/indian-express-tamil/media/media_files/2025/04/05/0PbF2tsdzyzprxQsG9lx.jpg)
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ100.80-க்கும், டீசல் விலை, ரூ92.39-க்கும், கேஸ் விலை ரூ90.50-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
-
Apr 04, 2025 21:55 IST
இலங்கை சென்ற மோடிக்கு உற்சாக வரவேற்பு
தாய்லாந்து பயணத்தை முடித்துக் கொண்டு, அரசு முறை பயணமாக இலங்கைக்கு பிரதமர் மோடி சென்றார். அங்கு இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத தலைமையிலான உயர்மட்ட அதிகாரிகள் குழுவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
-
Apr 04, 2025 20:28 IST
ஸ்டாலின் மீது தமிழிசை குற்றச்சாட்டு
கச்சத்தீவு விவகாரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் நாடகம் ஆடுவதாக பா.ஜ.க மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் குற்றம் சாட்டியுள்ளார். குறிப்பாக, "இந்தியாவின் ஒரு அங்கமாக இருந்த கச்சத்தீவை தாரை வார்த்தது நீங்கள் தானே? அதை மீட்டு எடுப்பதற்கு மத்தியில் ஆட்சியில் இருந்த போது என்ன செய்தீர்கள்?" என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
-
Apr 04, 2025 19:23 IST
பள்ளிகளில் சாதி ரீதியான சின்னங்கள் - பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கை
பள்ளிகளில் சாதி ரீதியான சின்னங்கள் இடம்பெறக் கூடாது என தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஆண்டுவிழா சிறந்த முறையில் நடத்தப்படும். இதில் மாணவர்களின் கலை, இலக்கியம், விளையாட்டு போன்ற பல்வேறு திறன்களை பெற்றோர்கள் முன்னிலையில் வெளிக்காட்ட வாய்ப்பு ஏற்படுத்தப்படும். இதற்காக சுமார் ரூ.15 கோடி நிதி ஒதுக்கப்படும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சரால் சட்டப் பேரவையில் கடந்தாண்டு அறிவிக்கப்பட்டது.
அதன்படி 2024-25-ம் கல்வியாண்டில் பள்ளி ஆண்டு விழா கொண்டாட மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு ரூ.15 கோடி நிதியை பகிர்ந்தளித்து விழாவுக்கான வழிகாட்டுதல்களும் வழங்கப்பட்டுள்ளது. இதற்கிடையே கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே சோப்பனூர் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழாவில் திரைப்பட பாடலுக்கு 5 மாணவர்கள் நடனம் ஆடியுள்ளனர். அதில் ஒரு மாணவன் வீரப்பன் படம் பொறித்த டி-சர்ட்டை கையில் பிடித்துக் காட்டியதோடு, 2 மாணவர்கள் அரசியல் கட்சி துண்டுகளை அணிந்து நடனம் ஆடியதாகவும் புகார் மனு இயக்குநரகத்துக்கு வந்துள்ளது.
இதையடுத்து அரசுப் பள்ளிகளில் ஆண்டுவிழாவின் போது இத்தகைய திரைப்படப் பாடல்கள் ஒளிபரப்புவது, சாதி ரீதியான சின்னங்களை வைத்துக் கொள்வது போன்றவற்றை கட்டாயம் தவிர்க்க வேண்டும். மீறினால் சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மீது விதியின்கீழ் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள நேரிடும். எனவே, இந்த விவகாரத்தில் உரிய கவனத்துடன் செயல்பட வேண்டுமென அனைத்துப் பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களும் அறிவுறுத்த வேண்டும்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
-
Apr 04, 2025 19:04 IST
தெற்கை மவுனிக்கச் செய்யும் அரசியல் ஆயுதமா? – ஸ்டாலின் கேள்வி
"வடமாநில மக்கள்தொகை பெருக்கத்தை தென் மாநிலங்களை மவுனமாக்கும் அரசியல் ஆயுதமாக பயன்படுத்த கூடாது" என லண்டனில் இருந்து வெளியாகும் பைனான்சியல் டைம்ஸ் கட்டுரையை சுட்டிக்காட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
மேலும் "தேசிய மக்கள்தொகை இலக்குகளை நோக்கிய முயற்சியை தண்டிக்கும் வகையில் இருக்கக் கூடாது. நியாயமான கூட்டாட்சியை குறைத்து மதிப்பிடும் வகையில் தொகுதி மறுவரையறை அமையக்கூடாது" என்றும் அவர் கூறியுள்ளார்.
