சென்னை கோடம்பாக்கம் பகுதியில், போலீஸ் ஹெட் கான்ஸ்டபிளை, நான்கு இளைஞர்கள் பயங்கரமாக தாக்கிய சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம் பகுதிகளில் இரவுநேரத்தில் திருநங்கைகள் உலாவருவது வழக்கம். இதனிடையே, கடந்த 13ம் தேதி இரவு, கோடம்பாக்கம் பகுதியில் காரில் வந்த 4 பேர், திருநங்கையிடம் பேசிக்கொண்டிருந்தனர். அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பாண்டி பஜார் போலீஸ் ஸ்டேசன் ஹெட் கான்ஸ்டபிள் கார்த்திகேயன், அவர்களை அங்கிருந்து செல்லுமாறு கூறினார். அதை அவர்கள் காதில் வாங்கிக்கொள்ளததால், அவர்களை அடிக்க லத்தியை ஓங்கினார். சுதாரித்த அவர்கள், கார்த்திகேயனின் லத்தியை பிடுங்கி, அவரை கீழே தள்ளிவிட்டு லத்தியால் அடித்தனர். காலால் எட்டி உதைத்தனர். இந்த காட்சிகள், அருகிலிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. இந்த வீடியோ, தற்போது வைரலாக பரவி வருகிறது.
நிலைமை தீவிரமாவதை உணர்ந்த கார்த்திகேயன், உடனே சக போலீசை உதவிக்கு கூப்பிட்டார். அவர் உடனே சம்பவ இடத்திற்கு வந்தநிலையில், அந்த நால்வரும் அந்த இடத்தை விட்டு தப்பிச்சென்றனர். கார்த்திகேயன், உடனடியாக சிகிச்சைக்காக ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுதொடர்பாக, போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவந்தனர்.
சிசிடிவி காட்சிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் அசார், முகமது நவ்ஜாத், முகம்மது ரிஜ்வான் மற்றும் சுலைமான் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் கல்லூரி மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்கள் விசாரைணக்காக தற்போது போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.