Chennai News Highlights: ரஷ்ய எண்ணெய் வாங்குவதை இந்தியா, சீனா குறைத்து வருகின்றன -ட்ரம்ப்

Tamil Nadu Latest Live News Update in Tamil 25 Oct. 2025: இன்றைய அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

Tamil Nadu Latest Live News Update in Tamil 25 Oct. 2025: இன்றைய அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
trump

Today Latest News Updates: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.80-க்கும், டீசல் 92.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இயற்கை எரிவாயு ஒரு கிலோ ரூ. 91.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment

தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் மத்திய குழு ஆய்வு: விளைநிலங்களில் மழை பாதிப்பு குறித்து செங்கல்பட்டு, தஞ்சை, மயிலாடுதுறை, திருச்சி, புதுக்கோட்டையில் மத்திய குழு இன்று ஆய்வு செய்கிறது. திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவாரூர், நாகை, மதுரை, தேனி மாவட்டங்களில் நாளை மத்திய குழு ஆய்வு செய்கிறது. கடலூர் மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட விளை நிலங்களில் அக். 27ம் தேதி மத்திய குழு ஆய்வு செய்கிறது. நெல்லின் ஈரப்பத அளவை 22%ஆக உயர்த்துவது தொடர்பாக மத்திய குழுவினர் ஆய்வு செய்யவுள்ளனர். மத்திய வேளாண் துறை இணை இயக்குநர் தலைமையில் 2 குழுக்களும், உதவி இயக்குநர் தலைமையில் ஒரு குழுவும் ஆய்வு செய்கிறது.

வங்கக் கடலில் நாளை மறுநாள் உருவாகிறது புயல்: தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் (அக்.24) நேற்று புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியது. இது அதே பகுதிகளில் நிலவுகிறது. அது மேற்கு-வடமேற்கு திசையில் மெதுவாக நகர்ந்து, இன்று (சனிக்கிழமை) தென்கிழக்கு மற்றும் அதனையொட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், நாளை (ஞாயிற்றுக்கிழமை) தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெறக்கூடும் எனவும், அதனையடுத்து அது 27-ந்தேதி (திங்கட்கிழமை) புயலாகவும் வலுவடையும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

  • Oct 26, 2025 07:08 IST

    ரஷ்ய எண்ணெய் வாங்குவதை இந்தியாவும், சீனாவும் குறைத்து வருகின்றன -ட்ரம்ப்

    ரஷ்ய எண்ணெய் வாங்குவதை இந்தியா முற்றிலுமாக நிறுத்த முடிவு செய்துவிட்டது. ரஷ்ய எண்ணெய் நிறுவனங்கள் மீது அமெரிக்கா முழு தடைகளை அறிவித்ததால் சீனாவும் தனது கொள்முதலை குறைத்து வருகிறது என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். 



  • Oct 25, 2025 23:16 IST

    மங்களூருக்கு சுமார் 850 கி.மீ தொலைவில் காற்றழுத்த தாழ்வு நிலை

    அரபிக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை மணிக்கு 22 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. மகாராஷ்டிரா - கோவா - லட்சத்தீவு இடையே நிலை கொண்டுள்ளது. மங்களூருக்கு சுமார் 850 கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



  • Advertisment
    Advertisements
  • Oct 25, 2025 23:13 IST

    கரூர் துயர சம்பவம் - சிபிஐ தாக்கல் செய்த எஃப்.ஐ.ஆரில் உள்ள தகவல்கள் என்ன?

    கரூர் விஜய் பிரசாரத்தில் 41 பேர் பலியான விவகாரம் தொடர்பாக, கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த சிபிஐ எஃப்.ஐ.ஆர் வெளியானது. சிபிஐ தரப்பில் தாக்கல் செய்த எஃப்.ஐ.ஆர்-ஐ வழங்க கோரி த.வெ.க சார்பில் மனு அளிக்கப்பட்ட நிலையில, த.வெ.க வழக்கறிஞருக்கு எஃப்.ஐ.ஆர்-யின் நகல் வழங்கப்பட்டுள்ள நிலையில், இதில் கரூர் காவல் நிலையத்தில் குறிப்பிட்டது போலவே, சிபிஐ எஃப்.ஐ.ஆரில் - ஏ1 கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் ஏ2 புஸ்ஸி ஆனந்த், ஏ3 நிர்மல் குமார் என குறிப்பிடப்பட்டுள்ளது.



