/indian-express-tamil/media/media_files/2025/05/26/eW2RjfG0cnZwonDiCiHI.jpg)
Today Latest News Updates: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.80-க்கும், டீசல் 92.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு ஒரு கிலோ ரூ. 91.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.
- Sep 08, 2025 22:18 IST
சி.பி.ராதாகிருஷ்ணன் - இளையராஜா சந்திப்பு
என்.டி.ஏ. கூட்டணியில் குடியரசுத் துணைத்தலைவர் வேட்பாளரான சி.பி.ராதாகிருஷ்ணன், இசையமைப்பாளர் இளையராஜா சந்திப்பு டெல்லியில் நடைபெற்றது.
- Sep 08, 2025 22:15 IST
ஜெருசலேம் பயங்கரவாத தாக்குதல் - பிரதமர் மோடி கண்டனம்
இஸ்ரேல், ஜெருசலேமில் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறோம். தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து கொள்கிறேன். பயங்கரவாதத்தை அனைத்து வடிவங்களிலும், வெளிப்பாடுகளிலும் இந்தியா கண்டிக்கிறது. பயங்கரவாதத்திற்கு பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொண்ட கொள்கையில் இந்தியா உறுதியாக நிற்கிறது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
- Sep 08, 2025 22:14 IST
பொய்யான செய்திகளை நம்பவோ பரப்பவோ செய்ய வேண்டாம்: நடிகை காஜல் அகர்வால்
பிரபல நடிகையான காஜல் அகர்வால் வாகன விபத்தில் இறந்துவிட்டதாக சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியான நிலையில், "இறைவனின் அருளால் நான் நல்ல ஆரோக்கியத்துடனும் பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளேன். தயவுசெய்து இத்தகைய பொய்யான செய்திகளை நம்பவோ பரப்பவோ செய்ய வேண்டாம்" என நடிகை காஜல் அகர்வால் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிட்டுள்ளார்.
- Sep 08, 2025 21:45 IST
த.வெ.க பொதுச்செயலாளர் மீது வழக்கு
தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் மீது போடப்பட்ட வழக்கை சட்டப்பூர்வமாக எதிர்க்கொள்வோம் என தமிழக வெற்றிக் கழகத்தின் துணை பொதுச்செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.
- Sep 08, 2025 21:44 IST
அதிமுக வலிமையாக உள்ளது: உதயநிதிக்கு ஈ.பி.எ.ஸ் பதிலடி
அ.தி.மு.க ஆம்புலன்ஸில் செல்லும் கட்சியல்ல, யார் என்ன செய்தாலும் கட்சியை அசைக்க முடியாது என உதயநிதிக்கு ஈபிஎஸ் பதிலடி கொடுத்துள்ளார்.
- Sep 08, 2025 20:10 IST
டிக் டாக் தடை நீக்கம் இல்லை: மத்திய அமைச்சர் திட்டவட்டம்
டிக் டாக் செயலி மீதான தடையை நீக்கும் எந்த திட்டமும் அரசிடம் இல்லை. இதன் மீதான தடையை நீக்க இதுவரை எந்த பரிந்துரையும் வரவில்லை என்று,மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
- Sep 08, 2025 20:09 IST
நேபாளம் வன்முறை - 18 பேர் பலி, 250 பேர் காயம்
நேபாளத்தில் சமூகவலைதளங்களுக்கு தடைவிதித்ததை கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் வெடித்த வன்முறையில் 18 பேர் மரணமடைந்தனர். 250-க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாக நேபாள சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ள நிலையில், கார்களை எரித்தும், பதாகைகளை ஏந்தியும் அரசுக்கு எதிராக மக்கள் கண்டன முழக்கம் எழுப்பப்பட்டு வருகிறது.
