ஏழு மடங்கு பெரியதாக மாறும் சென்னை மாநகரம்: அரசாணை வெளியீடு!

புதிய திட்டத்தின்மூலம் சென்னை பெருநகரம் 8,878 சதுர கி.மீட்டராக விரிவடையும். இதன்மூலம் சென்னை பெருநகரம் 7 மடங்கு பெரியதாகிறது.

சென்னை பெருநகர குழுமத்தின் எல்லை விரிவாக்கத்திற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்துடன் 3 மாவட்டங்களை சேர்ந்த சில பகுதிகளை இணைப்பது தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் அரக்கோணம் பகுதிகளை சென்னை பெருநகரத்துடன் உள்ளடக்கி 8878 ச.கி.மீ அளவிற்கு விரிவாக்கம் செய்யப்படுகிறது. காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களின் குறிப்பிட்ட சில பகுதிகள் சென்னை பெருநகர குழுமத்தின் எல்லைக்குள் வருகிறது வேலூர் மாவட்டத்தின் அரக்கோணம், நெமிலி தாலுக்காக்கள் சென்னை பெருநகர குழுமத்திற்குள் வருகிறது.

சென்னையில் தொடர்ந்து மக்கள்தொகை பெருக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் பெருநகர குழுமம் கடந்த 2008ஆம் ஆண்டு இரண்டாவது மிகப்பெரிய திட்டத்தை வெளியிட்டது. அதன்படி வருகிற 2026ஆம் ஆண்டில் மக்கள்தொகை 1 கோடியே 25 லட்சம் ஆக அதிகரிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, சென்னை மாநகரின் வளர்ச்சியைச் சமநிலைப்படுத்தவும், மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் கட்டமைப்பை உருவாக்கவும் புறநகர் பகுதிகள் உருவாக்கப்பட்டன.

குறிப்பாக ஸ்ரீபெரும்புதூர், கும்மிடிப்பூண்டி பகுதிகளில் பெருமளவில் தொழிற்சாலைகள் உள்ளன. அதனால் அங்கும் மக்கள் குடிபெயர்ந்து வருகின்றனர். இதுபோன்ற காரணங்களால் சென்னையின் புறநகர் பகுதியும் மிக அதிவேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. மேலும் பல தொழிற்சாலைகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் அங்கு ஒழுங்கற்ற முறையில் உருவாகும் கட்டமைப்புகளைச் சீரமைக்க வேண்டிய நிலை பெருநகர வளர்ச்சி குழுமத்துக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சென்னை பெருநகரின் எல்லையை விரிவுபடுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. சென்னையைப் பெருநகரமாக்க திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய இரண்டு மாவட்டங்கள் இணைக்கப்படுகின்றன. வேலூர் மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் தாலுகாவும் சேர்க்கப்படுகிறது.

சென்னை பெருநகரம் தற்போது 1,189 சதுர கிலோமீட்டர் பரப்பளவு உள்ளது. இப்போது அறிவிக்கப்பட்டுள்ள புதிய திட்டத்தின்மூலம் சென்னை பெருநகரம் 8,878 சதுர கி.மீட்டராக விரிவடையும். இதன்மூலம் சென்னை பெருநகரம் 7 மடங்கு பெரியதாகிறது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close