2025 14:59 IST
பிராட்வே பேருந்து நிலையத்தில் அரசுப் பேருந்து மோதி மூதாட்டி உயிரிழப்பு.
சென்னை: பிராட்வே பேருந்து நிலையத்தில் அரசுப் பேருந்து மோதிய விபத்தில் பழனியம்மாள் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த துயரம். ஓட்டுநரின் கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டுள்ளதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தகவல். ஓட்டுநர் தணிகைமலை கைது.
-
Apr 03, 2025 14:20 IST
“வாக்குகளை பறிக்க கச்சத்தீவு தீர்மானம்” - சீமான்
"கச்சத்தீவை மீட்க போராடுவோம் என 4 கட்சிகளும் நாடகம் போடுகின்றன தேர்தல் நேரம் என்பதால் கோவில் திருவிழா நாடகம் போல, வாக்குகளை பறிக்க கச்சத்தீவு தீர்மானம் என அற்ப நாடகத்தை அரங்கேற்றி வருகின்றனர்” நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்
-
Apr 03, 2025 14:12 IST
தங்கள் சொத்து விவரங்களை பொது வெளியில் பகிர உச்ச நீதிமன்ற நீதிபதிகள் முடிவு!
நீதித்துறை மீதான நம்பிக்கையை நிலைநாட்ட, தங்கள் சொத்து விவரங்களை பொது வெளியில் பகிர உச்ச நீதிமன்ற நீதிபதிகள் முடிவு. டெல்லியில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இடையே நடைபெற்ற கூட்டத்தில் அனைத்து நீதிபதிகளும் இதற்கு ஒப்புதல் அளித்துள்ளதை அடுத்து உச்சநீதிமன்ற இணையதளத்தில் சொத்து விவரங்கள் வெளியிடப்பட உள்ளன. டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த யஷ்வந்த் சர்மா வீட்டில் கோடிக் கணக்கான பணம் சிக்கியது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது!
-
Apr 03, 2025 13:38 IST
Calling Bell அழுத்தி செயின் பறிப்பு - ஒருவர் கைது
சென்னை வானகரத்தில் குடியிருப்பின் 10வது மாடியில், தனியாக இருந்த பெண்ணின் வீட்டில், Calling Bell அழுத்தி, பெண்ணை தாக்கிவிட்டு செயின் பறிப்பில் ஈடுபட்ட சதீஷ் (26) கைது செய்யப்பட்டுளளார். செயின் பறிப்பு சிசிடிவி காட்சி வெளியான நிலையில், கொள்ளை முயற்சி, காயம் ஏற்படுத்துதல் உட்பட பல பிரிவுகளின் கீழ் வழக்குப்பதியப்பட்டு சதீஷ் கைது; சதீஷ் மீது ஏற்கெனவே போக்ஸோ, கொலை முயற்சி உட்பட 10க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன
-
Apr 03, 2025 13:35 IST
வானிலை முன்னெச்சரிக்கை - 2 புதிய ரேடார்கள்
தமிழ்நாட்டில் வானிலை முன்னெச்சரிக்கை மற்றும் புயல் கண்காணிப்பிற்கு 2 புதிய ரேடார்கள். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை கொள்கை விளக்கக்குறிப்பில் தகவல். வானிலை முன்னெச்சரிக்கை துல்லியத்தை மேம்படுத்த ஏற்காடு, ராமநாதபுரத்தில் டாப்ளர் ரேடார்கள் நிறுவப்படும். ரூ.56 கோடி மதிப்பில் சி பேண்டு டாப்ளர் ரேடார்கள் நிறுவப்படும் என அறிவிப்பு
-
Apr 03, 2025 13:33 IST
தர்பூசணி பற்றிய அச்சத்தை போக்க வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
"தர்பூசணி தொடர்பான அர்த்தமற்ற வதந்திகளால் உழவர்களுக்கு பாதிப்பு” தர்பூசணி பழம் குறித்து மக்களிடம் நிலவும் அச்சத்தை அரசு போக்க வேண்டும்; ரசாயனம் கலந்த தர்பூசணி தான் அடர்சிவப்பு நிறத்தில் இருக்கும் என உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரி காணொலி; அதிகாரி வெளியிட்ட விழிப்புணர்வு காணொலிதான் அனைத்து குழப்பங்களுக்கும் காரணம்; தர்பூசணி பழங்களை சாப்பிட மக்கள் தயங்குவதால் விற்பனை பெருமளவில் குறைந்து விவசாயிகளுக்கு இழப்பு - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