- Sep 08, 2025 18:45 IST
“கட்சியில் பிளவு ஏற்படுத்துவதே பாஜக வேலை” : செல்வப்பெருந்தகை
பாஜக எங்கெல்லாம் செல்கிறதோ அங்கெல்லாம் கட்சிகளை பிளவுப்படுத்துகிறது. இ.பி.எஸ் அதிமுக, ஓபிஎஸ் அதிமுக, டிடிவி அதிமுக, சசிகலா அதிமுக எனப் பிரித்து வைத்துள்ளனர். செங்கோட்டையன் தலைமையில் 5 ஆவது பிரிவு விரைவில் உருவாகலாம் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
- Sep 08, 2025 18:00 IST
டி.ஜி.பி அலுவலகம் முன் தாக்குதல் - ஏர்போர்ட் மூர்த்திக்கு நீதிமன்ற காவல்
சென்னை டிஜிபி அலுவலகம் முன்பு தாக்குதலில் ஈடுபட்டு கைதான ஏர்போர்ட் மூர்த்திக்கு வரும் 22-ம் தேதி வரை நீதிமன்றக் காவல் அளிக்கப்பட்டுள்ளது. தாக்க முயன்ற விசிகவினரை, ஏர்போர்ட் மூர்த்தி கத்தியால் தாக்கிய நிலையில் இருதரப்பு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. வரும் 22 ஆம் தேதி வரை ஏர்போர்ட் மூர்த்தியை சிறையில் அடைக்க எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.
- Sep 08, 2025 17:26 IST
திமுக எம்.பி.கனிமொழி செய்தியாளர் சந்திப்பு
துணைக் குடியரசுத் தலைவர் தன்கர் எதற்காக ராஜினாமா செய்தார் என்ற கேள்விக்கு இதுவரை பதில் இல்லை. இப்படிப்பட்ட சூழலில் மறுபடியும் துணைக் குடியரசுத் தலைவருக்கான தேர்தல் நடைபெறுகிறது. அனைத்து எதிர்க்கட்சிகளும் இணைந்து எங்கள் வேட்பாளர் வெற்றி பெறுவதற்காக உழைக்கிறோம் என திமுக எம்.பி.கனிமொழி செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார்.
- Sep 08, 2025 17:05 IST
டெட் தேர்வு- விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு
ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் செப்டம்பர் 10 மாலை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் இணையதளத்தின் சர்வர் கடைசி நாளில் முடங்கியதால் பலரும் கடும் அவதிக்குள்ளாகினர்.
- Sep 08, 2025 16:48 IST
அடுத்த 2 ஆண்டுகளில் 6 ஆசிரியர் தகுதி தேர்வுகள் (டெட்) நடத்தப்படும் - தமிழ்நாடு அரசு
அடுத்த 2 ஆண்டுகளில் 6 ஆசிரியர் தகுதி தேர்வுகள் (டெட்) நடத்தப்படும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. ஆண்டுக்கு 3 என 2 ஆண்டுகளில் 6 ஆசிரியர் தகுதி தேர்வுகள் நடத்தப்படும் என்றும் ஏற்கெனவே பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு சிறப்பு டெட் தேர்வு நடத்தவும் தமிழ்நாடு அரசு திட்டம் வகுத்துள்ளது.
- Sep 08, 2025 16:45 IST
தவெக பொதுச்செயலர் என்.ஆனந்த் மீது வழக்குப் பதிவு
தவெக பொதுச்செயலர் என்.ஆனந்த் மீது திருச்சி ஏர்போர்ட் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு திருச்சி விமான நிலையம் எதிரே உள்ள பிள்ளையார் கோயிலில் சாமி தரிசனம் செய்தபோது, போக்குவரத்துக்கு இடையூறாக வாகனம் நிறுத்தி, போலீஸாரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக என்.ஆனந்த் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்கு பதிவாகியுள்ளது.
- Sep 08, 2025 16:19 IST
விஜயின் நினைப்பு, நகைப்பாக இருக்கிறது - நடிகர் கருணாஸ்
சினிமா புகழை மட்டுமே வைத்துக்கொண்டு விஜய், ஆட்சியை பிடித்துவிடலாம் என நினைப்பது எனக்கு நகைப்பாகத்தான் இருக்கிறது. ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் மக்களின் பிரச்னைகளுக்கு நீங்கள் உயிரைக் கொடுத்து வேலை செய்யணும் என்று நடிகர் கருணாஸ் கூறியுள்ளார்.
- Sep 08, 2025 16:14 IST
இனிமேல் சுதந்திர மனிதன் - மல்லை சத்யா
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்.. அல்ல அல்ல.. ‘மகன் திமுக’வில் இருந்து நாங்கள் விடுதலை பெற்றிருக்கிறோம் என்றுதான் பார்க்கிறேன். இனிமேல் நாங்கள் சுதந்திர மனிதனாக செயல்பட முடியும் என்று மதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மல்லை சத்யா கூறியுள்ளார்.
