Madhuvanti Arun Tamil News: பிரபல நடிகர் ஒய்ஜி மகேந்திரனின் மகளான மதுவந்தி பாரதிய ஜனதா கட்சியின் செயற்குழு உறுப்பினர்களில் ஒருவராக இருக்கிறார். இவர் சென்னை ஆழ்வார்பேட்டை வீனஸ் காலனி 2-வது குறுக்கு தெருவில் உள்ள ஆசியானா என்ற அப்பார்ட்மென்ட்டில் கடந்த சில வருடங்களாக வசித்து வருகிறார்.
இந்நிலையில், மதுவந்தியின் வசித்து வரும் வீட்டை சமீபத்தில் ஒரு ஃபைனான்ஸ் நிறுவனம் முடக்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வீட்டை வாங்குவதற்காக மதுவந்தி கடந்த 2016-ல் இந்துஜா லைலண்ட் என்ற பைனான்ஸ் நிறுவனத்தில் ஒரு கோடி ரூபாய் கடனாக பெற்றார் எனவும், சில தவணைகள் மட்டுமே வட்டி கட்டிய அவர் தொடர்ந்து வட்டி செலுத்தவில்லை என்றும் சொல்லப்படுகிறது.
மதுவந்திக்கு வட்டிப்பணத்தை திருப்பி செலுத்த பல மாதங்கள் அவகாசங்கள் கொடுக்கப்பட்டதாகவும், ஆனால் அவர் பணம் எதுவும் கட்டாமல் இழுத்தடித்து வந்ததாகவும் பைனான்ஸ் நிறுவன அதிகாரிகள் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வட்டிப்பணத்துடன் அசலையும் சேர்த்து ரூ1,21,30,867 பணம் கட்ட சொல்லி வங்கி அதிகாரிகள் அனுப்பிய நோட்டீசுக்கும் அவர் முறையான பதில் அளிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், இந்துஜா லைலண்ட் பைனான்ஸ் நிறுவனம் சென்னை அல்லிகுளம் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளது. வழக்கை விசாரித்த நீதிமன்றமும் மதுவந்தியின் வீட்டிற்கு சீல் வைத்து வீட்டை பைனான்ஸ் நிறுவனத்திடமே ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், மதுவந்தி தரப்பில் பேசியவர்கள், 'மதுவந்தியின் வீட்டை அதிகாரிகள் சீல் வைக்கவில்லை என்றும், இது தவறான தகவல், அப்படியெல்லாம் எதுவும் நடக்கவில்லை' என்றும் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.