-
Apr 03, 2025 12:43 IST
பேரவைக்கு வெளியே திமுகவினர் ஆர்ப்பாட்டம்
பேரவைக்கு வெளியே திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வக்ஃபு வாரிய திருத்த மசோதாவுக்கு எதிராக இஸ்லாமியர்களை வஞ்சிக்காதே என பதாகை ஏந்தி பேரவைக்கு வெளியே திமுக எம்.எல்.ஏக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
-
Apr 03, 2025 12:10 IST
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி
பிரதமர் மோடியை சந்தித்து தமிழ்நாடு கோரிக்கைகள் குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்துவார் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி அளித்துள்ளார்.
-
Apr 03, 2025 11:39 IST
பிலால் ஹோட்டலில் சாப்பிட்டு இதுவரை 55 பேருக்கு உடல்நலம் பாதிப்பு!
சென்னை திருவல்லிக்கேணி பிலால் ஹோட்டலில் உணவு சாப்பிட்டதால் இதுவரை 55 பேரில் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். கடை உரிமையாளரின் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
-
Apr 03, 2025 11:05 IST
கார்ல் மார்க்ஸ்க்கு, சென்னையில் உருவச்சிலை
“வரலாற்றை மாற்றியமைத்த மாமேதை கார்ல் மார்க்ஸ்க்கு, சென்னையில் உருவச்சிலை அமைக்கப்படும்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.
-
Apr 03, 2025 10:45 IST
மெரினா லூப் சாலையில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்
சென்னை மெரினா லூப் சாலையில் மீனவர்கள் பேரணியாக வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நொச்சிக்குப்பம்-சீனிவாசபுரம் பகுதிகளை மீன்பிடி தொழில் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்கக் கோரி 100-க்கும் மேற்பட்ட மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
-
Apr 03, 2025 10:42 IST
"மூக்கையா தேவருக்கு உசிலம்பட்டியில் மணிமண்டபம்"
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் மூக்கையா தேவருக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். சென்னையில் கார்ல் மார்க்ஸ்-க்கு சிலை நிறுவப்படும் என்றும் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
-
Apr 03, 2025 09:56 IST
சென்னை: தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.68,480-க்கும் ஒரு கிராம் ரூ.8,560-க்கும் விற்பனையாகிறது.
-
Apr 03, 2025 09:53 IST
சென்னை: அதிவேகமாக சென்ற கார் மோதிய விபத்தில் ஒருவர் பலி
சென்னை தேனாம்பேட்டையில் அதிவேகமாக சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து மோதிய விபத்தில் பிளாட்பாரத்தில் அமர்ந்திருந்த பாபு என்பவர் உயிரிழந்தார். ரித்தேஷ், விக்ரம் மற்றும் தருண் சோலங்கி ஆகிய 3 பேர் காயங்களுடன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தை ஏற்படுத்திய அபிஸ் அகமது (52) என்பவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
Apr 03, 2025 09:51 IST
கருப்பு பட்டை அணிந்து சட்டப்பேரவைக்கு வருகை தந்த MLAக்கள்
மக்களவையில் நேற்று வக்ஃப் வாரிய மசோதா நிறைவேறிய நிலையில், திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் கருப்பு பட்டை அணிந்து சட்டப்பேரவைக்கு வருகை தந்துள்ளனர். நேற்று நடைபெற்ற வாக்கெடுப்பில் ஆதரவாக 288 பேரும், எதிராக 232 எம்.பி.க்களும் வாக்கு செலுத்தியதால் மசோதா நிறைவேறியது.