- Sep 08, 2025 15:38 IST
நெல்லை - சென்னை வந்தே பாரத் ரயில்: 20 பெட்டிகளுடன் இயக்கம்
பயணிகளின் வசதிக்காக நெல்லை - எழும்பூர் வந்தே பாரத் ரயில் 20 பெட்டிகளுடன் இயக்கப்படுகிறது. ஆரம்பத்தில் 8 பெட்டி, 16 பெட்டிகளுடன் இயக்கப்பட்ட வந்தே பாரத் தற்போது 20 பெட்டிகளுடன் இயக்கப்படுகிறது.
- Sep 08, 2025 15:17 IST
ஆதார் அட்டையை ஆவணமாக ஏற்க வேண்டும்: தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
ஆதார் அட்டையை ஆவணமாக ஏற்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆதாரை அடையாள ஆவணமாக பெற வேண்டும்; குடியுரிமைக்கான ஆவணமாக கருத முடியாது என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். ஆதாரை 12வது ஆவணமாக பெற வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் ஆணையிட்ட நிலையில், பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிரான வழக்கை செப்.15க்கு ஒத்திவைத்தது.
- Sep 08, 2025 15:07 IST
தமிழ்நாடு, கர்நாடகா, மராட்டியம், உ.பி, பீகார், காஷ்மீர் ஆகிய 6 மாநிலங்களில் 22 இடங்களில் என்ஐஏ சோதனை
தமிழ்நாடு, கர்நாடகா, மராட்டியம், உ.பி, பீகார், காஷ்மீர் ஆகிய 6 மாநிலங்களில் 22 இடங்களில் என்ஐஏ சோதனை நடைபெறுகிறது. லஷ்லர் இ தொய்பா தீவிரவாதி தமிழ்நாட்டில் கைது செய்யப்பட்ட நிலையில் வழக்கானது NIA-வுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
- Sep 08, 2025 14:26 IST
டெல்லி சென்ற செங்கோட்டையன் பா.ஜ.க தலைவர்களை சந்திக்கவில்லை
டெல்லியில் உள்ள செங்கோட்டையன் பா.ஜ.க தலைவர்களை சந்திக்கவில்லை. உள்துறை அமைச்சர் அமித்ஷா, பா.ஜ.க தேசியத் தலைவர் நட்டாவை சந்திக்க நேரம் கேட்கவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது.
- Sep 08, 2025 13:55 IST
சமூக வலைதளங்களுக்கு தடை - மக்கள் போராட்டம்
நேபாள நாட்டு தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தில் பதிவு செய்ய தவறியதற்காக பேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப் உள்ளிட்ட 26 முக்கிய சமூக வலைதளங்களுக்கு நேபாள அரசு தடை விதித்தது. தடைக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் வெடித்தது, பிரபல நடிகர்கள் மற்றும் கலைஞர்கள் நேபாள பொதுமக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
- Sep 08, 2025 13:42 IST
டி.ஜி.பி அலுவலகத்திற்கு வருபவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்
டி.ஜி.பி அலுவலகத்திற்கு வருபவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. டி.ஜி.பி அலுவலகத்திற்கு வருபவர்கள் தங்கள் விவரங்கள் தெளிவாக தெரியும்படி அடையாள அட்டை அணிய வேண்டும். பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்ட பகுதிகளில் மட்டுமே செல்ல வேண்டும். அனுமதி இல்லாமல் புகைப்படம், வீட்ஓ அல்லது ஒலிப்பதிவு செய்யக்கூடாது. ஆயுதங்கள், வெடிபொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட எந்த பொருட்களும் கொண்டுவர அனுமதி இல்லை
- Sep 08, 2025 13:38 IST
முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமாரின் தாயார் மறைவு; இ.பி.எஸ் இரங்கல்
திண்டுக்கல் மாவட்டக் கழகச் செயலாளர், மதுரை புறநகர் மாவட்டக் கழகச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர், முன்னாள் அமைச்சர் மற்றும் ஆர். பி. உதயகுமார் எம்.எல்.ஏ-வின் தாயாரும் அம்மா சேரிட்டபிள் டிரஸ்ட் பொருளாளருமான மீனாள் அம்மாள் uடல்நலக் குறைவால் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், மறைந்த செய்தி கேட்டு வருத்தமுற்றதாக அ.இ.அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.