  • Oct 25, 2025 21:28 IST

    தனியார் பல்கலை கல்வி கட்டணம் தமிழக அரசே முடிவு செய்யும்- அமைச்சர் கோவி.செழியன்

    தனியார் பல்கலை. சட்டத்திருத்த மசோதா மறுஆய்வு செய்யப்படும். மாணவர் சேர்க்கை மற்றும் கல்வி கட்டணம் தமிழ்நாடு அரசே முடிவு செய்யும். இது   கல்வியாளர்கள் உள்ளிட்டோரின் கருத்துக்கள் அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவு என்று, உயர்கல்வி துறை அமைச்சர் கோவி.செழியன் அறிவித்துள்ளார்.



  • Oct 25, 2025 20:18 IST

    இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியை நடத்துவேன்- தேஜ் பிரதாப் யாதவ் வாக்குறுதி

    பீகாரின் ஆர்.ஜே.டி கட்சியில் இருந்து நீக்கப்பட்ட தேஜஸ்வி யாதவின் சகோதரர் தேஜ் பிரதாப் யாதவ் பீகார் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ள நிலையில், இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியை நடத்துவேன் என வாக்குறுதி கொடுத்துள்ளார்.



  • Oct 25, 2025 20:16 IST

    சென்னை ஓபன் மகளிர் டென்னிஸ் தொடர் நாளை மறுநாள் தொடக்கம்

    நாளை மறுநாள் தொடங்க உள்ள சென்னை ஓபன் மகளிர் டென்னிஸ் தொடர் குறித்து போட்டி ஏற்பாட்டாளரும், தமிழ்நாடு டென்னிஸ் சங்க தலைவருமான விஜய் அமிர்தராஜ் 3 வருஷம் ரொம்ப கஷ்டப்பட்டு இந்த தொடரை சென்னைக்கு கொண்டு வந்து இருக்கோம் என்று கூறியுள்ளா. 



  • Oct 25, 2025 20:13 IST

    பிரபல நடிகர் சதீஷ் ஷா மரணம் - பிரதமர் மோடி இரங்கல்

    பிரபல நடிகர் சதீஷ் ஷா ஜி அவர்களின் மறைவுச் செய்தி கேட்டு ஆழ்ந்த துயரம் அடைந்தோம். இந்திய திரையுலகின் உண்மையான ஜாம்பவான் என அவர் என்றென்றும் நினைவுகூரப்படுவார். அவரது இயல்பான நகைச்சுவை உணர்வும், காலத்தால் அழியாத சிரிக்க வைக்கும் நடிப்புகளும்  எண்ணற்ற மக்களின் வாழ்வில் மகிழ்ச்சியைக் கொண்டு வந்து சேர்த்தன. அவரது குடும்பத்தாருக்கும், அவரைப் போற்றிய ரசிகர்களுக்கும் எங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். ஓம் சாந்தி என பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.



  • Oct 25, 2025 19:42 IST

    தஞ்சையில் நாளையும் நெல் கொள்முதல் நடைபெறும் என அறிவிப்பு

    தஞ்சாவூரில் ஞாயிற்றுக் கிழமையான நாளையும் நெல் கொள்முதல் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் அறிவித்துள்ளார். மாவட்டம் முழுவதிலும் உள்ள 299 நெல் கொள்முதல் நிலையங்களும் நாளை இயங்கும். 3 சரக்கு ரயில்களில் நெல் மூட்டைகள் வெளி மாவட்டங்களுக்கு அனுப்பும் பணி நடைபெறும் என தெரிவித்துள்ளார்.