-
Apr 04, 2025 18:49 IST
வக்பு திருத்த சட்டத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் காங்கிரஸ் வழக்கு
வக்பு வாரிய திருத்த சட்டத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் காங்கிரஸ் எம்.பி. முகமது ஜாவேத் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. வக்பு மசோதா தொடர்பாக வழக்கு தொடரப்படும் என காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் ஏற்கெனவே அறிவித்திருந்த நிலையில் இன்று மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
-
Apr 04, 2025 18:37 IST
ஆன்லைன் ரம்மியால் ஒட்டுமொத்த சமூகமும் பாதிப்பு - ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு வாதம்
ஆன்லைன் ரம்மி விளையாட்டால் தனி நபர் மட்டுமின்றி, ஒட்டுமொத்த குடும்பமும், சமூகமும் பாதிக்கப்படுகிறது என தமிழக அரசு வாதம் தெரிவித்துள்ளது. ஆன்லைன் ரம்மி விளையாட்டு தொடர்பாக வழக்கில் உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தரப்பில் பதில் வாதம் தெரிவித்துள்ளது. விளையாடுபவர்களின் விவரங்களை கேட்பதால் அந்தரங்க உரிமைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது எனவும் தெரிவித்துள்ளது.
-
Apr 04, 2025 17:52 IST
கச்சத்தீவை நிரந்தரமாக மீட்கும் வரை 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுக்க விஜய் வலியுறுத்தல்
"கச்சத்தீவை நிரந்தரமாக மீட்கும் வரை 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுக்க வேண்டும்" என்று தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
-
Apr 04, 2025 17:23 IST
‘போராட்டம் எதற்கு என்று தெரியாத கட்சி த.வெ.க’ - அண்ணாமலை கடும் தாக்கு
பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை: “எதற்கு போராட்டம் செய்கிறோம் என்று தெரியாமலேயே ஒரு கட்சி தமிழ்நாட்டில் போராட்டம் செய்துகொண்டிருக்கிறது. அந்த கட்சிதான் த.வெ.க. த.வெ.க.உள்ளிட்ட எந்த கட்சியாகவும் இருக்கட்டும் எதற்கு போராட்டம் நடத்துகிறீர்கள் என்று சொல்லுங்கள், நல்ல விஷயமாக இருந்தால் நானும் மத்திய அரசிடம் சொல்கிறேன்” என்று த.வெ.க நடத்திய வக்பு திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டம் குறித்து அண்ணாமலை கடுமையாக தாக்கியுள்ளார்.
-
Apr 04, 2025 17:01 IST
இ.பி.எஸ்-க்கு எதிரான வழக்கு; விசாரணை ஏப்ரல் 25-க்கு தள்ளிவைப்பு
எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான அவதூறு வழக்கு விசாரணைக்கு விதிக்கபட்ட இடைக்கால தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கை ரத்து செய்யக் கோரி இ.பி.எஸ் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் ஏப்ரல் 25க்கு தள்ளிவைத்துள்ளது
-
Apr 04, 2025 16:58 IST
மாஞ்சோலையில் ஆய்வு செய்ய மத்திய குழுவுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
மாஞ்சோலை அகஸ்தியர் மலைப்பகுதியில் 12 வாரங்களுக்குள் ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய மத்திய குழுவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காப்புக்காடு, புலிகள் வாழிடங்கள், யானை வழித்தடங்களை பாதுகாத்து மீட்டெடுப்பது குறித்தும் பரிந்துரைகளை வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் ஆய்வு பணிக்கு மாவட்ட நிர்வாகம் மத்திய குழுவுக்கு உதவ வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
-
Apr 04, 2025 16:42 IST
கேண்டி க்ரஷ் உள்ளிட்ட விளையாட்டுகளுடன் ஆன்லைன் ரம்மியை ஒப்பிடுவது தவறு; ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு வாதம்
ஆன்லைன் ரம்மியால் தனி நபர் மட்டுமல்ல ஒட்டுமொத்த குடும்பமும், சமூகமும் பாதிக்கப்படுகிறது. கேண்டி க்ரஷ் உள்ளிட்ட விளையாட்டுகளுடன் ஆன்லைன் ரம்மியை ஒப்பிடுவது தவறு என்று ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு வாதிட்டுள்ளது. ஆன்லைன் விளையாட்டுகளுக்கு நெரக் கட்டுப்பாடு விதித்ததை எதிர்த்து விளையாட்டு நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கு ஏப்ரல் 7-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
-
Apr 04, 2025 16:30 IST
விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு நடைமுறைக்கு வந்தது
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு நடைமுறைக்கு வந்தது. Y பிரிவு பாதுகாப்பின்படி விஜய்கு 8 முதல் 11 பேர் கொண்ட துப்பாக்கி ஏந்திய மத்திய ரிசர்வ் படை கமாடோக்கள் சுழற்சி முறையில் பாதுகாப்பு வழங்கப்படும் என்று கூறினார்.