மேலும், உதயகுமாருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் இரங்கலைத் தெரிவிப்பதாகவும், மீனாள் அம்மாள் அவர்களின் ஆத்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதாகவும் அவர் தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
- Sep 08, 2025 13:34 IST
அ.தி.மு.க ஐ.சி.யு-வில் அனுமதிக்கப்படும் - உதயநிதி ஸ்டாலின்
சென்னை சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை கட்டட திறப்பு விழாவில் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “இது அரசு நிகழ்ச்சி, அதனால் நான் அதிகம் அரசியல் பேச விரும்பவில்லை. அமைச்சர் மா. சுப்பிரமணியன் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுகளுக்கு தெளிவாக பதில் கூறினார். எதிர்க்கட்சித் தலைவர் தொடர்ந்து சுற்று பயணத்தில் இருக்கிறார். மக்களை சந்தித்துக் கொண்டிருக்கின்றார். 10 நாட்களுக்கு முன்பு, அவர் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிக்கொண்டிருக்கும்போது, அங்கே நோயாளிகளைக் கூட்டிக்கொண்டு வந்த ஆம்புலன்ஸ் வண்டியை நுழையவிடாமல், அதற்கு என்னவெல்லாம் தடங்கள் செய்ய முடியுமோ அதை தொடர்ந்து செய்து கொண்டிருந்தார். இதற்கு பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. எதிர்க்கட்சித் தலைவருக்கு நான் தெரிவித்துக்கொள்வது, ஆம்புலன்ஸ் வண்டிகளையெல்லாம் எல்லாம் நிறுத்த முயற்சி செய்து கொண்டிருக்கிறீர்கள், ஆனால் உங்களுக்கு ஒன்று புரியவில்லை. உங்களுடைய கட்சியே விரைவில் ஆம்புலன்ஸில் போகக்கூடிய நிலைமையை தமிழ்நாட்டு மக்கள் ஏற்படுத்துவார்கள். விரைவில் உங்களுடைய இயக்கம் ஐ.சி.யு-வில் அனுமதிக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். அப்போது, உங்களையும் காப்பாற்றுகின்ற பொறுப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்வார்” என்று கூறினார்.
- Sep 08, 2025 12:54 IST
அரசியல் சண்டைக்கு உச்சநீதிமன்றத்தை பயன்படுத்தாதீர் - தலைமை நீதிபதி எச்சரிக்கை
அவதூறு வழக்கில் தெலங்கானா முதல்வரை விடுவித்ததற்கு எதிராக அம்மாநில பாஜக பொதுச்செயலாளர் வெங்கடேஸ்வரலு தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் ரூ.10 லட்சம் அபராதத்துடன் மனுவை தள்ளுபடி செய்தது. அரசியல் சண்டைக்கு உச்சநீதிமன்றத்தை பயன்படுத்த கூடாது என மனுதாரருக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் எச்சரிக்கை விடுத்தார்
- Sep 08, 2025 12:38 IST
நாளை தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
சென்னை அண்ணா அறிவாவலயத்தில் நாளை தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தி.மு.க தலைவர் ஸ்டாலின் தலைமையில் காணொலி வாயிலாக இந்தக் கூட்டம் நடைபெற உள்ளது
- Sep 08, 2025 12:36 IST
தமிழ்நாடு டி.ஜி.பி. நியமன நடவடிக்கைகளை விரைந்து முடிக்கவும்; யு.பி.எஸ்.சி-க்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு
தமிழ்நாடு டி.ஜி.பி. நியமன நடவடிக்கைகளை விரைந்து முடிக்க யு.பி.எஸ்.சி-க்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. யு.பி.எஸ்.சி பரிந்துரைந்த பின்னர் தமிழ்நாடு அரசு நியமனத்தை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொறுப்பு டி.ஜி.பி.,யாக வெங்கட்ராமன் நியமிக்கப்பட்டதற்கு எதிராக பீப்பிள் வாட்ச் அமைப்பின் ஹென்றி திபேன் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது
- Sep 08, 2025 12:26 IST
கேன் வாட்டர் ஆலைகளை ஆய்வு செய்ய உத்தரவு - உணவு பாதுகாப்புத்துறை
சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் குடிநீர் ஆலைகளை பெருநகர குடிநீர் வழங்கல் துறை குழுவாக இணைந்து ஆய்வு செய்ய உணவு பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது. கேன் வாட்டரில் நிறுவனத்தின் பெயர், தயாரிப்பு தேதி, காலாவதி தேதி, உள்ளிட்ட அனைத்து விவரங்களும் இடம்பெற வேண்டும். விதிகளை பின்பற்றாத கடைகளின் உரிமையாளர்களுக்கு ரூ.5000 அபராதம் விதிக்கப்படும் என உணவு பாதுகாப்புத்துறை எச்சரித்துள்ளது
- Sep 08, 2025 12:17 IST
210 தொகுதிகளில் அ.தி.மு.க வெற்றி பெறும் – எடப்பாடி பழனிசாமி
2026 சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க கூட்டணி 210 தொகுதிகளில் வெற்றி பெறும். தங்கள் கட்சி ஆட்சி அமைக்க வேண்டுமென சிலர் ஆசைப்படலாம், அது அவர்களுடைய சொந்த விருப்பம். தமிழகத்தில் அ.தி.மு.க, தி.மு.க மட்டுமே பெரிய கட்சி, 2 கட்சிகளுக்கு இடையே தான் போட்டி நிலவுகிறது என ஆங்கில ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்
- Sep 08, 2025 11:56 IST
தலைமைச் செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னை தலைமைச் செயலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாயுடன் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
- Sep 08, 2025 11:53 IST
குட் பேட் அக்லி படத்தில் இளையராஜா பாடலை பயன்படுத்த தடை
அஜித் நடித்துள்ள குட் பேட் அக்லி படத்தில் இளையராஜா பாடலை பயன்படுத்த இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
- Sep 08, 2025 11:26 IST
எடப்பாடியின் கனவு வெறும் கனவாகதான் முடியும்: கனிமொழி
சென்னை: எடப்பாடியின் கனவு வெறும் கனவாகதான் முடியும்
அதிமுக கூட்டணி 210 தொகுதிகளில் வெல்லும் என்ற இபிஎஸ் பேச்சு குறித்த கேள்விக்கு எம்.பி. கனிமொழி பதில்
- Sep 08, 2025 11:22 IST
என் மீதான நடவடிக்கை எதிர்பார்த்த ஒன்றுதான்: மல்லை சத்யா
என் மீதான நடவடிக்கை எதிர்பார்த்த ஒன்றுதான்; தனது மகன் குறித்து வைகோ சிந்திக்கிறார். ஒரு தலைவராக ம.தி.மு.மு.க பொதுச்செயலாளர் வைகோ தோற்றுவிட்டார்; ஜனநாயகப் படுகொலை செய்துள்ளார்.
ம.தி.மு.க.வில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டது குறித்து மல்லை சத்யா விளக்கம்
- Sep 08, 2025 11:20 IST
பா.ஜ.க.வில் இருந்து சாமிநாதன் விலகல்
கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த பாரதிய ஜனதா கட்சியிலிருந்து இன்று முதல் முழுமையாக விலகிக் கொள்கிறேன். புதுச்சேரி மாநில வளர்ச்சிக்காக தொடர்ந்து பாடுபடுவேன் என்றும், ஊழலற்ற நேர்மையான புதியவர்களைக் கொண்டு புதுய அரசு அமைய பாடுபடுவேன்.
வி.எஸ். சாமினாதனின் அதிகாரப்பூர்வ அறிக்கை.
- Sep 08, 2025 10:31 IST
தமிழ்நாட்டில் இரண்டு கட்சிகளுக்கு இடையேதான் போட்டி: இ.பி.எஸ்
தமிழ்நாட்டில் இரண்டு கட்சிகளுக்கு இடையேதான் போட்டி; அது எந்தக் கட்சி என்பது நாட்டு மக்களுக்கு நன்றாகத் தெரியும்.
2026 தேர்தலில் எங்களுக்கும் தி.மு.கவிற்கும் தான் போட்டி என சில கட்சிகள் கூறுகிறார்களே, ஆனால் அப்படி உள்ளதா அல்லது கட்டமைக்கப்படுகிறதா என்ற கேள்விகளுக்கு, எடப்பாடி பழனிசாமி இவ்வாறு பதிலளித்துள்ளார்.