  • Oct 25, 2025 19:38 IST

    சபரி மலை தங்கம் கொள்ளை விவகாரம் - கேரள போலீசார் விசாரணை

    சபரிமலை துவார பாலகர் சிலை தங்க கவசம் எடை குறைந்த விவகாரம் தொடர்பாக, உன்னிகிருஷ்ணன் என்பவரிடம் அம்பத்தூரில் உள்ள தனியார் தங்க நிறுவனத்தில் வைத்து விசாரணை நடைபெற்றது. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக உன்னிகிருஷ்ணனிடம் போலீசார் விசாரணை நடத்திய நிலையில்,  கவசத்திற்கு தங்க முலாம் பூசுவதற்காக எடுத்து வரப்பட்ட போது மோசடி  நடந்தாகவும், சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் வைத்து கேரள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



  • Oct 25, 2025 18:58 IST

    27 முதல் 30ம் தேதி வரை டாஸ்மாக் மூடல் 

    மருதுபாண்டியர், தேவர் குருபூஜையை ஒட்டி  வரும் 27 டூ 30ம் தேதி வரை சிவகங்கையில் டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதாகவும், சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் வகையில் போக்குவரத்தும் மாற்றம் செய்யப்படுவதாகவும்,  சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.



  • Oct 25, 2025 18:56 IST

    கீழடி அருங்காட்சியகத்திற்கு விடுமுறை

    மருது பாண்டியர்களின் நினைவேந்தல், குருபூஜை விழாவை ஒட்டி அக்.27, 30 தேதிகளில் கீழடி அருங்காட்சியகத்திற்கு விடுமுறை அளிக்கப்படுவதாக, சட்டம் ஒழுங்கு நடவடிக்கையாக சிவகங்கை ஆட்சியர் அறிவித்துள்ளார்.



  • Oct 25, 2025 18:55 IST

    இளைஞர் மீது தாக்குதல் - 3 பேர் கைது

    சேலம், ஈரடுக்கு மேம்பாலத்தில் 3 இளைஞர்கள் சேர்ந்து ஒருவரை தாக்கிய விவகாரத்தில் திடீர் திருப்பமாக தனது காதலியிடம் ஆபாசமாக பேசிய பிரம்மநாயகம் என்பவர் மீது, பெண்ணின் காதலன் ராமகிருஷ்ணன் நண்பருடன் சேர்ந்து திட்டமிட்டு தாக்கியது தெரியவந்துள்ளது. தற்போது ராமகிருஷ்ணன் உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.



  • Oct 25, 2025 17:43 IST

    சென்னை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

    சென்னை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. செங்கல்பட்டு, கடலூர், தருமபுரி, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், மயிலாடுதுறை, ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • Oct 25, 2025 17:34 IST

    தமிழ்நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை – நாளையும் தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

    சென்னை மற்றும் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இன்று காலை முதல் திடீர் உயர் தீவிர மழை பெய்து வருகிறது. இந்த நிலை நாளையும் தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வானிலை நிபுணர்கள் கூறியதாவது, சுழற்காற்று உருவானதும் மேகக் கூட்டங்கள் மையமாகச் சேரும், இதனால் கடலோர மாவட்டங்களில் மிதமான முதல் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. பொதுமக்கள் மற்றும் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.



  • Oct 25, 2025 17:12 IST

    சென்னைக்கு 950 கி.மீ தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் - வானிலை மையம்

    "தென்கிழக்கு வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள தாழ்வு மண்டலம் மணிக்கு 7 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. சென்னைக்கு 950 கி.மீ தொலைவில் உள்ள தாழ்வு மண்டலம் வடமேற்கு நோக்கி நகர்ந்து நாளை மறுநாள் புயலாக வலுப்பெறும். வரும் 28-ல் மச்சிலிப்பட்டினம்-கலிங்கப்பட்டினம் இடையே கடக்கும் அதிகபட்சமாக மணிக்கு 90-100 கி.மீ வேகத்தில் காற்று வீசும்" என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. 



  • Oct 25, 2025 17:11 IST

    சூரசம்ஹார விழாவை ஒட்டி திருச்செந்தூருக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கம்

    சூரசம்ஹார விழாவை ஒட்டி திருச்செந்தூருக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது. திருச்செந்தூரில் இரவு 9 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் இரவு 10.30மணிக்கு நெல்லை சென்றடையும். மறுமார்க்கத்தில் நெல்லையில் இரவு 11 மணிக்கு புறப்படும் ரயில், இரவு 12.30 மணிக்கு திருச்செந்தூர் சென்றடையும். ஆறுமுகநேரி, நாசரேத், ஸ்ரீவைகுண்டம், செய்துங்கநல்லூர், பாளையங்கோட்டையில் ரயில் நின்று செல்லும்.



