சென்னை பெருநகரக் காவல் துறை இந்தியாவிலேயே முதல் முறையாக சிறப்பு ட்ரோன் காவல் பிரிவை உருவாக்கியுள்ளது. தமிழ்நாடு டி.ஜி.பி சைலேந்திரபாபு சிறப்பு ட்ரோன் காவல் பிரிவை சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் முன்னிலையில் வியாழக்கிழமை தொடங்கி வைத்தார்.
இந்த சிறப்பு ட்ரோன் காவல் பிரிவு சென்னை அடையாறில் இருந்து இயங்கும். அடையாறு ஆவின் பார்லருக்கு எதிர்புறம் இரண்டு பெரிய கண்டெய்னர்களைக் கொண்டு ட்ரோன் சிறப்பு காவல் பிரிவுக்கு அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது.
ஒரு நடமாடும் ட்ரோன் காவல் பிரிவுக்கு கண்டெய்னர் டிரக்கில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நடமாடும் ட்ரோன் காவல் பிரிவு வாகனம் சென்னை மாநகரம் முழுவதும் பயணித்து ட்ரோன்களைப் பறக்கவிட்டு மக்கள் கூட்டத்தையும் வாகன நெரிசல்களையும் கண்காணிக்கும்.
தொழில்நுட்பக் குழு கீழ் தளத்தில் இருந்து அமர்ந்து செயல்படும், ட்ரோன்களை மேல் தளத்தில் இருந்து பறக்க விடுவார்கள். மேலே, இருந்து ட்ரோன்களைப் பறக்க விடும் விதமாக வடிவமைத்துள்ளார்கள்.
சிறப்பு ட்ரோன் காவல் பிரிவு தொடக்க நிகழ்ச்சியில் பேசிய டி.ஜி.பி சைலேந்திர பாபு, “முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நம்முடைய காவல் படையை கூர்மையாக கவனித்துக் கொண்டிருக்கிறார். சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், ஒரு பிடெக் பட்டதாரி. அவர் தனது தொலைநோக்குப் பார்வையின் மூலம், மாநகரில் குற்றம், சட்டம் ஒழுங்கு விவகாரங்களில் இந்த தொழில்நுட்பத்தை உள்புகுத்தியுள்ளார்.” என்று கூறினார்.
இதற்கு முன்பு 4 ட்ரோன்களை வைத்திருந்த மாநகர காவல்துறை, ரூ.3.60 கோடி செலவில் 9 புதிய ட்ரோன்களை வாங்கியுள்ளது. இந்த பிரிவில் 6 விரைவாக செயல்படக் கூடிய பேலோட் ட்ரோன்கள், இரண்டு நீண்ட தூர கண்காணிப்பு ட்ரோன்கள் மற்றும் ஒரு உயிர்காக்கும் ட்ரோன் இருக்கிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"