சென்னை மாவட்ட ஆட்சியர் விஜயராணி - காங்கிரஸ் எம்பி விஷ்ணுபிரசாத் சந்திப்பு தொடர்பாக சர்ச்சைகள் எழுந்தன. இதில் எம்.பியை அவமரியாதை செய்யும் நோக்கத்தில் ஆட்சியர் நடந்து கொள்ளவில்லை என கலெக்டர் அலுவலக ஊழியர்கள் கூறுகின்றனர்.
காங்கிரஸ் கட்சியின் ஆரணி மக்களவைத் தொகுதி எம்.பி டாக்டர் எம்.கே. விஷ்ணுபிரசாத். இவருடைய தந்தை கிருஷ்ணசாமி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராகவும் எம்.பி.யாகவும் இருந்துள்ளார். காங்கிரஸ் எம்.பி விஷ்ணுபிரசாத் கடந்த வாரம், சென்னை மாவட்ட ஆட்சியர் விஜயராணியின் அலுவலகத்துக்கு சென்றார். இந்த சந்திப்பு தொடர்பாகத்தான் சர்ச்சைகள் எழுந்தன.
சென்னை மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் உள்ள ஒரு பெரிய நிறுவனத்தின் நிலப் பிரச்னை தொடர்பாக நீதிமன்ற வழக்கும் மாவட்ட அதிகாரிகள் விசாரணையும் நடந்துகொண்டிருக்கிறது. இந்த பிரச்னை தொடர்பாகத்தான் விஷ்ணு பிரசாத் எம்.பி சென்னை மாவட்ட ஆட்சியர் விஜயராணியை சந்திக்க சென்றார்.
இதுதொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை சேர்ந்தவர்கள் கூறுகையில், “ஒரு பிரச்னை தொடர்பாக அன்றைக்கு பலர் மாவட்ட ஆட்சியரைப் பார்க்க வந்தார்கள். அவர்களுடன் டாக்டர் விஷ்ணு பிரசாத்தும் வந்தார். சென்னை எம்.பியாக இருந்திருந்தால் அவரை ஆட்சியரின் உதவியாளர்களுக்கு அடையாளம் தெரிந்து இருக்கும். இவர் ஆரணி மக்களவைத் தொகுதி எம்.பி என்பதால் அவர்களால் அடையாளம் காணமுடியவில்லை. அதுமட்டுமில்லாமல், அவர் முதலில் தன்னை எம்.பி என்று கூறாமல், வழக்கறிஞர் என்று கூறியதால், ஆட்சியரின் உதவியாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் அமர வைத்தனர். அப்போது, சென்னை மாவட்ட ஆட்சியர் விஜயராணி, சேம்பர் அறையில் 70களில் எழுதப்பட்ட முக்கியமான கோப்புகளை பார்த்துக்கொண்டிருந்தார்.
வழக்கறிஞர்களுடன் அறையில் காத்திருந்த விஷ்ணு பிரசாத், அங்கிருந்து கலெக்டர் சேம்பர் அறைக்கு ஆட்சியரைப் பார்க்க வந்து தனது விசிட்டிங் கார்டை கொடுத்தார். அப்போது, கலெக்டர் முக்கியமான கோப்புகளைப் பார்த்துக்கொண்டிருந்ததால் கார்டைப் பார்க்காமல் இருந்தார். பின்னர், விஷ்ணு பிரசாத் தான் ஆரணி மக்களவைத் தொகுதி எம்.பி என்று சொன்ன பிறகு, ஆட்சியர் விஜயராணி உடனடியாக அவரை வரவேற்றார். நீங்கள் முதலிலேயே எம்.பி என்று சொல்லி இருக்கலாமே, நீங்கள் மக்கள் பிரதிநிதி, வந்திருப்பதை முதலிலேயே சொல்லியிருக்கலாமே சார் என்று ஆட்சியர் தெரிவித்தார். விஷ்ணு பிரசாத் எம்.பி.யும் புரிந்துகொண்டு வந்த விஷயத்தை பேசிவிட்டு சென்றார்.
சென்னையில் அனைத்து மக்கள் பிரதிநிதிகளுக்கும் உரிய மரியாதை கொடுத்து ஆட்சியர் விஜயராணி பணியாற்றி வருகிறார். எனவே, விஷ்ணுபிரசாத் எம்.பியை அவமதிக்கும் நோக்கம் அவருக்கு கிடையாது” என்கிறார்கள் கலெக்டர் அலுவலகத்தை சேர்ந்தவர்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"