-
Apr 04, 2025 16:27 IST
இலங்கை கடற்படையால் கைது செய்யபட்ட தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை
கடந்த 27ம் தேதி எல்லை தாண்டி மீன்பிடித்ததாக, இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். பிரதமர் மோடியின் இலங்கை பயணத்தை தொடர்ந்து, இலங்கை அரசு தமிழக மீனவர்கள் 11 பேரை முதற்கட்டமாக விடுதலை செய்தது.
-
Apr 04, 2025 16:25 IST
தீயணைப்புத் துறை இயக்குநராக சீமா அகர்வால் நியமனம் - தமிழக அரசு அறிவிப்பு
குடிமைப் பொருள் துறை டி.ஜி.பி சீமா அகர்வால் தீயணைப்புத் துறை இயக்குநராக நியமனம் செய்து தமிழக அரசு அறிவித்துள்ளது.
குடிமைப் பொருள் துறை ஐ.ஜி-யாக இருந்த ரூபேஷ்குமார் மீனா அதே துறையின் டி.ஜி.பி-யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
லஞ்சம், ஊழல் கண்காணிப்புத்துறை ஐ.ஜி சந்தோஷ் குமார் பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜி-யாக நியமனம் செயய்ப்பட்டுள்ளார்.
சென்னை அமலாக்கப்பிரிவு ஐ.ஜி-யாக கபில் குமார் சரத்கரை நியமனம் செய்து தமிழக அரசு அறிவித்துள்ளது.
-
Apr 04, 2025 15:46 IST
பா.ஜ.க மேலிட முடிவை பின்பற்றுவோம்: தமிழிசை
தமிழக பா.ஜ.க தலைவராக இருக்கும் அண்ணாமலை மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகி வரும் நிலையில், அடுத்த தலைவருக்கான போட்டியில் நான் இல்லை என்று அண்ணாமலை கூறியுள்ளார். அதேபோல் பா.ஜ.க தலைவருக்கான தேர்தலில் போட்டியிடுகிறீர்களா என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ள முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்திரராஜன், பா.ஜ.க.வில் மேலிட நடைமுறை என்பது கிடையாது. கட்சி மேலிட முடிவை பின்பற்றுவோம் என்று கூறியுள்ளார்.
-
Apr 04, 2025 15:41 IST
தமிழக பா.ஜ.க அடுத்த தலைவருக்கான போட்டியில் நான் இல்லை: அண்ணாமலை
தமிழக பா.ஜ.க தலைவராக இருக்கும் அண்ணாமலை மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகி வரும் நிலையில், அடுத்த தலைவருக்கான போட்டியில் நான் இல்லை என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
-
Apr 04, 2025 15:24 IST
த.வெ.க ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள் இடையே மோதல்
வக்பு மசோதாவுக்கு எதிராக திருவள்ளூரில் நடைபெற்ற தவெக ஆர்ப்பாட்டத்தில் திருவள்ளூர் மற்றும் பூந்தமல்லி தொகுதி நிர்வாகிகள் இடையே மோதல் ஏற்பட்டது. மாவட்ட செயலாளர் உடன் முதலில் யார் போட்டோ எடுப்பது என்பதில் ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பானது.
-
Apr 04, 2025 15:23 IST
கிணற்றுக்குள் டிராக்டர் கவிழ்ந்து 6 பேர் பலி
மகாராஷ்டிராவில் நாண்டேடு அருகே விவசாய கூலித் தொழிலாளர்களை ஏற்றிக் கொண்டு சென்ற டிராக்டர் கட்டுப்பாட்டை இழந்து கிணற்றில் கவிழ்ந்தது. இதில் 6 பேர் மரணமடைந்தனர்.