- Sep 08, 2025 10:31 IST
போக்குவரத்து நெரிசல்
சென்னை கொளத்தூரில் மாநகர பேருந்து சாலையின் சென்டர் மீடியத்தில் மோதி விபத்து. விபத்தால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. விபத்தில் சிக்கிய பேருந்தை அப்புறப்படுத்தும் பணியில் போக்குவரத்து போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
- Sep 08, 2025 10:24 IST
மல்லை சத்யா நிரந்தரமாக நீக்கம்
ம.தி.மு.க கட்சியில் இருந்து மல்லை சத்யா நிரந்தரமாக நீக்கப்பட்டார். கட்சிக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கூறி ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ இந்த நடவடிக்கை எடுத்துள்ளார்.
- Sep 08, 2025 09:53 IST
தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்து ரூ.79,760க்கு விற்பனை
சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்து ரூ.79,760க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.35 குறைந்து ரூ.9,970க்கு விற்பனையாகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.1 குறைந்து ரூ.137க்கு விற்பனை செய்யப்படுகிறது.
- Sep 08, 2025 09:33 IST
புதுச்சேரி பா.ஜ.க. முன்னாள் தலைவர் கட்சியிலிருந்து விலகல்
புதுச்சேரி மாநில பாஜக முன்னாள் தலைவர் சாமிநாதன், அக்கட்சியில் இருந்து விலகினார். புதுச்சேரி மாநில வளர்ச்சிக்கும், மக்களுக்கும் பாடுபடுவேன் என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.
- Sep 08, 2025 09:32 IST
210 இடங்களில் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும்: இ.பி.எஸ்.
ஆளுங்கட்சியான தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. ஆகிய 2 பெரிய கட்சிகளுக்கு இடையேதான் போட்டி இருக்கும் என்று அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார். 2026-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் 210 இடங்களில் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்று, பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்றார். 2026 தேர்தலில் தி.மு.க. - த.வெ.க. இடையேதான் போட்டி இருக்கும் என விஜய் பேசியது குறித்த கேள்விக்கு இவ்வாறு அவர் பதிலளித்தார்.
- Sep 08, 2025 09:08 IST
அக்கப்போரான கேள்விகளை கேட்கிறீர்களே: ஸ்டாலின் பதில்
அ.தி.மு.க. மூத்த தலைவர் செங்கோட்டையன் பதவி பறிப்பு குறித்து செய்தியாளரின் கேள்விக்கு, ஆக்கப்பூர்வமான கருத்துகளை பேசிக் கொண்டிருக்கும்போது இந்த அக்கப்போரான கேள்விகளை கேட்கிறீர்களே என கடிந்து கொண்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
- Sep 08, 2025 08:55 IST
33 ஒப்பந்தங்கள் மூல ரூ.15,516 கோடி முதலீடுகள் ஈர்ப்பு: ஸ்டாலின்
ஜெர்மனி, இங்கிலாந்து பயணத்தின்போது 33 ஒப்பந்தங்கள் மூலம் தமிழ்நாட்டுக்கு மொத்தம் ரூ.15 ஆயிரத்து 516 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டன. இதன் மூலம் 17 ஆயிரத்து 613 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
- Sep 08, 2025 08:48 IST
வெளிநாட்டு பயணம் நிறைவு: சென்னை திரும்பினார் ஸ்டாலின்
தொழில் முதலீடுகள் ஈர்ப்பு, அயலக தமிழர்களுடன் சந்திப்பு என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ஐரோப்பிய பயணத்தை முடித்துக் கொண்டு லண்டனில் இருந்து சென்னை திரும்பினார். துபாய் வழியாக அவர் இன்று காலை 8.40 மணியளவில் சென்னை விமானம் நிலையத்தை வந்தடைந்தார். விமான நிலைய முக்கிய பிரமுகர்கள் வாயில் அருகே அவரை அமைச்சர்களும், அரசு அதிகாரிகளும் வரவேற்றனர். மேலும் அவருக்கு தி.மு.க. சார்பிலும் உற்சாகமாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
- Sep 08, 2025 08:19 IST
மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு குறைப்பு
மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்காக திறக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. டெல்டா பாசனத்துக்காக திறக்கப்படும் நீரின் அளவு 22,500 கன அடியில் இருந்து 18,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.