  • Oct 25, 2025 17:10 IST

    பெண்களுக்கான வேலைவாய்ப்பில் தமிழ்நாடுதான் முதலிடம்: அமைச்சர் தங்கம் தென்னரசு

    பெண்களுக்கான வேலைவாய்ப்பில் நாட்டிலேயே தமிழ்நாடுதான் முதலிடத்தில் உள்ளது என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். பெண்கள் தொழில்முனைவோராக மாற வேண்டும், அதற்கு திராவிட மாடல் ஆட்சி என்றும் துணை நிற்கும் என அவர் தெரிவித்தார்.



  • Oct 25, 2025 17:10 IST

    சென்னைக்கு 950 கி.மீ. கிழக்கு தென்கிழக்கில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம்

    சென்னைக்கு 950 கி.மீ. கிழக்கு தென்கிழக்கில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது. கடந்த 6 மணிநேரத்தில் மணிக்கு 7 கி.மீ. வேகத்தில் மேற்கு திசையில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகர்கிறது.



  • Oct 25, 2025 15:34 IST

    பாமகவின் உட்கட்சி விவகாரம் குறித்து இப்போது எதுவும் பேச முடியாது: அன்புமணி பேட்டி

    பாமகவின் உட்கட்சி விவகாரம் குறித்து இப்போது எதுவும் பேச முடியாது என அன்புமணி தெரிவித்துள்ளார். பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்தி நியமிக்கப்பட்டது குறித்த கேள்விக்கு அன்புமணி திருப்பூரில் பதில் அளித்தார்.



  • Oct 25, 2025 15:26 IST

    வங்கக்கடலில் புயல்  - சுகாதாரத்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம் 

    வங்கக்கடலில் புயல் சின்னம் உருவாக உள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் காய்ச்சல் அதிகமாக உள்ள பகுதியில் மருத்துவ முகாம்கள் நடத்த சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது, மேலும், பிரசவ தேதி உள்ள கர்ப்பிணிகள் முன்கூட்டியே மருத்துவமனையில் சேர அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். மருத்துவமனையில் உள்ள ஜெனரேட்டர்கள் மழைநீரில் மூழ்காத வகையில் பாதுகாப்பாக வைக்கவும், மருத்துவமனைகளில் மருந்து பொருட்கள், மாத்திரைகள் தட்டுபாடு இல்லாமல் இருப்பு வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.



  • Oct 25, 2025 15:24 IST

    6 சிறப்பு ரயில்கள் ரத்து - தெற்கு ரயில்வே அறிவிப்பு 

    போதிய பயணிகள் முன்பதிவு செய்யாததால் 6 சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. பயணிகள் கூட்டம் இல்லாத காரணத்தினால் 6 சிறப்பு ரயில்களின் 30 சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மைசூரு - நெல்லை, மைசூரு - காரைக்குடி, மைசூரு - ராமநாதபுரம் என இருமார்க்கங்களில் 6 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

     



  • Oct 25, 2025 14:50 IST

    காக்கி நாடா அருகே கரையை கடக்கும் மோன்தா புயல் - இந்திய வானிலை ஆய்வு மையம் 

    ஆந்திராவின் காக்கி நாடா அருகே மோன்தா புயல் தீவிர புயலாக கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. ஆந்திராவின் மசூலிப்பட்டினம் -கலிங்கபட்டினம் இடையே அக். 28 ஆம் தேதி மோன்தா புயல் கரையை கடக்கும். கடந்த 3 மணிநேரத்தில் மணிக்கு 7 கி.மீ. வேகத்தில் மேற்கு திசையில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகர்கிறது. சென்னைக்கு 970 கி.மீ. கிழக்கு தென்கிழக்கில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது. புயல் கரையை கடக்கும் சமயத்தில் 90 - 100 கி.மீ. வேகத்தில் இடையிடையே 110 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும்.

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் உள்ள ஏரி, குளங்கள், அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. வடகிழக்கு பருவமழையின் முதல் நிகழ்வு வங்கக்கடலில் உருவாகி, வடமாவட்டங்களில் சில இடங்கள், டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட சில பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது.