-
Apr 04, 2025 14:23 IST
அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிரான வழக்கு ரத்து
2008-ம் ஆண்டில் வீட்டு வசதி வாரிய, வீட்டு மனை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக, அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிராக அதிமுக வழக்கு தொடர்ந்த நிலையில், இந்த வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளர்.
-
Apr 04, 2025 13:55 IST
ரவுடி மொட்டை விஜய் என்கவுன்ட்டர் - நீதிபதி ஆய்வு
ரவுடி மொட்டை விஜய் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட விவகாரத்திக்ல், மொட்டை விஜய் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட இடத்தில் நெய்வேலி நீதிபதி பிரவீன் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது காவல் துணை கண்காணிப்பாளர் ரூபன் குமார் நடந்ததை விளக்கி கூறினார்
-
Apr 04, 2025 13:36 IST
தமிழகத்தில் 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் இன்று 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
-
Apr 04, 2025 13:13 IST
முதலமைச்சர் குறித்து அவதூறு; சி.வி சண்முகம் மீதான வழக்கை ரத்து செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவு
முதலமைச்சர் குறித்து அவதூறாக பேசியதாக சி.வி சண்முகம் மீது தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. ஜனநாயகத்தில் ஆளும்கட்சி குறித்து விமர்சிக்க எதிர்கட்சிக்கு அதிகாரம் உள்ளது. சி.வி.சண்முகம் பேச்சை பொதுமக்கள் பார்வையில் இருந்து அணுக வேண்டும். முன்னாள் அமைச்சர், எம்.பி. என்ற முறையில் முதலமைச்சரை விமர்சிக்கும் போது சி.வி. சண்முகம் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். முதலமைச்சர் குறித்தோ, அரசு குறித்தோ பேசும் போது வெறுப்பை வெளிப்படுத்தும் வகையில் பேசக்கூடாது என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது
-
Apr 04, 2025 13:06 IST
100 கோயில்களில் புத்தக விற்பனை நிலையங்கள்; ஸ்டாலின் திறந்து வைப்பு
100 கோயில்களில் புத்தக விற்பனை நிலையங்களை முதலமைச்சர் ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்
-
Apr 04, 2025 12:48 IST
நீட் தேர்வை வைத்து திமுக அரசியல் செய்கிறது - இபிஎஸ்
உயிரிழந்துள்ளதற்கு என்ன பதில்? நீட் தேர்வு இருக்காது என்று கூறிய உதயநிதி கள்ள மவுனம் சாதிப்பது ஏன்?; நீட் தேர்வை ரத்து செய்வதற்கான ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி
-
Apr 04, 2025 11:57 IST
விசாரணையை வேறு உயர் நீதிமன்றத்திற்கு மாற்ற கோரிக்கை
டாஸ்மாக் தொடர்பான வழக்கின் விசாரணையை சென்னை உயர் நீதிமன்றத்தில் இருந்து வேறு மாநில உயர் நீதிமன்றத்திற்கு மாற்றக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனு. தலைமை நீதிபதி சஞ்சய் கண்ணா அமர்வில், தமிழ்நாடு அரசு சார்பில் வழக்கறிஞர் முறையீடு. டாஸ்மாக் அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியதற்கு எதிராக தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்திருந்தது
-
Apr 04, 2025 11:56 IST
“சென்னையில் குட்கா புழக்கம், குற்ற சம்பவங்கள் குறைந்துள்ளன”
“சென்னையில் குட்கா புழக்கம், குற்ற சம்பவங்கள் குறைந்துள்ளன. குறிப்பாக கல்வி நிறுவனக்கள் அருகில் குட்கா விற்பனை தடுக்கப்படுள்ளது. மக்களின் எண்ண ஓட்டம் மாறியுள்ளது” -அருண், சென்னை பெருநகர காவல் ஆணையர்
-
Apr 04, 2025 11:32 IST
9 சவரன் தங்க சங்கிலியை மீட்டு, காவல் நிலையத்தில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர்
சென்னை: தாம்பரம் ரயில் நிலையம் அருகே ஆட்டோ ஓட்டுநர் சாகுல் ஹமீது என்பவர் தவறவிட்ட 9 சவரன் தங்க சங்கிலியை மீட்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர் கோட்டிஸ்வரன் (48) என்பவருக்கு குவியும் பாராட்டு.
-
Apr 04, 2025 11:16 IST
வக்ஃப் மசோதாவிற்கு எதிராக தவெக ஆர்ப்பாட்டம்!
வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் தவெக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்; கருப்பு சட்டை அணிந்து வக்ஃப் திருத்த மசோதாவுக்கு எதிராக முழக்கம். சென்னை பனையூரில் நடைபெறும் தவெக போராட்டத்தில் தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் பங்கேற்பு
-
Apr 04, 2025 10:48 IST
வக்ஃபு சட்டத்திருத்தம் - காங்கிரஸ் வழக்கு தொடர முடிவு
வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்று காங்கிரஸ் அறிவித்துள்ளது. இதே சட்டத் திருத்தத்திற்கு எதிராக திமுக சார்பில் வழக்கு தொடரப்படும் என்றும் நேற்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
-
Apr 04, 2025 10:45 IST
நீட் தேர்வுக்கு முடிவு கட்டுவதில் தாமதம் காட்டக்கூடாது - அன்புமணி
இந்தியாவில் நீட் தேர்வு அறிமுகம் செய்யப்பட்டு 8 ஆண்டுகள் ஆகிறது. அதனால், ஏற்பட்ட பயன்கள் என்ன? பாதிப்புகள் என்ன? என்பது குறித்து மத்திய அரசு ஆய்வு நடத்தியிருக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். அவ்வாறு ஆய்வு செய்திருந்தால், நீட் தேர்வு எந்த வகையிலும் உதவாது என்பதை உணர்ந்து அதை ரத்து செய்யும் முடிவை மத்திய அரசு எடுத்திருக்கும். நீட் தேர்வுக்கு முடிவு கட்டுவதில் இனியும் தாம்தம் காட்டக்கூடாது என்று கேட்டுக் கொண்டார்.
-
Apr 04, 2025 10:31 IST
கோகுலம் சிட்பண்ட் நிறுவனத்தில் அமலாக்கத் துறை சோதனை
சென்னை கோடம்பாக்கத்தில் கோகுலம் சிட்பண்ட் நிறுவனத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சட்டவிரோதமாக பணப் பரிமாற்றம் நடைபெற்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் அமலாக்கத்துறை சோதனை நடைபெறுகிறது. எம்புரான் திரைப்படத்தின் தயாரிப்பாளருக்குச் சொந்தமான கோகுலம் சிட்பண்டில் இ.டி. சோதனை நடக்கிறது.
-
Apr 04, 2025 09:46 IST
ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,280 குறைவு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,280 குறைந்து, ஒரு சவரன் ரூ.67,200-க்கும் ஒரு கிராம் ரூ.8,400-க்கும் விற்பனையாகிறது.
-
Apr 04, 2025 09:25 IST
தமிழ்நாடு காவல்துறையில் வேலைவாய்ப்பு
காவல் சார்பு ஆய்வாளர் (தாலுகா, ஆயுதப்படை) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம். மொத்தம் 1,299 பணியிடங்களுக்கு ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்டம் முடித்த 20-30 வயதுக்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். ரூ.36,900 - ரூ.1,16,000 ஊதியமாக வழங்கப்படும். இணைய வழி விண்ணப்பம் ஏப்.7-ம் தேதி தொடங்குகிறது. மே 3 விண்ணப்பிக்க கடைசி நாள். wwww.tnusrb.tn.gov.in என்ற தளத்தில் விண்ணப்பிக்கலாம்
-
Apr 04, 2025 09:08 IST
அரசுப் பேருந்து டிக்கெட்: இ-சேவை மூலம் முன்பதிவு செய்யும் வசதி
கிராமப்புற மக்கள் முன்பதிவு செய்ய வசதியாக தற்போது தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழத்தின் சார்பில் இ-சேவை மையங்களிலும் பேருந்துகளுக்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளும் வசதி விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்பதிவு செய்த டிக்கெட்டுகளை ரத்து செய்ய வேண்டுமானாலும் இ-சேவை மையங்கள் மூலமாக ரத்து செய்து கொள்ளலாம் என்றும் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
Apr 04, 2025 08:18 IST
பழம்பெரும் நடிகர் மனோஜ் குமார் மரணம்