- Sep 08, 2025 08:18 IST
நாளை எந்த முக்கிய அறிவிப்பும் இல்லை: செங்கோட்டையன்
ஹரித்வார் செல்கிறேன், ராமரை தரிசனம் செய்துவிட்டு திரும்ப உள்ளேன் என அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். மேலும் அ.தி.மு.க. ஒன்றிணைய வேண்டும், கட்சி வளர வேண்டும் எனவும் எனது பயணத்தில் பாஜக தலைவர்கள் யாரையும் சந்திக்கப்போவது இல்லை, நாளை எந்த முக்கிய அறிவிப்பும் இல்லை எனவும் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
- Sep 08, 2025 07:43 IST
தமிழ்நாட்டில் இன்று 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டில் இன்று திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை ஆகிய 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு எனவும் திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை ஆகிய 6 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு எனவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
- Sep 08, 2025 07:29 IST
சென்னையில் இன்று (செப்.8) மின் தடை ஏற்படும் இடங்கள்
சென்னையில் இன்று காலை 9 முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக அடையாறு ஸ்ரீனிவாச மூர்த்தி அவென்யூ, எல்பி சாலை, திருவேங்கடம் தெரு, கேபி நகர் 1வது குறுக்குத் தெரு, அண்ணா அவென்யூ, லோகநாத செட்டி கார்டன், பால்ராம் சாலை, கன்னியம்மா கார்டன், கெனால் பேங்க் சாலை, காந்தி நகர், பிரதான சாலை, கெனால் குறுக்கு சாலை உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Sep 08, 2025 07:27 IST
சென்னை-கொல்லம் விரைவு ரயிலில் எல்.எச்.பி. பெட்டி இணைப்பு
சென்னை எழும்பூரில் இருந்து கொல்லம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் (வண்டி எண்.16101), நவம்பர் 18-ந் தேதி முதலும், கொல்லத்தில் இருந்து சென்னை எழும்பூர் வரும் எக்ஸ்பிரஸ் ரயிலில் (16102), நவம்பர் 19-ந்தேதி முதலும் எல்.எச்.பி (இலகுரக பெட்டிகள்) இணைத்து இயக்கப்பட உள்ளன. மேலும், எஞ்சிய எக்ஸ்பிரஸ் ரயில்களில் விரைவில் எல்.எச்.பி. பெட்டிகள் இணைத்து இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
- Sep 08, 2025 07:25 IST
கிரகணம் நிறைவு: திருப்பதி ஏழுமலையான் கோயில் நடை திறப்பு
சந்திர கிரகணத்தால் திருப்பதி ஏழுமலையான் கோவில் 11½ மணி நேரம் மூடப்பட்டது. வானியல் நிகழ்வான சந்திர கிரகணம் நேற்று இரவு 9.50 மணியில் இருந்து அதிகாலை 1.31 மணி வரை நிகழ்ந்தது. நேற்று மாலை 3.30 மணிக்கு பாரம்பரிய முறைப்படி மூடப்பட்டன. இன்று அதிகாலை 3 மணி அளவில் நடை திறக்கப்பட்டு, கோவில் வளாகம் முழுவதும் தூய தண்ணீரால் சுத்தம் செய்யப்பட்டு பூஜைகள் தொடர்கிறது.
- Sep 08, 2025 07:24 IST
இன்று காலை 10 மணி வரை 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
காலை 10 மணி வரை 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன்படி, செங்கல்பட்டு, திருப்பத்தூர், வேலூர், தென்காசி, தூத்துக்குடி மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- Sep 08, 2025 07:23 IST
தாம்பரம் அருகே பைக் மாடு மீது மோதியதில் இருவர் உயிரிழப்பு
தாம்பரம் அடுத்த படப்பையில் பைக்கில் மேம்பாலத்தில் ஏறும்போது குறுக்கே வந்த மாடு மீது மோதியதில், பைக்கில் வந்த இருவரும் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தனர். அண்ணா நகரைச் சேர்ந்த நவீன் (19) மற்றும் அவரது தோழி அபிமணி இருவரும் தூக்கி வீசப்பட்டதில், எதிரே வந்த கார் மோதி பலத்த காயமடைந்து அங்கேயே உயிரிழந்தனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.