    தென்கிழக்கு வங்கக்கடலில் நேற்று (அக்டோபர் 24) உருவான புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, விரைவாக வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) வெளியிட்ட அறிக்கையின்படி, தென்கிழக்கு வங்கக்கடலில் உள்ள மேல் காற்று சுழற்சி காரணமாக இந்தத் தாழ்வு உருவானது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, 24 மணி நேரத்தில் மேலும் தீவிரமடையும்.

    அது மேற்கு- வடமேற்கு திசையில் மெதுவாக நகர்ந்து, இன்று (சனிக்கிழமை) தென்கிழக்கு மற்றும் அதனையொட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், நாளை (ஞாயிற்றுக்கிழமை) தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெறக்கூடும் எனவும், அதனையடுத்து அது 27 ஆம் தேதி (திங்கட்கிழமை) புயலாகவும் வலுவடையும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    இதன் காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வரும் 28ம் தேதி வரை, இடி, மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. மேலும், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் நாளை கனமழை பெய்யக்கூடும்.

    வரும் 27 ஆம் தேதி, திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. இந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வரும் 28 ஆம் தேதி, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

    வங்கக்கடலில் உருவாகும் மோன்தா புயல் ஆந்திராவை நோக்கி நகரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆந்திராவின் மச்சிலிப்பட்டணம் - விசாகப்பட்டினம் இடையே நாளை மறுநாள் மோன்தா புயல் கரையை கடக்க வாய்ப்புள்ளது. புயல் ஆந்திராவை நோக்கி நகர்ந்தாலும் நாளை மறுநாள் மற்றும் 28-ந்தேதி சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • Oct 25, 2025 13:26 IST

    3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் - வானிலை மையம் அறிவிப்பு 

    சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் அக்.27ம் தேதி மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் இன்று 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. குமரி, நெல்லை, தென்காசி, தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரி, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • Oct 25, 2025 13:23 IST

    ஆந்திர ஆம்னி பேருந்து தீ விபத்து - திருப்பூர் இளைஞர் பலி 

    ஆந்திராவில் நடந்த ஆம்னி பேருந்து தீ விபத்தில் திருப்பூரைச் சேர்ந்த யுவன் சங்கர் ராஜ் (22) உயிரிழந்தார். ஹைதராபாத்தில் பணிபுரிந்த யுவன் தீபாவளி பண்டிகைக்குப் பிறகு சொந்த ஊர் திரும்பியபோது நடந்த சோகம். ஆம்னி பேருந்து தீபிடித்ததில் 19 பயணிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.



  • Oct 25, 2025 13:02 IST

    பூண்டி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

    பூண்டி அணைக்கு நீர்வரத்து 13,500 கன அடியாக உயர்ந்துள்ள நிலையில், அணையில் இருந்து 10,500 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.



  • Oct 25, 2025 13:00 IST

    மோன்தா புயல்: ரெட் அலெர்ட்

    வங்கக் கடலில் உருவாக உள்ள மோன்தா புயல், ஆந்திராவை நோக்கி நகரும் நிலையில் வரும் 26, 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் அம்மாநிலத்திற்கு அதிகனமழைக்கான ரெட் அலெர்ட் எச்சரிக்கையை இந்திய வானிலை மையம் கொடுத்துள்ளது



  • Oct 25, 2025 12:40 IST

    முக்கொம்புக்கு வரும் நீரின் அளவு அதிகரிப்பு

    திருச்சி முக்கொம்புக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து, கொள்ளிடத்தில் 43,000 கனஅடியும், காவிரியில் 9,800 கனஅடியும் நீர் வெளியேற்றப்படுகின்றன.

    வீடியோ: சன் நியூஸ்



  • Oct 25, 2025 12:11 IST

    கோவையில் அன்புமணி பேட்டி

    டெல்டாவில் அறுவடை செய்யப்பட்ட நெல்மணிகள் முளைத்து வருகின்றன; இதற்குக் காரணம், கால்வாய்களை அரசு முறையாக தூர்வாரவில்லை. 

    மேலும், குறுவைச் சாகுபடியில் 40% மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. 