நடிகர், இயக்குனர் , தயாரிப்பாளர் , எழுத்தாளர் உள்ளிட்ட பன்முகங்களை கொண்டவர் மனோஜ் குமார்(87) . இவர் தேசபற்றுமிக்க படங்களில் அதிகமாக நடித்திருப்பதால் 'பாரத் குமார்' என்று ரசிகர்களால் அழைக்கப்படுகிறார். தனது நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்த இவர் கடந்த 1992-ல் பத்மஸ்ரீ விருதையும், 2015-ல் இந்திய சினிமா துறையில் மிக உயர்ந்த விருதான தாதாசாகேப் பால்கே விருதையும் பெற்றார். உடல்நல குறைவு காரணமாக கடந்த பிப்ரவரி 21-ம் தேதி மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மனோஜ் குமார் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் தீவிர சிகிச்சை பெற்றுவந்தநிலையில், இன்று அதிகாலை 4.03 மணியளவில் மனோஜ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
-
Apr 04, 2025 08:16 IST
அரசுப் பள்ளிகளில் சாதி ரீதியான சின்னம் - மீறினால் நடவடிக்கை
அரசுப் பள்ளிகளில் திரைப்பட பாடல்கள், சாதி ரீதியான சின்னங்களை வைத்துக் கொள்வது போன்றவற்றை பயன்படுத்தக் கூடாது என பள்ளிக் கல்வித்துறை விதித்துள்ள தடையை மீறி புகாருக்கு உள்ளாகும் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை எச்சரித்துள்ளது. இதனை அனைத்துப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் சுற்றறிக்கையாக அனுப்பி, ஒப்புதல் பெறுமாறு மாவட்ட முதன்மை அலுவலர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
-
Apr 04, 2025 07:26 IST
பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணிகள் இன்று தொடக்கம்
பிளஸ்-2 பொதுத்தேர்வுகள் கடந்த மாதம் (மார்ச்) 3-ந்தேதி தொடங்கி 25-ந் தேதியுடன் முடிவடைந்தது. அந்த தேர்வை சுமார் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் எழுதி இருந்தனர். இன்று (வெள்ளிக்கிழமை) முதல் பிளஸ்-2 பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடங்க உள்ளன. 17-ந்தேதி (வியாழக்கிழமை) வரை பணிகள் நடைபெற உள்ளன. மே 19-ந் தேதி தேர்வு முடிவை வெளியிடும் வகையில் திட்டமிட்டு பணிகள் நடப்பதாக கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
Apr 04, 2025 07:13 IST
சென்னை: ரயில் நிலையத்தில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை
சென்னை திருவொற்றியூர் ரயில் நிலையத்தில், இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த மர்மநபரை சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் தேடி வருகின்றனர். சத்தம் கேட்டு சக பயணிகள ஓடிவந்ததால் அந்த மர்மநபர் தப்பி ஓடிவிட்டார். ரயில்வே போலீசார் பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
Apr 04, 2025 07:10 IST
ஐ.பி.எல்: மும்பை - லக்னோ அணிகள் இன்று மோதல்
லக்னோவில் இன்று நடைபெறும் 16-வது லீக் ஆட்டத்தில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி, ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. 2 அணிகளும் தலா 3 ஆட்டங்களில் ஆடி 1 வெற்றி, 2 தோல்வி கண்டுள்ளன. புள்ளிப்பட்டியலில் மும்பை 6-வது இடத்திலும், லக்னோ 7-வது இடத்திலும் உள்ளன. 2 அணிகளும் 2-வது வெற்றிக்கு குறிவைக்கும் என்பதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.
-
Apr 04, 2025 07:02 IST
வக்ஃபு சட்டத்திருத்த மசோதா - மாநிலங்களவையிலும் நிறைவேற்றம்
மாநிலங்களவையில் வக்ஃபு சட்டத் திருத்த மசோதா நேற்று (மார்ச் 03) தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ தாக்கல் செய்தார். மக்களவையை போலவே மாநிலங்களவையிலும் இந்த மசோதா மீதான விவாதம் 12 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. விவாதத்தின் மீது கிரண் ரிஜிஜூ பதிலளித்து பேசினார். இதையடுத்து மசோதா மீதான வாக்கெடுப்பு நடைபெற்றது. அதிகாலை 2.30 மணியளவில் இந்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. மசோதாவுக்கு ஆதரவாக 128 எம்.பிக்களும், எதிராக 95 எம்.பி.க்களும் வாக்களித்தனர். நாடாளுமன்ற 2 அவைகளிலும் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், இனி ஜனாதிபதி ஒப்புதலுக்காக மசோதா அனுப்பி வைக்கப்படும். குடியரசுத் தலைவர் கையெழுத்திட்ட பிறகு மசோதா சட்ட வடிவம் பெறும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.