-
Apr 03, 2025 09:48 IST
வக்ஃப் மசோதாவை எதிர்த்து திமுக சார்பில் வழக்கு - ஸ்டாலின்
வக்ஃப் மசோதாவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் திமுக சார்பில் வழக்குத் தொடரப்படும் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
-
Apr 03, 2025 09:28 IST
சென்னை - கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் 21 புறநகர் ரயில்கள் ரத்து
சென்னை - கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் பொன்னேரி - கவரப்பேட்டை இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனை முன்னிட்டு இன்று மற்றும் ஏப்ரல் 5 ஆகிய நாட்களில் 21 புறநகர் ரெயில்கள் ரத்து செய்யப்படுகின்றன. அந்நாட்களில் பயணிகள் வசதிக்காக 10 சிறப்பு ரெயில்கள் சென்னை - எண்ணூர் இடையே இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
Apr 03, 2025 08:32 IST
தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதால் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று முதல் வரும் 5-ம் தேதி வரை 7-ம் தேதி வரை 11 செ.மீ. வரை மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
-
Apr 03, 2025 08:04 IST
ஐ.பி.எல்: கொல்கத்தா - ஐதராபாத் இன்று மோதல்
ஐபிஎல் 2025 தொடரின் 15வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற இருக்கிறது. கடந்த 2024 சீசன் இறுதி போட்டிக்கு பின்னர் இந்த இரு அணிகளும் நேருக்கு நேர் மோதிக்கொள்கின்றன. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்கும் போட்டியில் இரு அணிகளும் மோதுகின்றன. இந்த போட்டி தொடங்கும் முன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 3 போட்டிகளில் ஒரு வெற்றி, 2 தோல்வி என புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. சன்ரைசர்ஸ் அணியும் 3 போட்டிகளில் ஒரு வெற்றி, 2 தோல்வி என ரன்ரேட் அடிப்படையில் 8வது இடத்தில் உள்ளது.
-
Apr 03, 2025 07:45 IST
தாய்லாந்து புறப்பட்டார் பிரதமர் மோடி
2 நாள் பயணமாக டெல்லியில் இருந்து சிறப்பு விமானம் மூலம் தாய்லாந்தின் பாங்காக்கிற்கு பிரதமர் மோடி புறப்பட்டார். நாளை பாங்காக்கில் நடைபெறும் 6-வது பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார் பிரதமர் மோடி
-
Apr 03, 2025 07:17 IST
மக்களவையில் வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றம்
மக்களவையில் வக்ஃபு வாரிய சட்ட திருத்த மசோதா நிறைவேறியது. எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே மக்களவையில் இந்த மசோதா மீதான விவாதம் நடைபெற்றது. 12 மணி நேரம் விவாதம் நடைபெற்ற நிலையில் நள்ளிரவு 12 மனியளவில் மசோதா மீதான வாக்கெடுப்பு நடைபெற்றது.
-
Apr 03, 2025 07:12 IST
இந்தியாவுக்கு 26% வரி விதிக்க முடிவு - டிரம்ப் அறிவிப்பு
அமெரிக்காவுக்கு 52% வரி விதிக்கும் இந்தியாவுக்கு பரஸ்பர வரியாக இந்தியப் பொருட்கள் மீதான இறக்குமதி வரி விகிதத்தை 26%-ஆக உயர்த்தி அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். சீனாவுக்கு 34%, இலங்கைக்கு 44%, கம்போடியாவுக்கு 49%, வியட்நாமுக்கு 46% வரிகள் விதிக்கப்பட்டுள்ளன. இன்றைய தினமே அமெரிக்காவின் விடுதலை நாள் என்றும், அமெரிக்காவை விட பிற நாடுகள்தான் அதிகமான வரிகளை விதிக்கின்றன என்றும் டிரம்ப் பேசியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.