  • Oct 25, 2025 12:10 IST

    தீவிர புயலாக வலுப்பெறும் மோன்தா

    வங்கக் கடலில் நாளை மறுநாள் (அக்டோபர் 27) உருவாகும் என எதிர்பார்க்கப்பட்ட மோன்தா புயல், அதைத் தொடர்ந்து தீவிர புயலாக வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    முன்னதாக, அக். 27-ஆம் தேதி புயலாக மாறும் என கணிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அக். 28-ஆம் தேதி அது தீவிர புயலாக மாறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.



  • Oct 25, 2025 12:08 IST

    ’மோன்தா புயல்’ உருவாக வாய்ப்பு: முன்னெச்சரிக்கை நடவடிக்கை

    ஆந்திராவை நோக்கி நகரும் 'மோன்தா' புயலின் தாக்கத்தால் சென்னை மற்றும் வடக்கு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    அமைச்சர் இராமச்சந்திரன் சென்னையில் பேட்டி 



  • Oct 25, 2025 12:05 IST

    பொதுத்தேர்வு அட்டவணை: அன்பில் மகேஷ் முக்கிய தகவல்

    10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அட்டவணை நவம்பர் 4-ஆம் தேதி வெளியிடப்படும் என அன்பில் மகேஸ் தகவல் தெரிவித்துள்ளார்.

    நவம்பர் 4-ஆம் தேதி அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தப்படும் என்றும், இந்த ஆலோசனைக்குப் பிறகே தேர்வு அட்டவணை வெளியிடப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



  • Oct 25, 2025 11:31 IST

    தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்

    சென்னை எழும்பூர் இராஜாஜி திடல் மைதானம் அருகே ஆயிரத்திற்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    அரசு சார்பில் நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து, தங்களுக்கு நிரந்தரப் பணி வழங்கப்பட வேண்டும் என்றும், மூன்று மாதங்களுக்கும் மேலாக நிலுவையில் உள்ள ஊதியத்தை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி இந்தப் போராட்டத்தை அவர்கள் மேற்கொண்டுள்ளனர்.



  • Oct 25, 2025 11:28 IST

    கட்சி நிர்வாகிகளுடன் முதல்வர் ஆலோசனை

    சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

    'உடன்பிறப்பே வா' என்ற தலைப்பில் தி.மு.க. நிர்வாகிகளை முதலமைச்சர் ஸ்டாலின் தனித்தனியாகச் சந்திக்கிறார். அதன் ஒரு பகுதியாக, இன்று (25.10.2025) உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம் ஆகிய பகுதிகளின் கட்சி நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.



  • Oct 25, 2025 11:26 IST

    தமிழ்நாடு, ஆந்திரா, ஒடிசாவில் உள்ள துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்

    தென் கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலைகொண்டுள்ள நிலையில், புயல் உருவாக வாய்ப்பு இருப்பதைக் குறிக்கும் 'ஒன்றாம் எண்' புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்.

    தமிழ்நாட்டின் சென்னை, கடலூர், எண்ணூர், காட்டுப்பள்ளி, நாகை (நாகப்பட்டினம்), புதுச்சேரி, காரைக்கால், தூத்துக்குடி, பாம்பன் ஆகிய 9 துறைமுகங்களில் இந்த எச்சரிக்கை கூண்டு (எண் 1) ஏற்றப்பட்டுள்ளது.



  • Oct 25, 2025 11:24 IST

    சென்னை ஓபன் மகளிர் சர்வதேச டென்னிஸ் போட்டி இன்று தொடக்கம்

    சென்னை ஓபன் மகளிர் சர்வதேச டென்னிஸ் போட்டி, வரும் அக்டோபர் 27-ஆம் தேதி முதல் நவம்பர் 2-ஆம் தேதி வரை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள SDAT மைதானத்தில் நடைபெறுகிறது.

    இத்தொடருக்கான தகுதிச் சுற்று ஆட்டங்கள் இன்று (25.10.2025) தொடங்குகின்றன.

    தகுதிச் சுற்றில் இந்தியா சார்பில் அங்கிதா ரெய்னா, ரியா பாடியா, வைஷ்ணவி அட்கர், தியா ரமேஷ் ஆகியோர் பங்கேற்கின்றனர்.



