சென்னையில் சமீப காலமாக நாய்கள் குழந்தைகளை கடிக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், சென்னையில் நாய்கள் குறித்து ஒரு மாதத்திற்குள் கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று கூறியுள்ள சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், நாய்களை நாய் என்று சொல்லாமல், குழந்தை என்று சொல்கிறீாகள். ஆனால் அது குழந்தைகளை கடிப்பது நியாயமா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
சமீபகாலமாக சென்னையில், வளர்ப்பு நாய்கள் குழந்தைகளை கடிப்பது பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதில் குறிப்பாக நுங்கம்பாக்கம் பகுதியில் வளர்ப்பு நாய் ஒன்று சிறுமியை கடித்து குதறியதில், படுகாயமடைந்த சிறுமிக்கு, பிளாஸ்டிக் சர்ஜரி செய்யும் நிலை ஏற்பட்டது. அதேபோல் நேற்று முன்தினம், சென்னை புழல் லட்சுமிபுரம் பகுதியில், வீட்டில் இருந்த இரண்டு வளர்ப்பு நாய்கள் அப்பகுதியில் ஒரு சிறுவனை கடித்தது. இதில் பலத்த காயமடைந்த சிறுவன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் காரணமாக சென்னையில் நாய் வளர்ப்பவர்களுக்கு கடுமையான கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என்று பொதுமக்கள் தரப்பில் கூறப்பட்டு வரும் நிலையில், தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத்துறை சார்பில், சென்னை மெரினா கடற்கரை பகுதியில் உள்ள கலங்கரை விளக்கம் பகுதியில், வெறிநாய்கடி தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் இந்த முகாமை தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், வளர்ப்பு பிராணிகளை வளர்க்கும்போதும், அதனால் பிறருக்கு பாதகம் ஏற்படும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நாயை நாய் என்று சொல்லாமல், குழந்தை என்று சொல்கிறீர்கள். நம் குழந்தையை இன்னொரு குழந்தையை கடிக்க விடுவோமா? அப்படி கடித்தால் அவர்களின் பெற்றோர்கள் சும்மா விடுவார்களா? நாய் வளர்ப்பவர்கள் இதனை சிந்தித்து வளர்க்க வேண்டும். இன்று 150 நாய்களுக்கு வெறிநாய் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இந்தியாவில் தமிழ்நாட்டில் தான் தினமும் 50 முதல் 66 நாய்களுக்கு கருத்தடை பணிகளை செய்துகொண்டு இருக்கிறோம். தேர்தல் நடத்தை விதிகள் முடிந்த பிறகு, நாய்கள் பிரச்சனை குறித்து வல்லுனர்களிடம் ஆலோசனை செய்து தீர்வு காணப்படும்.நாய்கள் குறித்து தொடர்ந்து கவனித்து வருகிறோம். செல்லப்பிராணிகளை வளர்ப்பவர்கள் அதற்காக லைசன்ஸ் வாங்குவது கிடையாது. நாய்களை வெளியில் எடுத்து செல்லக்கூடாது என்று பலமுறை வலியுறுத்தியும் யாரும் அதை கடைபிடிப்பதில்லை. செல்லப்பிராணிகளை வளர்ப்பவர்களுக்கு பொறுப்பும், மற்றவர்களுக்கு பாதிப்பு இருக்க கூடாது என்ற எண்ணமும் இருக்க வேண்டும்.
சென்னை மாநகராட்சி முழுவதும் உள்ள நாய்கள் எண்ணிக்கை குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. நாய்கடிக்கான தடுப்பூசி ஆண்டுக்கு 20 ஆயிரம் என்று பதிவாகியுள்ளது. இது மனிதன் விலங்கு மோதல் என்பதை மறுக்க முடியாது. சில நாய்களுக்கு சீற்றம் கொண்ட தன்மை உள்ளது. சில நாய் இனங்களின் சீற்றத்தன்மை குறித்த பெயரோடு சொன்னால் விலங்கின ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். நாய் கடிகாது என்பது தவறான கருத்து. நாய் அதை வளர்ப்பவர்களையோ அல்லது வீட்டில் இருப்பவர்களையோ கடிக்காமல் இருக்கலாம். அது மற்றவர்களை கடிக்கக்கூடும் என்று ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.