  • Oct 25, 2025 11:22 IST

    22% ஈரப்பதம் கொண்ட நெல்மணிகளைக் கொள்முதல் செய்யும் விவகாரம் - மத்திய குழு ஆய்வில் மாற்றம்

    தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று, 3 பேர் கொண்ட 3 குழுக்களை மத்திய அரசு அமைத்தது. இந்தக் குழுக்கள் இன்று (25-10-2025) கோவை, நாமக்கல் மாவட்டங்களில் உள்ள அரிசி செறிவூட்டும் ஆலைகளில் ஆய்வுசெய்யத் திட்டமிட்டுள்ளன. 



  • Oct 25, 2025 11:08 IST

    சென்னையில் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து மேயர் பிரியா பேட்டி

    சென்னையில் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சேதமடையும் சாலைகள் உடனடியாகச் சரிசெய்யப்படும். ஓட்டேரி பகுதிகளில் தூர்வாரும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. வார்டு வாரியாகச் சாலையில் ஏற்பட்ட பள்ளங்களைச் சீரமைக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், சென்னையில் உள்ள 206 தாழ்வான இடங்களில் மோட்டார்கள் தயார்நிலையில் வைக்கப்பட்டு, மழைநீர் தேங்காமல் வெளியேற்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 

    மேயர் பிரியா



  • Oct 25, 2025 11:07 IST

    நீரில் மூழ்கிய பயிர்கள்

    திருத்துறைப்பூண்டி மற்றும் முத்துப்பேட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த கனமழையால் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.



  • Oct 25, 2025 11:06 IST

    1 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்

    சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தென்காசி, தூத்துக்குடி, நெல்லை (திருநெல்வேலி), மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பிற்பகல் 1 மணி வரை இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. 

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.



  • Oct 25, 2025 10:55 IST

    ஆந்திராவை நோக்கி நகரும் மோன்தா புயல்

    புயல் காக்கிநாடாவை நோக்கிச் சென்றாலும், சாதகமான மேகக் குவியல்கள் காரணமாக அக்டோபர் 27, 28 ஆகிய தேதிகளில் வடகோடி மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் பரவலாக மழைப்பொழிவு உறுதி செய்யப்பட்டுள்ளது. புயல் நெருங்கும்போது மழையின் தீவிரம் குறித்து மேலும் உறுதிப்படுத்தப்படும்

    சுயாதீன வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன்



  • Oct 25, 2025 10:23 IST

    நெல்லை: ஊத்து பகுதியில் 14 செ.மீ., மழை பதிவு

    நெல்லை: கடந்த 24 மணிநேரத்தில் நெல்லை மாவட்டம் ஊத்து பகுதியில் 14 செ.மீ., நாலுமுக்கு பகுதியில் 13 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. நெல்லை மாவட்டம் காக்காச்சி 11 செ.மீ., மாஞ்சோலை, பாலமோர் (குமரி) தலா 9 செ.மீ. மழை பதிவானது.

     



  • Oct 25, 2025 10:15 IST

    மேட்டூர் அணை நீர்வரத்து 65,500 கனஅடியாக நீடிப்பு

    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 65,500 கனஅடியாக நீடிப்பு; நீர் வெளியேற்றமும் 65,500 கனஅடியாக நீடிக்கிறது. டெல்டா பாசனத்துக்காக 22,300 கனஅடி நீரும், 16 கண் மதகு வழியாக 42,700 கனஅடி நீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியாகவும் நீர் இருப்பு 93.47 டி.எம்.சி.யாகவும் உள்ளது. மேட்டூர் அணையில் இருந்து கிழக்கு, மேற்கு கால்வாய் வழியாக 500 கனஅடி நீரும் வெளியேற்றப்படுகிறது.



  • Oct 25, 2025 10:14 IST

    ஆந்திராவை நோக்கி நகருகிறதா 'மோன்தா' புயல்?

    வங்கக்கடலில் உருவாகும் மோன்தா புயல் ஆந்திராவை நோக்கி நகரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆந்திராவின் மச்சிலிப்பட்டணம் - விசாகப்பட்டினம் இடையே நாளை மறுநாள் மோன்தா புயல் கரையை கடக்க வாய்ப்புள்ளது. புயல் ஆந்திராவை நோக்கி நகர்ந்தாலும் நாளை மறுநாள் மற்றும் 28-ந்தேதி சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

     



  • Oct 25, 2025 10:08 IST

    காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது

    தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. தொடர்ந்து மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக வலுவடையும். அக்.27ம் தேதி தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடலில் புயலாக வலுப்பெறும். சென்னைக்கு 990 கி.மீ. கிழக்கு தென்கிழக்கில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது. வங்கக்கடல், அரபிக்கடல் இரண்டிலும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது.



  • Oct 25, 2025 09:45 IST

    கரூர் சம்பவம் - பாதிக்கப்பட்டவர்களை சந்திக்கும் விஜய்

    கரூர் கூட்டநெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினரை நாளை மறுநாள் மாமல்லபுரத்தில் வைத்து த.வெ.க. தலைவர் விஜய் சந்திக்க திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினரை கரூரில் இருந்து அழைத்து வர த.வெ.க. சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குடும்பத்தினர் தங்குவதற்காக மாமல்லபுரத்தில் 50 அறைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.



  • Oct 25, 2025 09:42 IST

    ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 உயர்வு

    சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ரூ.92,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத் தங்கம் கிராம் ரூ.11,500க்கும், ஒரு சவரன் ரூ.92,000க்கும் விற்பனையாகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.170க்கு விற்பனை ஆகிறது.



  • Oct 25, 2025 09:41 IST

    கனமழையால் நிரம்பி வரும் நெல்லை அணைகள்

    திருநெல்வேலி: மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் கனமழையால் பிரதான அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. பாபநாசம் அணை (143 அடி) நீர்மட்டம் 3 அடி உயர்ந்து 101.80 அடியை எட்டியுள்ளது. சேர்வலாறு (156 அடி) 115.40 அடியாகவும், மணிமுத்தாறு (118 அடி) 98.76 அடியாகவும் உயர்ந்துள்ளது.



  • Oct 25, 2025 09:13 IST

    மேட்டூர் நீர்மட்டம் 6-வது நாளாக 120 அடியாக நீடிப்பு

    மேட்டூர் அணை நீர்மட்டம் தொடர்ந்து ஆறாவது நாளாக வியாழக்கிழமை(அக்.25) 120 அடியாக நீடிக்கிறது. காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு சனிக்கிழமை வினாடிக்கு 65,000 கனஅடியாக நீடிக்கிறது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு நீர்மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 22,300 கனஅடி வீதமும், உபரி நீர் போக்கியான 16 கண் மதகுகள் வழியாக வினாடிக்கு 42,700 கனஅடி வீதமும் தண்ணீர் திறக்கப்படுகிறது. கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு மேல்மட்ட மதகுகள் வழியாக வினாடிக்கு 500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 93.47 டிஎம்சியாக உள்ளது.



  • Oct 25, 2025 09:08 IST

    சென்னையில் இன்று பள்ளிகள் செயல்படும்-அறிவிப்பு

    தீபாவளி விடுமுறையில் சொந்த ஊா்களுக்கு சென்று திரும்பும் ஆசிரியா்கள், மாணவா்களுக்கு வசதியாக, கடந்த செவ்வாய்க்கிழமை (அக்.21) பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. அந்த விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக சென்னையில் சனிக்கிழமை (அக்.25) பணி நாளாக அனுசரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, சென்னையில் அனைத்து வகை பள்ளிகளும் சனிக்கிழமை செயல்படும். பள்ளிகளை செவ்வாய்க்கிழமை பாடவேளை அடிப்படையில் நடத்த வேண்டுமென சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் அறிவித்துள்ளது.

     



  • Oct 25, 2025 08:52 IST

    பறவை மோதியதில் என்ஜின் சேதம்- அவசர லேண்டிங்

    சென்னையில் இருந்து 190 பேருடன் கோலாலம்பூர் புறப்பட்டு சென்ற விமானம் பறக்க தொடங்கியபோது பறவை மோதியதில் எஞ்சின் பகுதி சேதம் அடைந்துள்ளது. எஞ்சின் பகுதி சேதம் அடைந்ததால் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. கோலாலம்பூர் செல்லவிருந்த பயணிகள் அனைவரும் சென்னையில் உள்ள ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.



Chennai

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: